
ஜானகி எனப் பெயரிடப்பட்டதால், தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டு, சர்ச்சையை உருவாக்கிய மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபியின் புதிய திரைப்படத்துக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரபல நடிகரும், மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரின் நடிப்பில் உருவான புதிய திரைப்படத்துக்கு, “ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா” எனப் பெயரிடப்பட்டிருந்தது.
இதில், ஜானகி என்பது சீதையின் மறுப்பெயர் எனக் கூறி அப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தீர்வுக்காண அந்தத் திரைப்படத்தின் படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த 2 வாரங்களில் 4 முறை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அந்தப் படத்தின் பெயரை மாற்றுவதாகப் படக்குழுவினர் இன்று (ஜூலை 9) தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் பெயரானது ”ஜானகி.வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா” என மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் மொத்தம் 96 இடங்களில் காட்சி மாற்றம் (கட்ஸ்) செய்ய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது அது வெறும் 2 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், படக்குழு மற்றும் தணிக்கை வாரியம் ஆகிய இருதரப்பும் ஒப்புக்கொண்டதால், அதன் சர்ச்சைகள் முடிவுக்கொண்டு வரப்பட்டு, அடுத்த 24 மணிநேரத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட படம் தணிக்கை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும் என அதன் இயக்குநர் பிரவீன் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தின், ஓடிடி உரிமங்கள் ஏற்கனவே தனியார் நிறுவனத்துக்கு விற்பனைச் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து படத்தின் நாயகனான, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மாரீசன் - ஃபாஃபா பாடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.