ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்தாரா ஜெயலலிதா? எந்தப் படத்தில்?

ரஜினிக்கு ஜோடியாக பில்லா படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ஜெயலலிதா.
போயஸ் இல்லத்தில் ரஜினி
போயஸ் இல்லத்தில் ரஜினி
Published on
Updated on
2 min read

சிறந்த நடிகையாக திரையுலகில் கொடிகட்டிப் பறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்ட தகவல் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தகவல் வெளியானது, ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவின்போதுதான்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா, போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அப்போது, ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வந்து, அவரது திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த். அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தனை காலத்தில், இந்த இல்லத்துக்கு நான் நான்காவது முறையாக வந்திருக்கிறேன். ராகவேந்திரா திருமண மண்டப திறப்பு விழா அழைப்பிதழ் கொடுக்க ஒரு முறையும் என் மகள் திருமண அழைப்பிதழ் கொடுக்க ஒரு முறையும் வந்துள்ளேன்.

ஆனால், நான் முதல் முறை இந்த இல்லத்துக்கு வந்தது மிகவும் ஆச்சரியமான ஒன்று. 1977ஆம் ஆண்டு ஜெயலலிதா என்னை சந்திக்க வேண்டும் என்று அழைத்தார். அதற்காக வந்தேன். இரண்டு பேரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அப்படத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

ரஜினியின் இந்தப் பேச்சு மிகவும் ஆச்சரியத்தையும் ஜெயலலிதா மறுத்தது எந்தப் படம் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கேள்விக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் மூலம் பதில் கிடைத்திருக்கிறது.

அதாவது, பில்லா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக, ஜெயலலிதாவை நடிக்க வைக்க இயக்குநர் பாலாஜி நினைத்திருக்கிறார். இது பற்றி ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு, அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டதால் மீண்டும் நடிக்க ஆர்வமில்லை என்று கூறி மறுத்துவிட்டிருக்கிறார்.

அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால், அதில் ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜெயலலிதாதான் என்பது யாருக்குமே தெரியாது.

கடிதம் எழுதப்பட்டதன் பின்னணி?

தனக்கு ஏதோ திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருப்பதைப் பார்த்து அதற்கு ஜெயலலிதா பதிலளித்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில்தான், இயக்குநர் பாலாஜி, பில்லா திரைப்படத்தில் நடிக்க அழைப்பு விடுத்திருந்தார். பாலாஜி எவ்வளவு பெரிய இயக்குநர் என்பது அனைவருக்குமே தெரியும். அதில் ரஜினிக்கு ஜோடியாக வந்த அழைப்பையே நான் நிராகரித்து விட்டேன். இதுபோன்ற பல நல்ல வாய்ப்புகளைக் கூட வேண்டாம் என்று நிராகரித்தது நான்தான் என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதம் மூலமாகத்தான், ரஜினியுடன் பில்லா படத்தில் ஜெயலலிதாவை நடிக்க விடுக்கப்பட்ட அழைப்பை அவர் நிராகரித்த தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நட்பு மாறியது..

அதன்பிறகு, 1982களில், தமிழக அரசியலில் ஜெயலலிதா கால் பதித்தார். இதன் பிறகு, இவர்களுக்குள் இருந்த நட்பின் பாதை மாறியது. 1996ஆம் ஆண்டு ரஜினிகாந்த், அரசியலில் வெற்றிக்கொடி நாட்டியிருந்த ஜெயலலிதாவுக்கு எதிராகத் திரும்பினார். அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால், இறைவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என்று கருத்துச் சொல்லியிருந்தார். அந்த தேர்தலில், இந்த வசனம் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அதிமுக தோல்விக்கு வழிவகுத்தது.

அதன்பிறகு, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயலலிதா சிறையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்பியபோது ரஜினி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், நீங்கள் மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்துக்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், உங்களுக்கு அனைத்தும் நல்லதாக நடக்க இறைவனை பிரார்த்திப்பதாகவும் எழுதி, தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்தபோது, கோகினூர் வைரம் என்று ஜெயலலிதாவை ரஜினிகாந்த் புகழ்தார். நேற்று அவரது 77வது பிறந்தநாள் விழாவில் பேசிய ரஜினி, அவரது புகழ் என்றென்றும் நிலைக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com