கண்கண்ட தெய்வமா, கணவன்?ஜென்டில்வுமன் - திரை விமர்சனம்!
ஜென்டில்வுமன் திரை விமர்சனம்(3 / 5)
இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் நடிகர்கள் ஹரி கிருஷ்ணன், லிஜோமோல் ஜோஸ் நடித்த ஜென்டில்வுமன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அவரவருக்கு ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் அதில் ரத்தம் சிந்தவைக்கிற பிரச்னைகளில் தலையாயது உறவுச்சிக்கல். அப்படி, அன்றாடம் நாம் கடந்து செல்லும் குடும்ப வன்முறைச் செய்திகளில் ஒன்றை எடுத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர். சாதாரண நகைச்சுவை மீம்களாக அச்செய்திகள் சமூக வலைதளங்களில் வலம் வருவதும், குற்றவாளிகளைக் கொடூரமானர்களாகப் பார்ப்பதும் வழக்கம்.
ஆனால், அந்தக் குற்றத்திற்குப்பின் இருக்கும் காரணங்களையும் அதைச் செய்பவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் நாம் பெரிதாக கவனிப்பதில்லை. கவனமற்று செல்லும் அப்பக்கங்களை ஜென்டில்வுமன் மூலம் அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.
புதிதாகத் திருமணமான அரவிந்த் (ஹரி கிருஷணன்), பூரணி (லிஜோமோல்) இருவரும் ஒருவருக்கொருவர் நேசத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மனைவியான லிஜோமோல் கணவனுக்காக பார்த்து பார்த்து சமைப்பது, பணிவிடை செய்வது என தன் துணையின் நலனுக்கான மனைவியாகவே இருக்கிறார். அதேபோல், மனைவி என்ன சமைத்தாலும் அதைக் குறை கூறாமல், அன்புடனே இருக்கும் கணவனாக ஹரி கிருஷ்ணனின் காட்சிகள் காட்டப்படுகின்றன. இப்படி, அழகாக சென்றுகொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் முக்கியமாக பூர்ணி வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையே ஏற்படுகிறது.
நாயகியின் சகோதரி ஒருவர் சென்னையில் நேர்முகத்தேர்வுக்காக லிஜோமோல் இல்லத்தில் தங்க நேரிடுகிறது. தன் கணவன் மிக நல்லவர் என நம்பிக்கொண்டிருக்கும் வேளையில், நாயகனான அரவிந்த் அப்பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முனையும்போது ஒரு விபரீதம் நிகழ்கிறது. அதன்பிறகு, நாயகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவர நாயகி ஒரு முடிவை எடுக்கிறார். அது என்ன? பெண்களின் வாழ்க்கையில் அன்பு என்கிற பெயரில் ஆண்கள் செலுத்தும் வன்முறைகள் என்னென்ன என ஜென்டில்வுமன் படத்தில் பேசியிருக்கிறார்கள்.
படம் துவங்கும்போதே இது சாதாரண கதையாகத்தானே இருக்கிறது என தோன்றவைத்த இயக்குநர் இரண்டாம்பாதியில் நுட்பமாக சில விஷயங்களை வசனங்கள் மூலம் பதிவுசெய்கிறார். திருமணம் தாண்டிய உறவை வைத்திருக்கும் ஒரு ஆணால் பெண்கள் எந்தெந்த வகையில் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதையும் எல்லா ஆண்களும் அப்படியானவர்கள் இல்லை என்பதையும் கதாபாத்திரங்கள் மூலம் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள்.
பெண்ணிய சிந்தனைகொண்டவரும், சாதாரண பெண்ணாக வாழ்ந்தால் போதும் என நினைக்கும் இரு பெண்களின் வாழ்க்கை ஓர் ஆணால் சிதையும்போது அப்பெண்கள் என்னவாக மாறுகிறார்கள் என்கிற கதைக்கருவை கவனமாகக் கையாண்டிருக்கின்றனர். ஆசையைத் துற என்கிற புத்தரும் அதற்கு நேர் எதிரான ஓஷோவும் ஒரே வீட்டில் இருப்பது; சமையல்கட்டில் கணவனுக்கு விரும்பி சமைக்கும் காட்சியில் ஆரம்பித்து ஒரு குக்கருடன் முடிப்பது என காட்சியமைப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது. நகைச்சுவைக் காட்சிகளும் சிரிப்பு சத்தத்தைக் கேட்க வைக்கின்றன.
அறிமுக இயக்குநர் என்றால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், முடிந்தவரை இயக்குநர் அதைத் தவிர்த்திருக்கிறார். சிறிய பட்ஜெட், குறைந்த கதாபாத்திரங்கள் இவற்றைக் கொண்டே காத்திரமான தனிமனித உறவுகளின் சிக்கல்களையும் துணையால் கைவிடப்பட்டவர்கள் அடையும் மனமாற்றங்களையும் நன்றாக எழுதியிருக்கிறார்.
ஆனால், முதல்பாதியில் கொஞ்சம் கவனம் கொடுத்திருக்கலாம். முக்கியமாக, சாதுவாக அறிமுகமாகும் லிஜோமோல் கதாபாத்திரம் திடீரென அவதாரம் எடுப்பதுபோல் இருந்தது நம்பும்படியாக இல்லை.
நாயகனாக ஹரி கிருஷ்ணனுக்கு நடிக்க வேண்டிய அளவு தெரிந்திருக்கிறது. ஓவராக செல்லாமல் நம்பும்படியான உடல்மொழியை வழங்கியிருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நடிகை லாஸ்லியாவும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
இப்படத்தின் தூண் என்றால் நடிகை லிஜோமோல் ஜோஸ்தான். மிக பிரமாதமான நடிகையாக வளர்ந்துகொண்டிருக்கிறார். அண்மையில் வெளியான காதல் என்பது பொதுவுடமை, பொன்மான் ஆகிய படங்களில் தன் கதாபாத்திரத்தில் அட்டகாசம் செய்தவர் இப்படத்திலும் கதாபாத்திரத்தின் மனவோட்டத்தை முகத்தில் அபாரமாகக் கடத்துகிறார்.
ஒளிப்பதிவாளர் காத்தவராயன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஆகியோர் படத்தின் இயக்கத்திற்கு நல்ல பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். ஒளியமைப்பும் பின்னணி இசையும் பலமாக இருக்கின்றன.
உறவுகளில் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள்; திருமணம் செய்தபின் வாழ வேண்டுமே என கசப்புடன் வாழ்பவர்கள்; உறவில் உண்மையைத் தேடுபவர்கள் என பலரும் பார்த்து சிந்திக்கும் விதமாகவே ஜென்டில்வுமன் உருவாகியிருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.