

அதெர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில் யூடியூபர் ஒருவர் எவ்வாறு தன்னை உருவ கேலி செய்தார் என்பது குறித்து, நடிகை கௌரி கிஷன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு தானே வாதிட்டதும் இயக்குநர் அமைதியாக இருந்தது குறித்தும் பேசியுள்ளார்.
அதெர்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனிடம் அவரது உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடந்தது என்ன?
இந்நிலையில், கௌரி கிஷன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்ன நடந்தது என்றால், என்னுடன் நடித்த நடிகரிடம், ’நீங்கள் இந்தப் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளதை டிரைலரில் பார்க்க முடிந்தது. நடிகையின் எடை எவ்வளவு தெரியுமா?’ எனக் கேட்டார்.
அடுத்ததாக இயக்குநரிடம், ’நாயகன் உயரமாக இருக்கிறார். கதாபாத்திர தேர்வில் எதுவும் தவறு நடந்துவிட்டதா?’ எனவும் கேட்டார். அவர் எதற்க்காக அப்படி கேட்டார் எனத் தெரியவில்லை.
எனது உடல் எடைக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம்?
நான் உயரம் குறைவாக இருப்பதாலா அல்லது அவர் நினைக்கும்படி சரியான உடல் வாகு இல்லாததாலா எனவும் புரியவில்லை.
இப்படி மோசமான கேள்விகளைக் கேட்டுவிட்டு அவர் 10-12 நிமிஷங்கள் அது சரியெனவும் என்னிடம் வாதிட்டார். எனக்கு யாருமே ஆதரவாகப் பேசவில்லை. இயக்குநர், நடிகரும் அமைதியாகவே இருந்தார்கள். அது அவர்களது விருப்பமாக இருக்கலாம்.
நான் படத்தில் மருத்துவராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதையெல்லாம் கேள்விகேட்கவில்லை. எனது எடைக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம்?
பெண்ணாக இருப்பது மிகவும் கடினமானது...
பொதுவாகவே சமூகத்தில் பெண்கள் கருத்து சொல்லக்கூடாது என நினைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
எனது உடல் என்னுடைய விருப்பம். அதற்கான காரணங்கள் இருக்கின்றன. இந்தமாதிரி நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும். இதனால், சுய முன்னேற்றம், மனநிலையில் பாதிப்பு ஏற்படும்.
திரைத்துறையில் நிலைத்து நிற்க அதிகமாக உழைக்கிறோம். அதிலும் பெண்ணாக இருப்பது மிகவும் கடினமானது என்றார்.
திரைத்துறையினர் பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.