கில்லி முதல் நண்பன் வரை... விஜய்க்கு திருப்பம் தந்த ரீமேக் படங்கள் !

விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ரீமேக் படங்கள் சில...
vijay remake movies
விஜய் படங்கள்.
Published on
Updated on
3 min read

விஜய் அது ஒரு மந்திரச் சொல். அந்தப் பெயருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கும் தன்மை உண்டு. விஜய், சாதாரணமாக இந்த நிலையை அடைந்துவிட வில்லை. பல அவமானங்கள், விமர்சனங்களை கடந்துதான் இந்த உச்சத்துக்கு வந்திருக்கிறார். நாளைய தீர்ப்பில் அறிமுகமான போது இந்த முகத்தை எல்லாம் யார் பார்ப்பார்கள் என விமர்சிக்கப்பட்ட விஜய்யை காண இன்று மாநாடு போல் கூட்டம் கூடுகின்றது.

ஆரம்ப காலங்களில் விஜய்யின் திரைப்படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லைதான். இருந்தபோதிலும் அவர் மனம் தளரவில்லை. அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். விஜய்க்கு தமிழகம் மட்டுமல்லாது, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவராகவும் திகழ்கிறார். உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னுட்டும், கடுப்பேத்தறவங்களுக்கு கம்முனு இருந்தா, வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என விஜய் தனது பட நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பார். அதனை அவரது வாழ்விலும் பின்பற்றி தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸின் கில்லியாக வளம் வந்துகொண்டிருக்கிறார். விஜய்யின் வெற்றியில் ரீமேக் படங்களின் பங்கும் முக்கியமானது.

வேறு மொழிகளில் வெற்றிபெற்ற கதைகளை, தமிழில் தனக்கே உரித்தான மாயாஜாலத்துடன் மாற்றியமைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படி விஜய், 10க்கும் மேற்பட்ட ரீமேக் படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலான படங்கள் தெலுங்கு ரீமேக் ஆகும். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ரீமேக் படங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்...

நினைத்தேன் வந்தாய்

ராகவேந்திர ராவ் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம். அப்போதே மிக அழகாக முக்கோணக் காதல் கதையாக இப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீகாந்த், ரவாலி, தீப்தி ஆகியோர் நடித்திருந்தனர். இது தமிழில் 1998ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. இதில் விஜய் ஜோடியாக ரம்பா, தேவயானி நடித்திருந்தனர். கே செல்வபாரதி படத்தை இயக்கியிருந்தார். இப்படத்துக்கு பலமாக பாடல்களும் அமைந்திருந்தன.

காதலுக்கு மரியாதை

மலையாளத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான அனியாதிபிரவு என்கிற திரைப்படம் தான் தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கூட்டம் கூட்டமாக இப்படத்தைப் பார்க்க குடும்பத்தோடு திரையரங்குக்கு வந்தனர். குஞ்சாக்கோ போபன் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். மலையாளத்தில் நடித்த ஷாலினியே தமிழிலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களையும் பாசில்தான் இயக்கி இருந்தார். விஜய்க்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

ப்ரியமானவளே

1996ஆம் ஆண்டு வெங்கடேஷ், சௌந்தர்யா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் பவித்ர பந்தம். இந்த படத்தை முத்யால சுப்பையா இயக்கியிருந்தார். இதனை 2000ஆம் ஆண்டில் தமிழில் கே செல்வபாரதி ரீமேக் செய்தார். விஜய், சிம்ரன் நடிப்பில் வெளியான இந்த படம் வெற்றிப் படமாக அமைந்தது.

பத்ரி

பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் 1999-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் தம்முடு. இப்படம் தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு பத்ரி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும்.

ப்ரண்ட்ஸ்

விஜய், சூர்யா நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம்தான் ப்ரண்ட்ஸ். இது மலையாளத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த ப்ரண்ட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். இந்த இரண்டு படங்களையும் சித்திக்தான் இயக்கினார். தமிழில் வடிவேலுவில் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

கில்லி

விஜய் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம்தான் கில்லி. கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை தரணி இயக்கினார். இதில் விஜய்யுடன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக்தான் கில்லி. அண்மையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லியும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ் பேசும் வசனங்கள் இன்றளவும் பேசப்படுபவை.

போக்கிரி

பிரபு தேவா இயக்கத்தில் விஜய், அசின் நடிப்பில் 2007-ல் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் போக்கிரி. இந்த படம் தெலுங்கில் அதே பெயரில் மகேஷ் பாபு நடித்த படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தெலுங்கு சினிமாவில் இப்படம் படைத்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. விஜயின் ஆக்சன் படங்களில் இப்படம் முன்னணி இடம்பெற்றது.

நண்பன்

இயக்குநர் ஷங்கர், விஜய் கூட்டணியில் 2012-ல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் நண்பன். இப்படம் ஹிந்தியில் அமீர் கான், மாதவன் நடிப்பில் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் என்ற படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக் ஆகும். கல்லூரி கால வாழ்வை எதார்த்தமும் நகைச்சுவையும் கலந்து எடுத்திருந்ததால், இப்படம் இளைஞர்களை அதிகம் கவர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com