பைசன் - திரை விமர்சனம்(3 / 5)
இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் கூட்டணியில் உருவான பைசன் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சிறுவயதிலிருந்தே கபடியின் மீது பெரும் பித்துடன் இருக்கிறார் கதைநாயகன் கிட்டான் (துருவ்). கபடிக்காகவே ஓடுவது, கபடியை மட்டுமே நினைப்பது என உடலிலும் உள்ளத்திலும் யாரையாவது முட்டித்தள்ள வேண்டும் என்கிற வேட்கை மட்டுமே கிட்டானுக்குள் இருக்கிறது. அதை அறியும் அவரது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் கிட்டானை பள்ளி கபடி அணிக்குள் கொண்டு வருகிறார். ஆனால், அந்த நேரம் எதிர்பாராத கொலையொன்று நிகழ்கிறது. இதனால், கிட்டானின் தந்தை வேலுச்சாமி (பசுபதி) தன் மகனுக்கு கபடி எல்லாம் வேண்டாம் என உறுதியாக நிற்கிறார். சொந்த குடும்பத் தடை ஒருபக்கம், பகை ஒரு பக்கம் என தவிக்கும் கிட்டான் கபடி வீரராக உருமாறினாரா? சாதிக் கலவரங்கள் நிறைந்த தென்மாவட்டத்திலிருந்து சாதனைக் குரலாக மாறினாரா? என்பதே பைசன் கதை.
1994 ஆம் ஆண்டு கபடி விளையாட்டுக்காக அர்ஜூனா விருது வென்ற மணத்தி பி. கணேசனின் வாழ்க்கையிலிருந்து சில முக்கியமான நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு சினிமாவுக்கேற்ற சில புனைகளைச் சேர்த்து, வனத்தி என்கிற ஊரின் வழியாக மாரி செல்வராஜ் பைசனில் அழுத்தமான கதையொன்றைப் பேசியிருக்கிறார். வெறும் கபடி விளையாட்டுகளும் அதன் வெற்றிகளும் மட்டுமான கதையாக இல்லாமல் 1990-களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதிக் கலவரங்களும், தீண்டாமைக் கொடுமைகளும் எந்த அளவிற்கு தலைவிரித்து ஆடின என்பதைக் காட்சிகளாகப் பார்க்கும்போது எத்தனை அநீதிகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை தோலுரித்துக் காட்டுகிறார். ஒரு விளையாட்டு வீரன் தன் சொந்த ஊரை, சாதிகளை, அதிகாரங்களை, அதன் அரசியல்களை என எவ்வளவு விஷயங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்பது பைசனில் உணர்வுப்பூர்வமாக பேசப்பட்டிருக்கிறது.
அன்று தென் தமிழகத்தில் தொடங்கிய சாதிய படுகொலைகள் இன்றளவும் நீடித்து வரும் சூழலில் பைசன் இரு சமூகத்தின் தலைவர்கள் எதற்காகக் கத்தியை எடுத்தார்கள் என்பதையும் சமத்துவத்திற்கான நியாயத்தையும் அரசியலையும் கச்சிதமாக முன்வைத்திருக்கிறார். முக்கியமாக, திருமணம் ஒன்றை நிறுத்திவிட்டு பாண்டியராஜா (அமீர்) பேசும் வசனங்கள் திரையரங்குகளில் பலத்த வரவேற்பைப் பெறுகின்றன. முதல்முறை மாரி செல்வராஜ் கொஞ்சம் திரும்பி இருபக்கம் இருக்கும் குறைகளையும் பதிவு செய்திருக்கிறார்.
உருவாக்க ரீதியாகவும் தன் முந்தைய திரைப்படங்களுக்கு என்ன உழைப்பைக் கொடுத்தாரோ அது திரையில் நன்றாகத் தெரிகிறது. வளர்த்த கிடாயை அழைத்துக்கொண்டு பேருந்தில் செல்லும்போது கிட்டானும் அவனது தந்தையும் பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அந்த ஒரு காட்சியே அன்று எந்தளவிற்குச் சாதித் தீண்டாமைகள் நடந்தன என்பதை மனம் துணுக்குற பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கிளைமேக்ஸ் வரை அந்த நிலம் எப்போதும் யாரையாவது காவு வாங்கிக்கொண்டேதான் இருக்கும் என்கிற பதற்றம் காட்சிக்கு காட்சி உணர வைக்கப்பட்டிருக்கிறது.
இக்கதை முக்கியமான விஷயங்களைப் பதிவு செய்தாலும் படத்தின் நீளத்தையும் மாண்டேஜ் காட்சிகளையும் குறைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. திரும்பத் திரும்ப அதே உணர்வுகள் வருவது போன்ற காட்சிகள் பலத்தை இழக்கின்றன.
நடிகர் துருவ்வுக்கு சிறந்த படமாகவே பைசன் அமைந்திருக்கிறது. தூத்துக்குடி இளைஞனாகவே மாறியிருக்கிறார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக கபடியை முறையாகக் கற்றுக்கொண்டு ஓராண்டுக்கு மேலாக படப்பிடிப்பு உள்ளிட்ட பிற பணிகள் என நீண்ட உழைப்பைக் கொடுத்திருக்கிறார். படம் நிறைவடையும் வரை துருவ்வை ஒரு கபடி வீரராக மட்டுமே நினைக்க முடிகிறது. அந்தத் தாக்கத்தை அற்புதமாகத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
நடிகர் பசுபதி தன் கதாபாத்திரத்தை முழுமையாகக் கட்டுக்குள் வைத்து, சாதிப் பிரச்னைகள் நிறைந்த ஊருக்குள் உள்ளங்கைக்குள் வைத்து தன் குழந்தைகளைப் பாதுகாக்கும் தகப்பனாக அட்டகாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படத்திற்காகவது தேசிய விருது வரை அவர் செல்ல வேண்டும்.
ரஜிஷா விஜயனுக்குப் பெயர் சொல்லும் கதாபாத்திரம். தன் தம்பி கிட்டானைக் கபடி விளையாட போகச் சொல்வதும், பேருந்தில் கிடாய்க்கு நேரும் அநீதியைக் கண்டு பதறுவதும் என நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். சில காட்சிகளே இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் கவனம் ஈர்க்கத்தான் செய்கிறார். அதேபோல், நடிகர்கள் அமீர், லால் ஆகியோரின் கதாபாத்திரங்களை எழுதிய விதமும் அவர்கள் பேசும் வசனங்களும் கவனத்தைக் கோருகின்றன.
ஒளிப்பதிவாளர் எழில் அரசனும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவும் தூண்போல் பணியாற்றியிருக்கிறார்கள். கபடி ஆட்டங்களை எடுத்த விதம், விவசாயம் செய்யும் காட்சிகள், பல டிரோன் ஷாட்டுகள் என வனத்தியை ரத்தமும் சதையுமாகக் காட்டிருயிருக்கிறார். நிவாஸ் கே பிரசன்னாவுக்கு இனி நிறைய வாய்ப்புகள் வரும் அளவிற்கு படம் முழுவதும் தன் இசையால் உயிர்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சாதிக்கலவரங்களுக்கான பின்னணி இசைகளும் தென்னாட்டு தேசத்தில், தீக்கொழுத்தி ஆகிய பாடல்களும் தனித்து நிற்கின்றன. மாரி செல்வராஜ் இருவரையும் முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
காதல், குடும்பம் என சில வாழ்க்கைக் கடமைகள் இருந்தாலும் சாதியும் பகையும் நிறைந்த ஊரிலிருந்து பல தடைகளைத் தாண்டி எப்படி ஒருவன் திமிறி எழுகிறான் என்கிற கதையில் இன்று தென்மாவட்டங்களில் நடக்கும் சாதிய கொடூரங்களையும் அதன் பின் செல்பவர்களையும் ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் படமாகவே பைசன் திரைக்கு வந்திருப்பதுடன் இந்தாண்டின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று என்கிற இடத்தை நோக்கி பலமாகப் பாய்கிறது!
இதையும் படிக்க: பைசன் - காளமாடன் வெல்லட்டும்! உதயநிதியின் ரிவ்யூ!
director mari selvaraj's bison movie review
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.