‘கலகல’வென வந்தாரா? மத கஜ ராஜா - திரை விமர்சனம்!

மத கஜ ராஜா படத்தின் திரை விமர்சனம்...
‘கலகல’வென வந்தாரா? மத கஜ ராஜா - திரை விமர்சனம்!
Simply
Published on
Updated on
2 min read

இயக்குநர் சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவான மத கஜ ராஜா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சிறுவயதிலிருந்தே விஷால், சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோர் நண்பர்களாக இருக்கின்றனர். வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் ஒரு திருமணத்தில் மீண்டும் சந்திக்கும்போது தன் நண்பர்களின் வாழ்க்கையில் பிரச்னைகள் உள்ளதை விஷால் அறிகிறார். முக்கியமாக, சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யா இருவரும் ஒரே ஆளால் பாதிக்கப்பட்டிருப்பதைத் தெரிந்துகொண்ட விஷால் அதை தீர்க்க நினைக்கிறார். அப்படி, அவர்கள் என்ன பிரச்னையில் இருக்கிறார்கள்? விஷால் தன் நண்பர்களுடன் இணைந்து சரி செய்தாரா? என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

இயக்குநர் சுந்தர் சி - விஷால் கூட்டணியில் 2013 ஆம் ஆண்டே வெளியீட்டுக்குத் தயாராக இருந்த இத்திரைப்படம் தயாரிப்பாளரின் நிதிச் சிக்கலால் 12 ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்துள்ளது. மத கஜ ராஜா சுருக்கமாக எம்ஜிஆர் என விஷால் அறிமுகமாகும் காட்சி, ‘சீரியல் மாதிரி இருக்கே’ எனத் தோன்றினாலும் ஒன்மேன் ஆர்மியாக நடிகர் சந்தானம் தன் கவுன்டர் நகைச்சுவையால் ரசிகர்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்.

முதல்பாதியில் சில இடங்களைப் பொறுமையாகக் கடந்துவிட்டால்போதும் இரண்டாம்பாதி முழுக்க திரையரங்கமே சிரிப்புச் சத்தத்திலேயே இருக்கிறது. தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹிட் இயக்குநர்கள் எனப் பெயரெடுத்த பலரும் தோல்விப்படங்களைக் கொடுக்கும் சூழலில் சுந்தர் சி ஆச்சரியப்படுத்துகிறார்.

சில கவர்ச்சியான காட்சிகளை வைத்தாலும் அதை முகம் சுழிக்காமல் பார்க்க வைப்பதுடன் நகைச்சுவையாக மாற்றி ரசிக்க வைக்கிறார். பாடல்களுக்கான காரணங்கள் மட்டும் அந்நியமாக இருந்தன.

ஆனால், காட்சிகளைத் திரைக்கதையாக மாற்றிய விதம் படத்தைவிட்டு நகராமல் பார்த்துக்கொள்கிறது. முக்கியமாக, சென்னையில் வாடகை வீட்டிற்கு குடியேறும் காட்சி, விஷால் - சந்தானம் - மனோபாலா நகைச்சுவைக் காட்சி ஆகியவை படத்தின் வெற்றிக்கு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளன.

அந்த 20 நிமிடக் காட்சி முடியும்வரை ரசிகர்கள் விசிலடித்து உற்சாகமாக சிரித்துக்கொண்டே இருந்ததைக் காண முடிந்தது. 2013-ல் வெளியாகியிருந்தால் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஆகியிருக்கும். இப்போதும், அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இரண்டு நாயகிகள், சந்தானம் - லொள்ளு சபா சுவாமிநாதன் வசனங்கள், அரசியல்வாதி மனோபாலா, சிக்ஸ்பேக்கில் ஆக்சன் செய்யும் விஷால் என மொத்த திரைப்படமும் சரவெடிதான். 12 ஆண்டுகளுக்கு முன் உருவானாலும் ஒரு சில காட்சிகளைத் தவிர்த்து மேக்கிங்கும் சிறப்பாக இருந்தது. கிளைமேக்ஸில் விஷாலின் தோற்றம் கைதட்டல்களைப் பெறுகிறது. கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் வைத்திருந்திருக்கிறார். நடிகைகள் அஞ்சலியும் வரலட்சுமியில் நல்ல தேர்வு.

அதிலும், வரலட்சுமி யோகா சொல்லிக்கொடுக்கும் காட்சியில் சந்தானம் - லொள்ளு சபா சுவாமிநாதனின் நகைச்சுவைக் காட்சிக்கு விசில்கள் பறக்கின்றன. ஒரு முக்கியக் குறை, நகைச்சுவை என்கிற பெயரில் பெண்கள் உடல் குறித்து கிண்டலடிக்கும் வசனங்களை சுந்தர் சி கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். படத்தில் இடம்பெற்ற, அப்பா - மகள் இடையேயான 18+ வயதினருக்கான நகைச்சுவைக் வசனங்கள் சிறிய நெருடலைத் தருகிறது.

மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபுவை திரையில் பார்க்கும்போது பழைய நினைவுகளைத் திரும்பிப் பார்பதுபோல் இருந்தது. கலகலப்பில் செய்த நகைச்சுவை எல்லாம் ஒன்றும் இல்லை என்பதுபோல் இப்படத்தில் மனோபாலாவுக்கான காட்சிகள் அமைந்துவிட்டன.

நடிகர் சந்தானம் தொடர்ந்து நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்காதது தமிழ் சினிமாவுக்கு இழப்புதான் என்பதை இப்படத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறது. அவரின் இடத்தை எந்த நடிகராலும் நிரப்ப முடியவில்லையே!

விஜய் ஆண்டனி இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ’வைப்’ (vibe) ஆக இருக்கின்றன. மை டியர் லவ்வர் பாடலில் அஞ்சலி மற்றும் வரலட்சுமியுடன் விஷால் ஆடும் நடனத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதேபோல், சிக்கு புக்கு ரயில் வண்டி பாடலைக் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு.

இந்தப் பொங்கல் வெளியீடாக இதுவரை மூன்று படங்கள் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன. இதில், குடும்பத்துடன் சிரித்து மகிழ நல்ல பொழுதுபோக்கு படமாகத் திரைக்கு வந்துள்ளார் மத கஜ ‘கலகல’ ராஜா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com