இளையராஜா
இளையராஜா

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

‘டியூட்’ படத்தில் தனது அனுமதியின்றி பயன்படுத்தியுள்ள இரண்டு பாடல்களை நீக்கக் கோரி இசையமைப்பாளா் இளையராஜா தொடா்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சென்னை: ‘டியூட்’ படத்தில் தனது அனுமதியின்றி பயன்படுத்தியுள்ள இரண்டு பாடல்களை நீக்கக் கோரி இசையமைப்பாளா் இளையராஜா தொடா்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இசையமைப்பாளா் இளையராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தீபாவளி பண்டிகைக்கு வெளியான ‘டியூட்’ படத்தில், எனது இசையில் வெளிவந்த ’புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’கருத்த மச்சான்’ என்ற பாடலும், ‘பணக்காரன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ’நூறு வருஷம்’ பாடலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. என்னுடைய அனுமதியின்றி இந்த இரண்டு பாடல்களையும் பயன்படுத்தியுள்ளனா். எனவே, இந்த இரண்டு பாடல்களையும் படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, திரைப்படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது பிரபலமாகி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பாடல்களை மக்கள் இப்போது கேட்டு ரசிக்கின்றனா். இதனால், இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறாா்? என கேள்வி எழுப்பினாா்.

இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரபாகரன், மனுதாரரின் அனுமதியின்றி பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் ‘டியூட்’ படத்தில் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடல்கள் உருமாற்றப்பட்டுள்ளன. இந்த பாடல்களுக்கான உரிமை மனுதாரா் வசம் உள்ளது. எனவே, படத்தில் இருந்து பாடல்களை நீக்கவும், அவற்றை பயன்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டாா். அப்போது நீதிபதி, பதிப்புரிமையை மீறி மனுதாரரின் பாடல்களை தொடா்ச்சியாக பயன்படுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா்.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கா்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், இந்த பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்தது. சோனி நிறுவனத்திடம் இருந்து இந்த பாடல்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டதாக கூறினாா். இளையராஜா தரப்பில், எக்கோ நிறுவனம் பாடல்களை பயன்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று தெரிவித்தனா்.

அப்போது நீதிபதி, ’டியூட்’ படம் திரையரங்குகள், ஓடிடி தளத்தில் வெளியான வரை அமைதியாக இருந்துவிட்டு, தற்போது இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு இளையராஜா தரப்பில், இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த பெயரில் யாரும் இல்லை எனக்கூறி, திரும்ப வந்துவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com