

சிவா திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா கூறிய அறிவுரையை இயக்குநர் ராம் கோபால் வர்மா பகிர்ந்துள்ளார்.
சிவா திரைப்படம் 4கே தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் வரும் நவ.14ஆம் தேதி மறுவெளியீடாகிறது.
இந்தப் படத்தில் நாகார்ஜுனா நாயகனாகவும் அமலா நாயகியாகவும் ரகுவரன் வில்லனாகவும் நடித்துள்ளார்கள். இந்தப் படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய பேரலையை ஏற்படுத்தியது.
புதுமையான காட்சி அமைப்புகள், சிங்கிள் ஷாட்டுகள் என இந்திய சினிமாவையே புரட்டிபோட்டது எனலாம். தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான படமாகவும் இன்றளவும் இருந்து வருகிறது.
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியதாவது:
இளையராஜா அளவுக்கு பின்னணி இசையைப் புரிந்துகொண்டவர்கள் யாருமில்லை...
என்னுடைய படத்தில் அனைவருமே புதியதாக இருந்தனர். அதனால் இசையமைப்பாளர் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தது.
அந்த நேரத்தில் நான் பார்த்தவரைக்கும் இளையராஜா அளவுக்கு பின்னணி இசையைப் புரிந்துகொண்டவர்கள் யாருமில்லை. அதனால், அவரை என் படத்தில் பணியாற்ற வைக்க வேண்டும் என்ற பேராசை இருந்தது.
அந்த நேரத்தில் சண்டைக் காட்சிகளில் வரும் சப்தங்கள் மோசமானவையாக இருக்கும். செந்தூரப்பூவே எனும் தமிழ்ப் படத்தில் அது சிறப்பாக இருந்தது. பிறகு அந்த நபரை வரவழைத்து பணியாற்றினேன்.
அந்தமாதிரி சிறப்பான சப்த கலவைகளை உருவாக்கியபிறகு படத்தினை இளையராஜாவுக்குக் காண்பித்தேன்.
அப்போது புரியவில்லை, இப்போது புரிகிறது...
அவர் பார்த்தபிறகு, ‘படத்தில் ஏற்கெனவே நிறைய சப்தங்கள் இருக்கின்றன. அதனால், நான் தேவையான இடத்தில் மட்டும் இசையமைக்கிறேன். பின்னணி இசை மிகவும் குறைவாகவே தேவைப்படும்’ என்றார்.
எனக்கு அந்த நேரத்தில் அது சரியாகப் புரியவில்லை. ஆனால், இப்போது புரிகிறது.
ஒருவேளை நான் சப்தங்கள் இல்லாமல் காண்பித்திருந்தால் அவர் வேறுமாதிரி இசையமைத்திருக்கலாம் என்றார்.
இளையாராஜா அப்போதே பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.