

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நட்புக்கு எடுத்துக்காட்டாக கமருதீன் மீதான கானா வினோத்தின் அக்கறை மாறியுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
பிரவீன்ராஜ் - கமருதீன் இடையிலான சண்டையில் கமருதீன் அடித்துவிட, உரிமையுடன் கானா வினோத் கமருதீன் மீது அக்கறை கொண்டு பிரவீன்ராஜை அடித்ததைக் கண்டித்துப் பேசினார்.
இருவரும் வார்த்தைகள் மூலம் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது, ஏன் அவசரப்பட்டு அடித்தாய்? பெரும் கனவோடு பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நீ இவ்வாறு செய்யலாமா? என உண்மையான அக்கறையோடு கமருதீனிடம் கானா வினோத் கேட்டார். இந்த விடியோவை பிக் பாஸ் ரசிகர்கள் பலர் நட்புக்கு எடுத்துக்காட்டாக பகிர்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வெறும் கேலிக்காக பிரவீன் ராஜ் - கமருதீன் - ப்ரஜின் ஆகியோர் இணைந்து சண்டையிட்டு சக போட்டியாளர்களை ஏமாற்ற திட்டமிடுகின்றனர். இந்தத் திட்டத்தை பிக் பாஸிடம் கூறிவிட்டு நாடகத்தைத் தொடங்குகின்றனர்.
யாரும் கண்டுபிடிக்காத வகையில் பிரவீன் ராஜும் கமருதீனும் சண்டையிடுகின்றனர். இடையே தடுப்பதற்காக வரும் ப்ரஜினையும் கமருதீன் தாக்க முற்படுகிறார். இதனால், பிக் பாஸ் வீடு பெரும் கலவரமாகவும் பரபரப்பாகவும் மாறுகிறது.
நடப்பவை அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பதை அறியாத சக போட்டியாளர்கள் அதிர்ச்சியுடன் சண்டையைத் தடுக்க முயற்சிக்கின்றனர். ப்ரஜினின் மனைவி சான்ட்ரா கதறி அழுகிறார்.
இதனிடையே சண்டையிட்டுக்கொண்டவர்களை தனித்தனியாக சக போட்டியாளர்கள் அழைத்துச்செல்ல, கானா வினோத் மிகுந்த அக்கறையுடன் கமருதீனிடம் கோபப்படுகிறார்.
அவர் பேசும்போது, ''அவனும் (பிரவீன் ராஜ்) பேசினான். நீயும் பேசினாய். வீணாக ஏன் அடித்தாய்? பல கனவுகளோடு பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளாய். இப்போது அந்தக் கனவெல்லாம் என்னவாகும்? நான் அவனுக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைக்காதே. உன் கனவை நினைத்துப்பார்'' என என மிகுந்த அக்கறையுடன் கானா வினோத் பேசுகிறார்.
பிரவீன் ராஜ் - கமருதீன் - ப்ரஜின் ஆகிய மூவரும் திட்டமிட்டு சண்டையிட்டுக்கொண்டாலும், இந்த சம்பவத்தின் மூலம் உண்மையான அக்கறை கொண்ட மனிதர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். இதனை நாடகமாக பயன்படுத்திக்கொள்ளும் போட்டியாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.