eko poster

ஆபத்தான நாய்களுடன் சில மனிதர்கள்... எகோ - திரை விமர்சனம்!

மலையாளத்தில் வெளியான எகோ திரைப்படத்தின்
Published on
எகோ - திரை விமர்சனம்!(3.5 / 5)

கிஷ்கிந்தா காண்டம் திரைப்படத்தின் இயக்குநரின் புதிய படமான எகோ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கேரளத்தில் மலைத்தொடர்களால் சூழப்பட்ட ஒரு மலை உச்சிப்பகுதியில் தனியாக ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கிறது. அங்கு மலாத்தி என்கிற வயதான பெண் வசித்து வருகிறார். அவருக்குத் துணையாக பியோஸ் (சந்தீப் ப்ரதீப்) என்கிற இளைஞன் பாதுகாப்புக்காக இருக்கிறான். மலாத்தியின் கணவரான குரியாச்சனைப் பல ஆண்டுகளாகவே காவல்துறைத் தேடிக்கொண்டிருக்கிறது. காரணம், குரியாச்சன் பெரிய கொலைக் குற்றவாளி. சுற்றிலும் காடு நிறைந்த பகுதிகளில் மலாத்தி வசிப்பதால் குரியாச்சன் இங்குதான் இருக்க வேண்டுமென காவல்துறை விசாரணையில் இறங்குகிறது.

ஆனால், குரியாச்சன் காட்டிற்குள் ஒளிந்திருந்தாலும் எங்கிருக்கிறார் என கண்டுபிடிப்பதில் கடும் சிரமம் உருவாகிறது. விசாரணை அதிகாரியாக, நடிகர் நரேன் கதைக்குள் வந்ததும் மெல்ல மெல்ல பனி படர்வதுபோல் குரியாச்சான் யார்? அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? அவரின் மனைவியான மலாத்திக்கும் அவருடன் இருக்கும் நாய்களுக்கும் என்ன தொடர்பு? காவல்துறை அதிகாரி குரியாச்சனைப் பிடித்தாரா? என சன்ஸ்பெஸ், மிஸ்டரி திரில்லராக காட்சிகள் நகர்கின்றன.

எகோ என்றால் எதிரொலி (echo), ஈகோ (Ego) மற்றும் சுற்றுச்சூழல் (Egology) என பல கோணங்களிலிருந்தும் நாம் சிந்திக்கும்படியாக படத்தின் பெயரிலிருந்தே மர்மத்தை ஆரம்பித்த இயக்குநர் தின்ஷித் அய்யதன் படம் முடிவடைவது வரை சிந்தனையை நாலாபுறமும் பாயவிட்டிருக்கிறார். கிஷ்கிந்தா காண்டம் படத்தின் இயக்குநர் தின்ஜித் அய்யதன், திரை எழுத்தாளரும் ஒளிப்பதிவாளருமான பாகுல் ரமேஷ் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. தங்களின் முந்தைய படத்தில் குரங்கைப் பயன்படுத்தியதுபோல் இந்தப் படத்தில் நாயை மையமாக வைத்து மனிதனுக்கும் நாய்களுக்கும் இடையேயான உறவையும் அந்த உறவின் எல்லையை உடைக்கும் கணங்களையும் காட்டி அட்டகாசமான திரை அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றனர்.

விலங்குகளுக்குள் இயல்பாக இருக்கக்கூடிய அனைத்துமே மனிதனின் செல்களில் ஒளிந்திருக்கின்றன. எப்போது அது வெடித்து தன்னை ஆக்கிரமிக்கும் என்பதை அவனால் ஊகிக்க முடியாமல் போகலாம். ஆனால், அந்த வெடிப்பை வாழ்க்கை ஒவ்வொரு கணமும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த தெரிந்தவன் விலங்கிலிருந்து கொஞ்சம் விலகலைச் சந்திக்கிறான். நம் குணங்கள் அதைக் கொண்டு அளக்கவும்படுகின்றன. ஆனால், மிருகங்கள் எப்போதும் நினைவில் காடுகளைச் சுமப்பவைதான். மனிதன் தன் கீழ்மைகளை வைத்திருப்பதைப்போல. எகோவில் எதிரொலியாக இந்தக் குணங்களும், காடும் ஒன்றை ஒன்று சந்தித்து உணர்வுப்பூர்வமாக நம்மை முன்நகர்த்துகின்றன.

இரண்டாம் பாதியில் குரியாச்சன் எங்கிருப்பார் என காடுகளுக்குள் நாமும் தேடும்படியான மனவொட்டத்தைக் கொடுக்கின்றனர். ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் இறுதிக்காட்சி ஒரு உச்சத்தை நோக்கி பாய்கிறது. பின்னணி இசையுடன் அக்காட்சியை பறவைக் கோணத்தில் காட்டும்போது நமக்குள் ஓர் அச்சம் எழுந்து மறைகிறது. மனிதன் எவ்வளவு ஆபத்தான மிருகம்! என அழுத்தமாக இப்படம் சுட்டிக் காட்டுகிறது. நல்ல திரை எழுத்துக்கு அதன் கதாபாத்திரங்களே சாட்சியாக இருக்கும். இப்படத்தில் குரியாச்சனின் நம்பிக்கையான ஆளாக ஒரு கதாபாத்திரம் இருக்கிறார். அக்கதாபாத்திரத்திற்கும் நாய்களுக்குமான அகபுற வடிவமைப்புகள் பிரமாதமாகத் திரைக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.

“சில நாய்களுக்கு எப்போதும் ஒரே ஒரு முதலாளி மட்டும்தான்” போன்ற வசனங்கள் காட்சிக்குக் காட்சி பெரும்பலத்தைக் கொடுக்கின்றன. ஆனால், முதல் பாதியில் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அதேநேரம், கொளுந்துவிட்டு எரிவதற்கு முந்தைய சிறு பிழம்புபோல் அந்த மெதுவான நகர்வுகளும் திட்டமிட்டே எழுதப்பட்டிருக்கலாம் என்னும் எண்ணத்தையும் தருகின்றன.

நடிகர்களை அக்கதாபாத்திரங்களாகவே உலாவிட்டதைவிட நாய்களைப் பயன்படுத்திய விதத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. உண்மையில் இன்று இப்படியான நாயினம் இருக்கிறதா? இத்தனை பரிணாம வளர்ச்சியிலும் அதன் ஒழுங்கும் சீர்மையையும் மாறாத மதிநுட்பமும் மனிதனின் கீழ்மைகளுடன் மோதும்போது ஏற்படும் அதிர்வுகளை எகோவில் அபாரமாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் அனிமேஷன் தெரிந்தவர்களாம். அதனால், நாய்களுக்கான காட்சிகளை எப்படி எடுக்க வேண்டுமென்பதை வரைந்து பார்த்து கலந்தாலோசித்த பின்பே படப்பிடிப்புக்கு நாய்களை அழைத்து வந்திருப்பார்கள். அந்த அளவிற்குக் கச்சிதமான மேக்கிங். மலேசியா பகுதிகளுக்கான பீரியட் மேக்கிங் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கின்றன.

வளர்ந்துவரும் நடிகராக சந்தீப் பிரதீப்புக்கு திருப்புமுனையான படம். அப்பாவியாகவும் ஆபத்தானவராகவும் சந்தீப்பின் நடிப்பு சிறப்பு. மேலும், நடிகர்கள் சௌரவ் சச்தேவ், வினீத், நரேன், மலாத்தி சேச்சியான பைனா மோனின் என அவரவர் கதாபாத்திரத்தில் மிகச்சரியாகப் பொருந்தியிருக்கின்றனர்.

சந்தீப் பிரதீப்
சந்தீப் பிரதீப்

கதையும், திரைக்கதையும் ஹீரோ என்றால் ஹீரோயினாக படத்தின் ஒளிப்பதிவும், இசையும் கை கோர்த்திருக்கின்றன. பாகுல் ரமேஷ் காடுகளைக் காட்சிப்படுத்திய விதமும், நாய்களை ஓடவிட்டு அவற்றை கேமராக்குள் அடைத்த விதமும் அற்புதம். இசையமைப்பாளர் முஜீப் மஜீத்தின் பின்னணி இசைகள் வேட்டையாடுகின்றன.

மனிதன் சிந்திக்கக்கூடிய மிக ஆபத்தான விலங்கு. அவனுடைய வன்மங்களும், கோரமான பக்கங்களும் வெளிப்பட எளிய தருணம் போதும். ஆனால், அத்தருணம் நிகழ்ந்துவிட்ட பின் அவனுடன் பயணப்படப்போகும் மற்ற மனிதர்களிடமும் ஆபத்து இருக்கிறதே? இப்படி ஒவ்வொருவரின் விஷக் கணங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணையும் உணர்வு மோதல்களைத் திரை எழுத்தாளரான பாகுல் ரமேஷ் அபாரமான கிளைக்கதையுடன் இணைத்து எழுதியிருப்பது வியக்க வைக்கிறது. நம்முடைய பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்டவை நம்மை பாதுகாக்கிறதா? இல்லை, அது நம்மைக் காவலுக்கு வைத்திருக்கிறதா? என்கிற வினாவை திரைப்படம் முழுவதும் தெளித்திருக்கிறார். what a vision!

நாம் மீண்டும் மீண்டும் மலையாளத் திரைப்படங்களில் மட்டும்தான் இந்த ஆச்சரியமான எழுத்துகளையும் உருவாக்கங்களையும் காண முடியுமா? என்கிற கேள்விக்கு ஒவ்வொரு ஆண்டும் ’ஆம்’ என்பதை அழுத்திச் சொல்ல அங்கிருந்து யாராவது வந்துவிடுகிறார்கள். தமிழில் இப்படிப்பட்ட படங்களை எடுக்க ஆள் இருக்கிறதா? இல்லை, யோசிக்கவாவது யாராவது இருக்கிறார்களா? என ஆதங்கப்பட வைக்கும் திரைப்படமாகவே திரைக்கு வந்திருக்கிறது எகோ. இப்படத்தைக் குறித்து அழுத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தாண்டில் வெளியான சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று எனலாம்!

Summary

makers of kishkhinda kaandam movie team's eko movie review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com