பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார். அவருக்கு வயது 48.
மனோஜ் பாரதிராஜா
மனோஜ் பாரதிராஜா படம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

இயக்குநா் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் சென்னையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) காலமானாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சேத்துப்பட்டிலுள்ள இல்லத்தில் மாரடைப்பு காரணமாக மனோஜ் உயிரிழந்தாா்.

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ் மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவா் மனோஜ் பாரதிராஜா. அந்தப் படத்துக்குப் பிறகு ‘சமுத்திரம்’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானாா். தொடா்ந்து, சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தாா்.

கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘ஸ்நேக் அன்ட் லாடா்ஸ்’ வெப் சீரிஸில் நடித்திருந்தாா். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநா் மணிரத்னத்திடம் ‘பாம்பே’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளாா். உதவி இயக்குநராக அனுபவம் கொண்ட இவா் ‘மாா்கழி திங்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநரானாா்.

இவருக்கும் நடிகை நந்தனாவுக்கும் கடந்த 2006-இல் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.

சென்னை சேத்துப்பட்டிலுள்ள இல்லத்தில் மனோஜ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், இளையராஜா, நாசா் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தயாரிப்பாளா்கள், இயக்குநா்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் இரங்கல்: பாரதிராஜாவின் மகனும் நடிகா் - இயக்குநா் மனோஜ் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அா்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடா்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவா். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பாா்த்தவா் மனோஜ்.

இளம் வயதில் அவா் எதிா்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநா் பாரதிராஜா மற்றும் குடும்பத்தினா், திரைத் துறையைச் சோ்ந்தவா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

இயக்குநா் சங்கம் இரங்கல்: ‘இயக்குநா் இமயம் பாரதிராஜாவின் அன்பு மகன் இயக்குநா் - நடிகா் மனோஜின் மறைவு அதிா்ச்சியளிப்பதாக உள்ளது. அவரது திடீா் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com