
பைசன் திரைப்படத்தில் துருவ் கபடி வீரர் மணத்தி கணேசனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் துருவ் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 17 அன்று திரைக்கு வருகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என தொடர் வெற்றிகளின் மூலம் பிரபலமடைந்த மாரி செல்வராஜ் இம்முறை 1990-களிலிருந்த தென் தமிழகத்து சாதிய அடக்குமுறைகளைக் கபடி விளையாட்டுடன் இணைத்து பைசனை உருவாக்கியிருக்கிறார்.
இதில், பலரின் நிஜ கதைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. முக்கியமாக, அர்ஜூனா விருது வென்ற மணத்தி பி. கணேசனின் கதாபாத்திரத்தைத் திரைக்கு ஏற்ப மாற்றி துருவ் கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறார். இதில், துருவ் வனத்தி கிட்டானாக நடித்திருக்கிறார். இப்படத்திற்காக துருவ்வுக்கு மணத்தி கணேசன் கபடி பயிற்சியையும் அளித்திருக்கிறார்.
மணத்தி கணேசன் யார்?
தூத்துக்குடி மாவட்டம் மணத்தி கிராமத்தில் பிறந்தவர் பி. கணேசன். பள்ளியில் ஹாக்கி வீரராக விளையாட்டு ஆர்வத்தைத் துவங்கியவர், தன் ஆசிரியர் மூலம் தனக்குக் கபடியில் ஆர்வம் இருப்பதை அறிந்து பின் நாள்களில் முழுமையான கபடி வீரராக மாறுகிறார். 1980-களில் விளையாட ஆரம்பித்த கணேசன், அன்றைய தென்மாவட்டங்களில் இருந்த உள்ளூர் வீரர்களையும் கிளப் வீரர்களையும் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தன் கிராமத்திலேயே பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
கணேசன் களத்திற்குள் ரைடு சென்றால் யாராலும் பிடிக்க முடியாது; தடுப்பாட்டம் மேற்கொண்டால் எவ்வளவு பெரிய வீரர்களையும் தன் தலையால் முட்டி வெளியே தூக்கி வீசிவிடுவார் என பல ஊர்களில் கணேசனின் பெயர் பரவலான கவனத்தைப் பெற்றதும், சாதாரண கணேசனை ஊர்க்காரர்களே மணத்தி கணேசனாக மாற்றுகின்றனர். மணத்தி கணேசன் விளையாடுகிறார் என்றால் பக்கத்து ஊர்களிலிருந்து டிராக்டர்களில் நூற்றுக்கணக்காணோர் வந்து வேடிக்கை பார்க்கும் அளவிற்கு தூத்துக்குடி, திருநெல்வேலியில் பிரபலமாகிறார். காளமாடன் என்கிற பலத்திற்கு ஏற்ப தன்னை பைசன் என்றும் டைசன் என்றும்தான் வீரர்கள் அழைத்தார்கள் எனக் கூறும் கணேசன், சிறுவயதிலிருந்தே மரங்களில், சுவர்களில் தலையை முட்டி எதிரணி வீரர்களை முட்டித்தள்ள பயிற்சி பெற்றிருக்கிறார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் கபடியில் மிகப் பிரபலமான அணியான சிவந்தி ஆதித்தனாரின் சன் பேப்பர் மில் நிறுவனத்தின் கபடி அணிக்குத் தேர்வாகி சென்னை ஐ.சி.எப்., தமிழ்நாடு போலீஸ் அணிகளுக்கு எதிராக களமிறங்கி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பயிற்சியாளர்களிடமும் சக வீரர்களிடம் தேசிய அளவிற்கு தகுதியுள்ள வீரர் என்கிற பெயரைப் பெற்று பல போட்டிகளில் அபாரமாகத் தன் திறமையை வெளிப்படுத்துகிறார்.
இதனால், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு இட ஒதுக்கீடு மூலம் தமிழ்நாடு மின்வாரியத்தில் மணத்தி கணேசனுக்கு கடைநிலை ஊழியர் பணி கிடைக்கிறது. வேலைக்குச் சேர்ந்தபின்பும் முழுமையாக கபடியில் கவனம் செலுத்துகிறார். தொடர்ந்து, இந்திய அணியில் இடம்பெற்று ஆசியக் கோப்பையில் பங்கேற்றவருக்கு 1995-ல் அர்ஜூனா விருதும் வழங்கப்படுகிறது. இதற்காக, பதவி உயர்வும் கிடைக்கிறது. தற்போது, தமிழக விளையாட்டுத் துறை அதிகாரியாக பணியாற்றுவதுடன் கபடி வீரர்களுக்கு பயிற்சியளித்தும் வருகிறார்.
1980 - 90களில் மணத்தி கணேசன் விளையாடிய கபடி ஆட்டங்களை விடியோவாக எடுத்திருக்கிறார்கள். ஆனால், முறையான பரமாரிப்பு இல்லாததால் எதுவும் கிடைக்கவில்லை என வருத்தத்துடனே பதிவு செய்கிறார். பழைய புகைப்படங்களைத் தவிர, இவர் ஆடிய ஆட்டங்கள் யூடியூப் தளத்திலும் இல்லை.
பைசன் திரைப்படம் மணத்தி கணேசனின் முழுமையான வாழ்க்கைப் பதிவு இல்லையென்றாலும் அவர் எப்படி உருவானார், என்னென்ன தடைகளை எதிர்கொண்டார் என்பதை மாரி செல்வராஜ் பதிவு செய்திருக்கலாம் என்பதால் ரசிகர்களிடம் பைசன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: என் உச்சபட்ச கர்வம் பைசன்: மாரி செல்வராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.