பெயர் சொன்னாலே போதும், எளிதில் விளங்கும் என்ற புகழுக்குச் சொந்தமானவர் - இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் எதுவுமில்லாத காலத்திலேயே கற்பனைக்கெட்டாத காட்சிகளுடன் மாயாஜாலப் படங்களும் பேய்ப் படங்களும் எடுத்து என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பவர் இயக்குநர் விட்டலாச்சார்யா.
பலரும் நினைத்துக்கொண்டிருப்பதைப் போல, விட்டலாச்சார்யா, தெலுங்குக்காரர் அல்லர்; கன்னடத்துக்காரர்.
கர்நாடகத்தில் உடுப்பி அருகே உதயவார என்ற ஊரில் பிறந்த இவர், பள்ளிக் கல்வியைக்கூட பாதியில் விட்டவர். ஏதேதோ வேலைகள் செய்து, பின்னர் ஹோட்டல் நடத்தியவர், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டு, 7 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர். சிறை விடுதலைக்குப் பின், டூரிங் சினிமா கொட்டகை நடத்தத் தொடங்கி, அங்கே படங்களைப் பார்த்துப் பார்த்தே திரைப்பட உருவாக்க உத்திகளைக் கற்றறிந்தவர். 1946-லிருந்து படத் தயாரிப்பு. 1952-ல் முதல் படம் கன்னடத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணம். 1954-ல் கன்யாதானம், கறுப்பாக இருக்கிற பெண்ணுக்கு நேரிடும் பிரச்சினைகள். அப்போது மிகவும் புரட்சிகரமாகக் கருதப்பட்ட கதை (சௌகார் ஜானகிதான் கதாநாயகி). அதையே தெலுங்கிலும் எடுக்கிறார். தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு என வரிசை கட்டின படங்கள்.
ஆந்திரத்தின் முதல்வராக இருந்து மறைந்த அந்தக் கால தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி. ராமராவை அதிக அளவாக 19 படங்களில் இயக்கியிருக்கிறார் விட்டலாச்சார்யா (ஆனால், 15 என்றும் சொல்கிறார்கள்).
சி.ஐ.டி. ராஜு, ஜெகன்மோகினி, மதன மஞ்சரி, நவ மோகினி, மோகினி சபதம், வீரப் பிரதாபன் போன்றவையெல்லாம் பிற்காலத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள். கன்னடத்துக்காரர் என்றபோதிலும் இவர் எடுத்தவை எல்லாம் பெரும்பாலும் தெலுங்கு படங்கள்தான். அந்தக் காலத்திலேயே அவை தமிழிலும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
நூறுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர் விட்டலாச்சார்யா. தொடக்க காலத்தில் சமூக – குடும்பக் கதைகளை எடுத்தவர், பின்னர், மாயஜால, பேய்ப் படங்களின் பக்கம் – வெற்றிகரமான ஃபார்முலாவுக்கு - திரும்பிவிட்டார்.
படங்களில் பேய், பூதங்கள், மாயாஜாலக் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருவது ஏன்? என்ற கேள்விக்கு - 1980, ஜூன் மாதத்தில் சினிமா எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த நேர்காணலில் – இயக்குநர் விட்டலாச்சார்யா கூறுகிறார்:
"வியாபாரம்தான். எக்ஸார்ஸிஸ்ட், ஓமன் முதலான படங்கள் வந்தன. அவற்றிலிருந்த பேய், பூதங்கள் பார்ப்பவர்களைக் குலைநடுங்க வைத்தன. மறுபடியும் அந்தப் படங்களைப் பார்க்க மக்கள் பயந்தார்கள். என் படங்கள் அப்படியல்ல. இவற்றில் வரும் பேய், பூதங்கள் மக்களைச் சிரிக்க வைத்து மகிழ வைக்கின்றன. என் மாயாஜாலக் காட்சிகளுக்கு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது. தங்கள் கற்பனைக்கு எட்டாத அற்புதங்களை என் படங்களில் காண மக்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அந்தப் புதிய அம்சங்களை அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் – எனக்கு வெற்றி."
உங்கள் படங்களில் கவர்ச்சி நடனங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சம்பந்தமில்லாவிட்டாலும் அந்த நடனங்களை உங்கள் படங்களில் சேர்த்துவிடுகிறீர்கள். தேவைதானா?
"நிச்சயம் தேவைதான். விட்டலாச்சார்யா படம் என்றால் அதில் கவர்ச்சி நடனங்கள் இருக்கும் என்பது என் ரசிகர்களின் நம்பிக்கை. அவர்களை நான் ஏமாற்ற முடியாது. படத்திற்கு அழகு சேர்ப்பது நடனமும் இசையும்தான் என்பது எனது கருத்து. பிற படங்களில்கூட இசைக்கு ஏற்றார்போல உடலை அசைத்து நடந்து போவதோ வருவதோ - நடனமாக இல்லாமல் – செய்கிறார்கள். அந்த அசைவுகள்கூட நடன அடிப்படையில் அமைவதால்தான் அழகாக இருக்கின்றன. என்னைப் பொருத்தவரை நான் நடன அலங்காரங்கள் செய்து, ஆடை அணிகலன்களை அணிவித்து நாட்டியமாடச் செய்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம்."
உங்கள் படங்களில் நடனமாடுபவர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்? அவர்களுக்குப் பரதநாட்டியம் தெரிந்திருக்க வேண்டுமா? அல்லது சாதாரண இசைக்குத் தகுந்தபடி உடலை அசைக்கத் தெரிந்தால் போதுமா?
"பரதநாட்டியம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஸ்டெப்ஸ் போட, கை கால்களால் அபிநயம் பிடிக்க, முகத்தில் உணர்ச்சிகளை வடிக்க, அந்த பரதநாட்டியப் பயிற்சி அவசியம் என்றே நான் நினைக்கிறேன். தவிர, அவ்வாறு பயிற்சி பெற்றுள்ள நடிகைக்கு நாங்கள் இங்கேயே பயிற்சி கொடுக்கிறோம். எப்படி கவர்ச்சியாக உடல் அங்கங்களை நொடிப்பது, திருப்புவது, கண்களால் சுண்டியிழுப்பது என்பன போன்ற பயிற்சிகள் இங்கே கொடுக்கப்படுகின்றன. என் படத்தில் நடனமாடியிருக்கிற ஜோதிலட்சுமியுடன் அப்போது ஜெயமாலினியும் கூட வருவார். அவரைப் பார்த்ததுமே இவரை நம் படங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானித்து அதன்படி ஜெயமாலினிக்கு இங்கே பயிற்சி கொடுத்தோம். அவருடைய உடல் அமைப்பும் வசீகரமாக அமைந்துவிட்டதால் அவர் கவர்ச்சி நடனங்களுக்குப் பொருத்தமானவராகிவிட்டார்."
(சம்பூர்ண ராமாயணம், மக்களைப் பெற்ற மகராசி, பாவை விளக்கு, நான் பெற்ற செல்வம் போன்ற படங்களின் இயக்குநர் கே. சோமுவின் இயக்கத்தில் வெளியான சுந்தரமூர்த்தி நாயனார் திரைப்படத்தில் நாயகி பரவை நாச்சியாராகத்தான் அறிமுகமானார், பின்னால் பெருங்கவர்ச்சி நடிகையான ஜோதிலட்சுமி!).
நடன நடிகைகளுக்கு மட்டும்தான் நீங்கள் கடுமையான பயிற்சி கொடுக்கிறீர்களா?
இல்லை. நடிகர்களையும் செமத்தியாக வேலை வாங்கிவிடுவோம். வீரத் திலகம் படத்தில் நடித்த காந்தாராவை நான் இரண்டு நாள்கள் ஒரே இடத்தில் கட்டிப் போட்டேன். அவருடைய ஷூ லேஸைப் பிடித்துக்கொண்டு இரண்டு சிறிய உருவங்கள் சண்டை போடுவது போலவும் அவர் தலைமுடியைப் பிடித்துத் தொங்கியபடி அவர் காதில் ஒரு குள்ள உருவம் ரகசியம் சொல்வது போலவும் படம் பிடிக்க வேண்டியிருந்த்து. அவர் கொஞ்சம் இம்மி நகர்ந்தாலும் எல்லா காரியமும் கெட்டுவிடும். அதனாலேயே கட்டிப்போட்ட நிலையிலேயே காந்தாராவ் இருந்தார். அதேயிடத்தில்தான் சாப்பாடு, தண்ணீர், இயற்கை அழைப்புகள்... எல்லாமும்."
மாயாஜாலக் காட்சிகள் எல்லாம் உங்களுடைய சொந்தக் கற்பனைகளா?
"என்னிடம் சுமார் பத்துப் பேர் கொண்ட ஒரு குழு இருக்கிறது. இவர்களில் மூன்று பேர் தினமும் ஏதாவது திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் வேலையே. படம் பார்த்துவிட்டு அவர்கள், எந்தக் காட்சியை மக்கள் ரசித்தார்கள்? அந்தக் காட்சி எப்படி இருந்தது என்று என்னிடம் விவரிக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி என்று எல்லா படங்களையும் பார்த்து அவர்கள் சொல்லும் வர்ணனைகளை அடிப்படையாக வைத்து என் கற்பனையில் அதை விரிவுபடுத்தி என் கோணத்தில் ஒரு காட்சியாக என் படத்தில் அமைப்பேன். அதேபோல, மாயாஜாலக் காட்சிகளை என் கற்பனைக்கேற்றாற்போல நான் சொல்வேன். அதற்கு ஆர்ட் டைரக்டர் உருக்கொடுப்பார். கேமரா மேன் அதை அப்ரூவ் செய்வார். இதில் யாருக்காவது அந்தக் காட்சி அமைப்பு சரியாக வராது என்று தோன்றினால் அந்தத் திட்டத்தை அப்படியே கைவிட்டுவிடுவோம். என் படத்தைப் பொருத்தவரை இது ஒரு டீம் ஒர்க். ஆயிரத்தொரு அரேபியக் கதைகளை எங்கள் படங்களின் மூலக் கருவியாக வைத்து அதைப் பற்றி மணிக்கணக்கில் விவாதிப்போம். எந்தக் காட்சி எப்படி அமைய வேண்டும் என்பதில் ஒட்டுமொத்தமான அபிப்ராயம் எழும்போதுதான் அது ஓ.கே.வாகும்."
ஷூட்டிங்கிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்துவிடும் வழக்கத்தைக் கொண்டவர் விட்டலாச்சார்யா. செட்டில் லைட்பாய் வந்து, அந்தக் காட்சி அமைப்பு இப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்று ஏதேனும் யோசனை சொன்னால் உடனே கேமரா மேன், ஆர்ட் டைரக்டருடன் கலந்தாலோசித்து ஏற்கப்படுமானால் உடனே செயல்படுத்தப்படுத்திவிடுவார்.
"லைட்பாய் எத்தனையோ டைரக்டர்களைப் பார்த்திருப்பார். எத்தனையோ விதவிதமான காட்சிகள் படமாக்கப்படுவதை உன்னிப்பாகக் கவனித்திருப்பார். அந்த அனுபவ அடிப்படையில் அவர் கூறும் யோசனை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகவே இருக்கும். நான் அவர்களை அலட்சியப்படுத்துவதில்லை" என்கிறார் இயக்குநர் விட்டலாச்சார்யா.
காமிக்ஸ் கதைகளைப் படிப்பது போல, இன்றைக்கும் ஜாலியான பேய்ப் படங்களை மிகவும் ரிலாக்ஸ்டாக பார்க்க நினைத்தால் விட்டலாச்சார்யாவிடம்தான் சென்று சேர வேண்டும்.
எளிய மக்களின் மாயாஜால - பேய்ப் பட உலகில் இயக்குநர் விட்டலாச்சார்யாவும் அவருடைய படங்களும் தனியொரு சகாப்தம், என்றென்றைக்கும்!
[மே 28 (1999) – விட்டலாச்சார்யா நினைவு நாள்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.