ஓர் இரவும் ஆணவக் கொலை வழக்கும்... ரோந்த் - திரை விமர்சனம்!

ஓர் இரவும் ஆணவக் கொலை வழக்கும்... ரோந்த் - திரை விமர்சனம்!

ரோந்த் - மலையாளத் திரைப்படத்தின் திரை விமர்சனம்...
Published on
ரோந்த் - திரை விமர்சனம்(3.5 / 5)

ஆணவக் கொலை வழக்கு ஒன்றில் இரவு ரோந்து செல்லும் இரு காவலர்கள் சிக்க வைக்கப்படுகிறார்கள். உண்மையில் என்ன நடந்தது? இதற்கு காரணமானவர்கள் யார்? என்பதற்கான பதிலே ரோந்து திரைப்படத்தின் ஒன்லைன்.

கேரளத் திரைத்துறை பொதுமக்களின் பாதுகாவலர்களான காவல்துறையின் உச்சி முகரும் திரைப்படங்களைத் தொடர்ந்து பிரசவித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது 'ரோந்த்' திரைப்படமும் இணைந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் இயக்குநர் ஷகி கபீர். இவர்தான் மலையாளத்தின் கிளாசிக் காவல்துறை படங்களான 'ஜோசப்', 'நாயட்டு' மற்றும் அண்மையில் வெளிவந்த 'ஆபீஸர் ஆன் டூட்டி' திரைப்படங்களின் கதாசிரியர். 'இல வீழா பூஞ்சிரா' படத்தின் மூலம் இயக்குநரான ஷகி கபீர், மீண்டும் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம்தான் 'ரோந்த்'.

இயக்குநர் ஷகி கபீரின் திரைமொழியை முழுமையாக புரிந்துகொள்ள இந்த 5 படங்களின் பட்டியலே போதுமானது. கடைநிலை காவலர் தொடங்கி காவல்துறை உயரதிகாரி வரை ஒவ்வொருவரது அக, புற வாழ்வியலை அச்சுப் பிசகாமல் திரையில் வார்த்திருப்பார். காக்கிச் சட்டைக்குள் விறைத்துக் கிடக்கும் மனிதத்தை ஒவ்வொரு படத்தின் இறுதிக் காட்சிகளிலும் கனத்த மௌனத்தினூடே நமக்கு கடத்திவிடும் அற்புத கலைஞர் இயக்குநர் ஷகி கபீர்.

கிறிஸ்துமஸ் மாத இரவொன்றில் தர்மசாலா காவல் நிலையத்தின் அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரி யோஹனன் (திலீஷ் போத்தன்), பணிக்குச் சேர்ந்து 6 மாதங்களே ஆன தினானத் (ரோஷன் மேத்யூ) இருவரும் இரவு நேர ரோந்த் செல்கின்றனர்.

இவர்கள் இருவரும் எந்தவொரு விஷயத்தையும் எதிரெதிர் கோணத்தில் இருந்து அணுகுவதால், அவ்வப்போது இருவருக்கும் இடையே முட்டிக்கொள்கிறது. இருப்பினும் அந்த ஓர் இரவில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் பல்வேறு புகார்களை நேரில் சென்று விசாரிக்கின்றனர். சில பிரச்சினைகளை அவர்கள் தீர்த்தும் வைக்கின்றனர்.

அன்று இரவுப்பணி முடிந்து காலையில் வீடு திரும்பிய இருவரும் ஆணவக் கொலை வழக்கொன்றில் கைது செய்யப்படுகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? கொலை செய்யப்பட்டது யார்? இந்த கொலைக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு ? இவ்வழக்கில் இருவரையும் சிக்க வைத்தது யார்? இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் 'ரோந்த்' படத்தின் திரைக்கதை.

இயக்குநர் ஷகி கபீரின் முந்தையத் திரைப்படங்களைப் போலவே மிக நேர்த்தியான திரைக்கதை தொய்வின்றி படத்தை நகர்த்துகிறது. காவல்துறை, மதம், ஜாதி, குடும்ப வன்முறை என சமூகப் பிரச்சினைகளைப் பிரதான கதை மீது பக்குவமாகத் தூவி மணக்கச் செய்கிறது இயக்குநர் ஷகி கபீரின் எழுத்து. கடவுளின் தேசத்து இரவு ஒன்றில் பீறிடும் விசும்பலையும், விபரீதத்தையும் தடுக்க முனையும் ஒரு காவல் ரோந்து வாகனத்தில் ஏற்றி இரண்டு மணி நேரம் நம்மையும் ஏற்றிக் கொண்டு அடுத்த என்ன நடக்குமோ என்ற பதைதைப்புடன் சுற்றி வரச் செய்திருக்கிறார் இயக்குநர்.

திலீஷ் போத்தனும், ரோஷன் மேத்யூவும் கதாப்பாத்திரங்களாக வாழ்ந்திருக்கின்றனர். திலீஷ் போத்தன் தனது கதாப்பாத்திரத்தை ஆணித்தரமாக நிறுவுவதற்கான அத்தனை இடங்களிலும் அப்ளாஸை அள்ளியிருக்கிறார். கடினமாக நடந்து கொள்வது நக்கலடித்து வெறுப்பேற்றுவது வரை திலீஷ் போத்தனின் முதிர்ச்சி தனித்து நிற்கிறது. ரோஷன் மேத்யூ உள்பட உறுதுணைப் பாத்திரங்கள் அத்தனை பேரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக செய்திருக்கின்றனர்.

இப்படத்தின் சைலன்ட் ஹீரோ ஒளிப்பதிவாளர் மனேஷ் மகாதேவன் என்றால் மிகையல்ல. இருள் குடித்த இரவில், மின்னொளியில் ஒளிரும் நட்சத்திரங்களைக் கொண்ட தேவாலயங்கள், ரோந்து வாகனம், இரவுநேர சாலைகள், வீதிகள், வீடுகள், மின்னல், மழை, நிலா, சைரன் விளக்குகள், காவல் நிலையம், காடு, மலையென அனைத்தையும் நம் கண் முன் குவிக்கிறது மனேஷ் மகாதேவனின் கேமரா.

கடலைப் பார்க்க அகல விரியும் கண்களைப் போலவே படம் முழுக்க மனேஷ் மகாதேவனின் ஒளிப்பதிவில் குளிர்ந்து போகிறது கண்கள். அனில் ஜான்சனின் இரைச்சல் அற்ற இசையும், பிரவீன் மங்கலத்தின் கட்ஸும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. இந்த 'ரோந்த்' திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங் உடன் காணக்கிடைக்கிறது.

இதையும் படிக்க: 3 பிஎச்கே ஓடிடி தேதி!

அலாரம் வைத்து கண்விழிக்கும் வாழ்க்கை, நடைபயிற்சியில் துவங்கி அன்றிரவு வீடு திரும்புதலுடன் முடிந்துவிடுகிறது. இடைப்பட்ட நேரத்தை பணியும் குடும்பமும் ஆக்கிரமித்துக் கொள்ள, அடுத்த நாளுக்காக அசந்து தூங்கும் நேரத்தில், வாக்கி டாக்கி சத்தத்துடன் ஊர் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கும் காக்கிச் சட்டைகளின் விறைத்துக் கிடக்கும் மனிதமே இந்த 'ரோந்த்' திரைப்படம்.

Summary

actors dileesh pothan, roshan mathew acted film ronth review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com