

காந்தா திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா மிகவும் நெகிழ்ச்சியாகப் படம் குறித்து பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக ’காந்தா’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டீசர், டிரைலரால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போஸ், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்தப் படத்தில் திரைக்கதை, வசனம் எழுதிய எழுத்தாளர் தமிழ் பிரபா தனது இன்ஸ்டா பதிவில் கூறியுள்ளதாவது:
பல மாதங்களாகவே ஒரு குகைமனிதன் போல வாழ்வதால் பொது நிகழ்ச்சிகளில் புழங்கும் தயக்கத்தை மீறி காந்தா நிகழ்ச்சிக்கு செல்ல நினைத்தேன்;முடியவில்லை.
காந்தா, என்னுடைய திரைக்கதை வசனப் பங்களிப்பில் வெளியாகும் 5-ஆவது திரைப்படம். ஐந்துமே பீரியட் படங்கள். சினிமாவில் கலையரசன் என்றாலே துர்மரணம் எப்படியோ நானென்றாலே பீரியட் படங்களென்று ஆகிவிடக் கூடுமோ என அஞ்சுகிறேன்.
காந்தா அனுபவங்கள் தனித்துவமானது. 1950-களின் சினிமா தொடர்பான கதை என்பதால், அக்காலத்திய சமூகத் திரைப்படங்களைப் பார்த்தேன். சிறுகதைகளை வாசித்தேன். ஒரே காலகட்டத்தை இலக்கியமும் சினிமாவும் எவ்வாறு பிரதிபலித்திருக்கின்றன என ஓர் ஆய்வு நூல் எழுதும் அளவுக்கு இருக்கும் தரவுகள் மட்டுமின்றி, அக்காலத்தில் புழக்கத்திலிருந்த சொற்கள் ஒரு களஞ்சியமாக கைவசம் இருக்கிறது.
இச்சொற்களை ஆங்காங்கே சொருகி இலக்கிய அந்தஸ்து கொண்ட ஒரு சிறுகதையை எழுத முடியும் என்று நம்புகிறேன்.
சென்னைக்கும் ஹைதரபாதுக்கும் 6 மாத காலம் இண்டிகோவில் பறந்ததில் பக்கத்தில் உட்கார வைக்கும் அளவுக்கு பைலட்டுகளும், பணிப்பெண்களும் பழக்கமாகியிருந்தார்கள்.
ஹைதரபாத் நகர்வலம், தெலுங்கு சினிமா தொழிற்படுகிற விதம் புதிதாகவும் புதிராகவும் இருந்தது. அதிலும், அந்த ஊர் காரத்திற்கு ஆரம்பத்தில் உண்ணும்போது காந்தாரா நாயகன் போல பிளிறிக் கொண்டிருந்தேன். பின்னர் பழகியது. இதுவரை வேலை செய்த படங்களிலேயே எழுதிய வெர்ஷன்கள் தவிர, அதிக நேரம் டிஸ்கஷனுக்கு செலவிட்டது காந்தாவுக்குத்தான். டிஸ்கஷன் முடியும் ஒவ்வொரு அகால வேலையிலும் ‘பேசிப் பேசித் தீர்த்தப் பின்னும் ஏதோ ஒன்று குறையுதே’ என ராணாவும் செல்வாவும் என்னைப் பார்த்து பாடாதக் குறையாகத்தான் இருக்கும். நான் மயங்கிய நிலையில் மறுநாள் வரலாமா எனக் கேட்பேன். இதற்கிடையில் துல்கர் தயாரிக்கும் ஒரு படத்திற்கு சிறிய எழுத்துப்பணிச் செய்ய வேண்டுமென கேட்டார்கள். ஒப்புக்கொண்டு செய்தேன். படம் பெயர் லோகா!
காந்தா படப்பிடிப்பின்போது பாகுபலி பற்றி ராணாவும் பருத்திவீரன் பற்றி சமுத்திரக்கனியும் நான் கேட்டதற்கிணங்க அவ்வப்போது பகிர்ந்து கொண்டபோது க்ளாசிக்குகளின் உருவாக்கத்திற்குப் பின்னுள்ள பித்துநிலை க்ளுகோஸாக என் உடலில் ஏறியது.
காந்தா எழுத்துப்பணிக்கு உதவிய முருகன், கலைச்செல்வன் இருவருக்கும் நன்றி. ஹைதரபாதில் இருந்தபோது ஒரு கர்ப்பிணியை ஓட்டிச்செல்லும் காருண்யமிக்க ஆட்டோ ஓட்டுநர்போல என் அனுபவத்தைச் சிறப்பாக்கிய த.இராமலிங்கத்திற்கும் நன்றி. படம் நாளை மறுநாள் வெளியாகிறது. மனிதனுக்குள் இருக்கும் கீழ்மைகளை கலைப்பண்புடன் உருவாக்கிய படைப்பாக காந்தா நிச்சயம் இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.