

சின்ன திரை நவீன நாடகத்தின் முடிசூடா மன்னர் திருமுருகன் எனக் குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ள விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு பொதுவெளியில் திருமுருகனை சந்தித்ததால், ரசிகர்கள் பலர் அந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இறுதியாக சன் தொலைக்காட்சியில் கல்யாண வீடு என்ற தொடரை இயக்கி, அதில் நடித்திருந்தார். அந்தத் தொடரும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தது.
தன்னுடைய தொடர்களில் பெரும்பாலும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் திறமையை அங்கீகரித்தவர் திருமுருகன்.
சினிமா நடிகர், நடிகைகளின் முக மதிப்புக்காக தொடர்களில் நடிக்க வைக்கும் பல இயக்குநர்களுக்கு மத்தியில், எந்தவொரு பின்புலமும் இல்லாத சாதாரண நடிகர், நடிகைகளை முதன்மை பாத்திரத்தி நடிக்க வைத்து தொடரை இயக்கியவர்.
இவர் இயக்கிய மெட்டி ஒலி தொடரே இதற்கு சாட்சியாக உள்ளது. இத்தொடரில் நடித்த பலரும் புதுமுகங்களே. இத்தொடரில் நடித்த பலரும் தற்போது சின்ன திரையில் பலரால் அறியப்படும் நட்சத்திரங்களாக உள்ளனர்.
இதேபோன்று, நாதஸ்வரம் தொடரிலும் மெளலி, பூவிலங்கு மோகன் என இருவரைத் தவிர மற்ற அனைவருமே புது முகங்கள்தான். இத்தொடரில் நடித்த பல நடிகைகள் தற்போது முன்னணி பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பிறகு 2015 - 2018 வரை குல தெய்வம், 2018 - 2020 வரை கல்யாண வீடு போன்ற தொடர்களையும் இயக்கினார். இதில் நாதஸ்வரம், கல்யாண வீடு ஆகிய தொடர்களின் தயாரிப்பாளரும் இவரே.
அரங்குகளில் படப்பிடிப்பு செய்யப்படும் தொடர்களே தற்போது பெரும்பாலும் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால், அரங்குகள் இல்லாமல், நேரடியாக களத்திற்குச் சென்று படப்பிடிப்பு நடத்தப்படுவதால், உயிரோட்டமான திரைக்கதை இவரின் தொடர்களுக்கு உண்டு என்பது ரசிகர்கள் கருத்தாக உள்ளது.
திரு டிவி என்ற யூடியூப் சேனலை தொடங்கி அதில், அந்த பத்து நாட்கள், மீண்டும் வருவேன், எதிர் வீட்டு பையன் ஆகிய தொடர்களை இயக்கினார்.
தற்போது கோயிலுக்கு தனது குடும்பத்துடன் வந்திருந்த திருமுருகனை அங்கிருந்த அவரின் ரசிகர் ஒருவர் விடியோ எடுத்துப் பதிவிட்டுள்ளார். நவீன நாடக உலகின் முடிசூடா மன்னர் எனக் குறிப்பிட்டு அவர் விடியோவை பகிர்ந்துள்ளார். மீண்டும் தொடர்களை இவர் இயக்க வேண்டும் என இந்த விடியோவில் ரசிகர்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிக்க | கார்த்திகை தீபம் தொடரில் விஜய் பட நாயகி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.