தமிழ் சினிமாவுக்கு இந்தாண்டு மிக மோசமான ஆண்டாகவே அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சினிமாவின் வளர்ச்சி வணிக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன.
2025-ல் இதுவரை 282 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 10 சதவீத திரைப்படங்களே வணிக வெற்றியைப் பெற்றதாகவும் 125-க்கும் குறைவான படங்களே ஓடிடியிலும் வெளியாகியுள்ளதாம்.
சராசரியாக வாரம் 5 திரைப்படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. இது திரைத்துறைக்கு ஆரோக்கியமாக அமைந்தாலும் வியாபார ரீதியாக பின்னடைவுகளைச் சந்தித்திருப்பது கவலையளிக்கும் விஷயமாகவே இருக்கிறது.
முக்கியமாக, திரையரங்குகளில் வெளியான 280க்கும் மேற்பட்ட படங்களில் 250 படங்கள் நஷ்டத்தையே சந்திருக்கும் என பிரபல திரையரங்க உரிமையாளரான திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதில், குறைத்தது ரூ. 4 கோடியில் ஒவ்வொரு திரைப்படங்களும் உருவாகியிருந்தாலும் கிட்டத்தட்ட ரூ. 800க்கு கோடிக்கும் மேல் நஷ்டமே ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும், பெரிய பட்ஜெட்களில் உருவான தக் லைஃப், ரெட்ரோ, கூலி, விடாமுயற்சி ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வணிகத்தை அடையவில்லை. இதனால், இந்தத் திரைப்படங்களால் விநியோகிஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரிதாக லாபமும் கிடைக்கவில்லை. குட் பேட் அக்லி, கூலி ஆகியவை சுமாரான வணிக வெற்றியை அடைந்தன.
அதேநேரம், டூரிஸ்ட் பேமிலி, குடும்பஸ்தன், தலைவன் தலைவி, ஆண்பாவம் பொல்லாதது என சிறிய திரைப்படங்கள் நல்ல வசூலைப் பெற்று தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபகரமான திரைப்படங்களாகவே அமைந்திருக்கின்றன.
தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான திரைகளில் 30 சதவீதம் மட்டுமே தனித்திரையரங்குகள் எனக் கூறப்படுகிறது. இதில், பெரும்பாலான திரையரங்கங்கள் சரியான வணிகம் இல்லாததையும் பராமரிப்பு செலவையும் காரணமாக வைத்து மூடப்பட்டு வருகின்றன.
முன்பெல்லாம், திரையரங்குகளில் வார இறுதிகளில் 80% இருக்கைகள் நிரம்பும் நிலை இருந்தது. ஆனால், தற்போது 30 - 40 % இருக்கைகள் நிரம்பினாலே அதிகமென திருப்பூர் சுப்ரமணியன் கூறுகிறார். படம் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் திரையரங்கம் வருகிறார்கள்; ஒன்றிரண்டு பேர் வந்து டிக்கெட் கேட்டால் எப்படி தொழில் நடத்துவது என்றும் கேள்வியெழுப்புகிறார்.
இந்தச் சூழலில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களும் படங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. காரணம், நடிகர்களின் சம்பளம், படப்பிடிப்பு செலவு ஆகியவை அண்மை காலமாக கடுமையாக அதிகரித்திருக்கிறதாம்.
இவ்வளவு செலவு செய்து திரைப்படங்களை உருவாக்கினாலும் ஓடிடி மற்றும் திரையரங்க வெளியீடுகளில் நல்ல வணிகத்தைச் செய்ய முடியாமல் பலரும் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால் இனி பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் நட்சத்திர நடிகர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்து படத்தை எடுக்க வேண்டுமா? என்றே எண்ணுவார்கள் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.