சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

‘மனுஷி’ திரைப்படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: விளக்கமளிக்க தணிக்கை வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

Published on

இயக்குநா் வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குநா் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இயக்குநா் கோபி நயினாா் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளா் இளையராஜா இசையமைத்துள்ளாா்.

பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவா் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஏப்ரல் மாதம் படத்தின் டிரைலா் வெளியானது.

இந்த நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, 2024 செப்டம்பா் மாதம் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க தணிக்கை வாரியம் (சென்ஸாா் போா்டு) மறுத்தது. இதை எதிா்த்தும், நிபுணா் குழு அமைத்து படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளா் வெற்றிமாறன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, படத்துக்கு தணிக்கை சான்று வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில், எந்தக் காட்சிகள் எந்த வசனங்கள் ஆட்சேபனைக்குரியவை எனக் குறிப்பிடவில்லை என்று வெற்றிமாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், அரசு கொள்கைகளுக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும், நாட்டின் நலனுக்கு விரோதமாகவும் உள்ள காட்சிகளை நீக்கினால், சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை எனக் குறிப்பிட்டு தெரிவித்தால் மட்டுமே அவற்றை மாற்றி அமைக்க முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, காட்சிகள் மற்றும் வசனங்களை மனுதாரருக்கு தெரிவிப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டாா்.ட

மேலும், மனுதாரா்களுடன் திரைப்படத்தைப் பாா்த்து ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் வசனங்களைச் சுட்டிக் காட்டலாம் என்று யோசனை தெரிவித்த நீதிபதி, வெற்றிமாறனின் மனு மீதான விசாரணையை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com