
தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகிறது.
சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இறுதிவரை நாயகனாகவே நடித்தவர்களும் உள்ளனர். வில்லனாக நடிப்பைத் துவங்கி நாயகனாவதும் வழக்கமானதுதான். ஆனால், ஒரு நகைச்சுவை நடிகரை கதாநாயகனாகப் பார்ப்பது எல்லாவிதத்திலும் பெரிய எதிர்பார்ப்பை அளிப்பது.
அப்படி, நடிகர்கள் என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் நாகேஷ் இருவரும் நகைச்சுவை கதாபாத்திரங்களால் அறியப்பட்டு பின் நாயகர்களாக நடித்து தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
இவர்களைத் தொடர்ந்து வடிவேலுக்கு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்ததுடன் கதாநாயகனுக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தது. ஆனால், அதன்பின் வடிவேலு நாயகனாக நடித்த படங்கள் பெரிய வரவேற்புகளைப் பெறவில்லை.
நடிகர் கவுண்டமணியும் சில படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால், எதுவும் பேசப்படும் அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.
2010-க்குப் பின் தமிழ் சினிமாவின் முக்கியமான நகைச்சுவை நடிகரான சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி கடந்த 10 ஆண்டுகளாக நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.
அதேபோல், சந்தானம் கதாநாயகன் ஆனதால் நகைச்சுவை நடிகருக்கானத் தேவை ஏற்பட நடிகர்கள் சூரி மற்றும் யோகி பாபு ஆகியோர் அந்த இடங்களைப் பிடித்தனர். தற்போது, சூரியும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், நகைச்சுவை நடிகர்களாகத் தங்கள் திரைப்பயணத்தைத் தொடங்கிய சந்தானம், சூரி, யோகி பாபு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன், ஜோரா கையத் தட்டுங்க ஆகிய படங்கள் வருகிற மே 16 ஆம் தேதி ஒரேநாளில் திரைக்கு வருகின்றன.
தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் கதை நாயகர்களாக நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருவது இதுவே முதல்முறை என்பதால் ரசிகர்களிடம் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அப்டேட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.