மோகன்லாலுக்கே பாதுகாப்பு இல்லை... பாஜகவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

எம்புரான் படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது...
மோகன்லாலுக்கே பாதுகாப்பு இல்லை... பாஜகவை விமர்சிக்கும் ரசிகர்கள்!
Published on
Updated on
2 min read

நடிகர் மோகன்லாலின் எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சினிமாவில் அழுத்தமான அரசியலைப் பேசும் திரைப்படங்கள் எந்த மொழியில் உருவாகின்றன எனக் கேட்டால், மலையாளம்தான் எனலாம். நேரடியாகவே, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மலையாள சினிமாவில் அரசியல் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

வெறும் அரசியல், சமூகக் கேள்விகளைக் கடந்து மத ரீதியான வெறுப்புகளும் அதன் முரண்களும் விவாதங்களை ஏற்படுத்தும் அளவிற்கு மலையாளத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

எம்புரான் படத்தை இயக்கிய நடிகர் பிருத்விராஜ் மத அரசியலையும் மனிதர்களுக்கு இடையே நிலவும் மத வெறுப்பையும் நுட்பமான காட்சிகளால் பேசிய ‘குருதி’ படத்தில் நடித்து பாராட்டுகளையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றிருந்தார்.

இப்படிப்பட்ட மலையாளத் திரைப்படங்கள் பான் இந்திய வெளியீடாக மிக அதிகமான திரைகளில் வெளியாகும்போதுதான் பிரச்னைகள் முளைக்கின்றன. அப்படி, எம்புரான் புதிய சர்ச்சையைச் சந்தித்துள்ளது. படத்தின் ஆரம்ப காட்சியில் இந்து - முஸ்லீம் மதக்கலவரத்தை 2002-ல் நடப்பதுபோல் காட்டுகின்றனர். (குஜராத்தில் மதக்கலவரம் நடந்த ஆண்டு) அக்காட்சியில் வலதுசாரி அமைப்புகளிடமிருந்து தப்பிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு ஹிந்து செல்வந்தர் தன் இல்லத்தில் அடைக்கலம் கொடுப்பதுடன் யாரும் உங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள், உங்கள் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு என்கிறார்.

இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் காட்சியில்...
இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் காட்சியில்...

ஆனால், செல்வந்தரின் உதவியாளர் (ஹிந்து) அந்த இஸ்லாமியர்களை ஒரு ஹிந்து அமைப்பிடம் காட்டிக்கொடுத்து, அத்தனை பேரையும் படுகொலை செய்வதுடன் கர்ப்பிணியான இஸ்லாமியப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து வயிற்றைக் கிழிக்கின்றனர். குஜராத் சம்பவத்தில் என்னனென்ன நடந்ததோ அதை இயக்குநர் பிருத்விராஜ் காட்சிகளாக மாற்றியிருக்கிறார்.

தென்னிந்தியாவில் சரி, வட இந்தியாவிலுள்ள வலதுசாரி அமைப்புகள் இக்காட்சிகளை ஏற்றுக்கொள்வார்களா? படம் வெளியான அன்றே எம்புரானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்த வலதுசாரிகள், படத்தை வட இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினர்.

மோகன்லாலுக்கும் பிருத்விராஜுக்கும் இது இன்னொரு படம் மட்டுமல்ல. ரூ. 180 கோடி பட்ஜெட்டில் உருவானதால், போட்ட பணத்தை மீட்டே ஆக வேண்டும் என்கிற தேவை அவர்களுக்கு உண்டு என்பதால், மோகன்லால் அந்தக் காட்சிகளுக்காக வருத்தம் தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டார்.

அதில், “ஒரு கலைஞனாக, எனது திரைப்படங்கள் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதத்தின் மீதும் வெறுப்பை ஊக்குவிக்காமல் இருப்பதை உறுதி செய்வது எனது கடமை. அந்த வகையில், எம்புரான் திரைப்படத்தால் என்னை நேசிப்பவா்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய இத்துயரத்துக்கு நானும் படக்குழுவினரும் மனதார வருந்துகிறோம்.

இதற்கான பொறுப்பு படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் உள்ளது என்பதையறிந்து, சா்ச்சைக்குரிய காட்சிகளைப் படத்திலிருந்து நீக்க நாங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சை வலு பெறத் துவங்கியதும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மோகன்லால் மற்றும் எம்புரான் குழுவினருக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார். ஆனால், படக்குழுவினர் தங்கள் முடிவில் மாற்றம் செய்யவில்லை என்றே தெரிகிறது. இதனால், மோகன்லால் ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் பலரும் ஆளும் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மோகன்லால் முகநூல் பக்கத்தில்..
மோகன்லால் முகநூல் பக்கத்தில்..

முக்கியமாக, “நாட்டின் மிகச்சிறந்த நடிகரான மோகன்லாலுக்கே பாதுகாப்பையும் கருத்து உரிமையையும் பிரதமர் மோடியின் பாஜக அரசு கொடுக்கவில்லை. இவர்களுக்கு பயப்பட வேண்டிய நிலையைத்தான் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வருத்தம் தெரிவித்ததற்காக மோகன்லாலும் வெட்கப்பட வேண்டும்” என பலரும் மோகன்லாலின் சமூக ஊடகக் கணக்குகளில் காமெண்ட் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com