
நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2025-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கடந்த மே 13 ஆம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடைபெற்று மே 24 ஆம் தேதியன்று நிறைவடையவுள்ளது.
உலகின் சிறந்த திரைப்பட விழாக்களில் முதன்மையானதாகக் கருதப்படும் கேன்ஸ் விழாவில் பங்கேற்க உலகம் முழுவதுமிருந்து சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் கலந்துகொள்வது வழக்கம்.
அப்படி, இந்தியாவிலிருந்து பல பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டாலும் ஒவ்வொரு ஆண்டும் நடிகை ஐஸ்வர்யா ராய் தவறாமல் கலந்துகொள்கிறார்.
காரணம், ஐஸ்வர்யா ராய் உலகளவில் பிரபலமான அழகு சாதன பிராண்டான L'Oréal Paris-ன் விளம்பரத் தூதராக 2003 முதல் இருந்து வருகிறார். இந்த நிறுவனம் கேன்ஸ் திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ ஒப்பனை கூட்டாளியாக (Official Makeup Partner) இருப்பதால், அவர் இந்த விழாவில் தொடர்ந்து பங்கேற்கிறார். L'Oréal Paris சார்பாக சிவப்பு கம்பள அணிவகுப்பில் (Red Carpet) கலந்து கொள்வது அவரது பொறுப்புகளில் ஒன்றாகும்.
மேலும், இந்தியப் பண்பாடு மற்றும் பிரதிநிதிப்படுத்தும் விஷயங்களுக்காகவும் ஐஸ்வர்யா ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொள்கிறார்.
ஆண்டுதோறும் விதவிதமான ஆடைகளில் தோற்றமளிக்கும் ஐஸ்வர்யா ராய், இந்த முறை பனாரஸ் புடவையில் நெற்றியில் குங்கும (சிந்தூர்) திலகமிட்டபடி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஐஸ்வர்யா ராய் இந்தத் தோற்றத்தில் வந்ததற்குக் காரணம், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலியானதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிட்ட தாக்குதல் ஒன்றை பாகிஸ்தானில் நடத்தியது. அதைக் குறிப்பிடும் வகையிலேயே, ஐஸ்வர்யா இந்தத் தோற்றத்தில் வந்திருப்பார் என்றே ஊகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.