காதல் தியாகம்! இது GEN Z EDITION! DUDE: திரை விமர்சனம்

காதல் தியாகம்! இது GEN Z EDITION! DUDE: திரை விமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள டியூட் திரைப்படத்தின் விமர்சனம்..!
Published on
DUDE(3 / 5)

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் GEN Z காதல் கதையாக வெளியாகியுள்ள இந்த டியூட் திரைப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?  

எல்லாவற்றிற்கும் முன்னதாக கதையின் களம் என்னவென்றால் (NO SPOILER) காதலிக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு எல்லைக்குச் செல்வார்கள்! திரை Scale-லிலும் சரி, தரை Scale-லிலும் சரி! ஒவ்வொரு எல்லைகள் வரையப்படும். அப்படி பிரதீப் ரங்கநாதன் வரைந்திருக்கும் புதிய தியாகம்தான் இந்த டியூட்! அந்த தியாக முயற்சியில் வென்றாரா? இல்லையா? என்பதைத்தான் காமெடி கலந்த கதைக்களமாக கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன்
டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன்

முதலில் படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்புகளுக்குக் காரணம் ""100 கோடி நாயகன்" என மீம் கிரியேட்டர்களால் பாசமாக அழைக்கப்படும் பிரதீப் ரங்கநாதன்தான்! இதுவரை தான் இயக்கிய, நடித்த எல்லா படங்களிலும், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை மட்டுமே பதிவு செய்திருக்கிறார். அப்படி அவருடைய இந்த Pick கண்டிப்பாக ஒரு நல்ல ENTERTAINER-ஆக இருக்கும் என்ற எதிர்பார்ப்புதான் பரவலாக உருவானது. இந்த திரைப்படத்தில் அந்த நம்பிக்கையைக் கண்டிப்பாக காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஒரு கமெர்ஷியலான, இளம் ரசிகர்களைக் கவரும் படமாகவே இந்தப் படம் உருவாகியுள்ளது. டிரெய்லரைப் பார்த்துவிட்டு பிரதீப் வழக்கமான நடிப்பையே கொடுக்கிறார், ஒரே மாதிரியாக நடிக்கிறார், கத்துகிறார், குதிக்கிறார் என்ற எதிர்மறை கருத்துக்கள் உலாவிவந்தாலும், அந்த நெகட்டிவ்வாக சொல்லப்பட்ட விஷியங்களையே இந்தப் படத்தில் தன்னுடைய பாசிட்டிவ்வாக காட்டியுள்ளார். காமெடி காட்சிகளில் அவருடைய HIGH PITCH COUNTER-களும், நடிப்புமே இந்த ஹீரோவாக ரசிக்க வைத்துள்ளது. நடிப்போடு சேர்த்து படம் முழுவதும் STYLE -ஆக வலம் வந்திருக்கிறார், சோப்பு, போன், குடை, சாக்லேட், ஹெல்மெட், பிஸ்கட், பால்பாக்கெட், கூலிங் கிளாஸ் எனக் கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுப் பிடித்து புதிய டிரெண்டை செட் செய்கிறார். கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, வெறும் கையால் சொடுக்கு போட்டு, வானத்தைக் காட்டி அதிலும் STYLE காட்டுகிறார். மொத்தமாக இந்தப் படம் கேட்கும் ஹீரோவாக தனது வேலையைச் சரியாக செய்திருக்கிறார். 

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ
டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ

அடுத்ததாக தமிழில் களமிறங்கியிருக்கும் கதாநாயகி, மமிதா பைஜு! திரை முழுதும் அழகாக வலம் வருகிறார், அழும் காட்சிகளில் சோகமாக வைக்கிறார், சீரியஸான காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார், சில இடங்களில் புதுமையாகவும் தெரிகிறார், ஆக மொத்தத்தில் அடுத்து சில ஆண்டுகளுக்கு தமிழில் தங்கத் தயாராகிவிட்டார்.

அடுத்ததாக நடிப்பிலும் கதாபாத்திரமாக மனதில் நிற்பவர், சரத்குமார். ஆரம்பம் முதல் சாதாரண “TYPICAL மாமா” கதாபாத்திரமாக இருக்கப்போகிறார் என நினைக்கையில் இடைவேளை நெருங்கும்போது SURPRISE கொடுத்து மிரட்டுகிறார். படம் முழுதும் சிரிக்க வைக்கும் ஆனால் TERROR வில்லனாக ரசிக்க வைக்கிறார். 

டியூட் படத்தில் சரத்குமார்
டியூட் படத்தில் சரத்குமார்

அடுத்ததாக மீதமுள்ள குட்டிக்குட்டிக் கதாபாத்திரங்களாக வலம் வரும் அனைவருமே சரியாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். தமிழில் புதிதாக தலை காட்டியிருக்கும் ஹ்ரிது ஹரூன் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அடுத்ததாக எழுத்தாளர் மற்றும் இயக்குநருக்கு வருவோம். கீர்த்தீஸ்வரன், தனது முதல் படத்தை வெற்றிகரமாக எடுத்துமுடித்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள். காமெடி படம் எடுப்பதை தனது நோக்கமாகக் கொண்டிருந்தால் அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார். முதல்பாதி எந்த தொய்வும் இல்லாமல், விறுவிறுவென சென்று முடிகிறது. இடைவேளையை நெருங்கும்போது அரங்கம் சிரிப்பில் அதிர்கிறது. விசில் பறக்கிறது. இரண்டாம் பாதியில் லேசான சறுக்கலைக் கொண்டிருந்தாலும் சரியான நேரத்தில் நிமிர்ந்து நின்று ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது.

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன்
டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன்

இந்தக் கதை, இந்தக் களம் கண்டிப்பாக சிலரை முகம் சுழிக்க வைக்கலாம் என்பதைப் புரிந்து வசனங்களால் அவர்களையும் சேர்த்து சமாதானம் செய்ய முயன்றிருப்பது சிறப்பு. சரத்குமார் கதாபாத்திரத்தை கமெர்ஷியல் பார்வையில் காட்டியதும் பாராட்டுக்குரியது எனச் சொல்லலாம். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் நல்ல முறையில் கையாண்டு, தேவையான Screen Space அளித்து, அனைவருக்கும் ஒரு CLOSURE-ஐக் கொடுத்திருக்கிறார். ஒரு நல்ல ஆனால் கொஞ்சம் வழக்கமான வாசம் அடிக்கும் கமெர்ஷியல் விஷயங்களை இதில் கொடுத்து படத்தை வெற்றிப்பாதையில் நகர்த்தியிருக்கிறார். 

ஆனால், பிரதீப் கதாபாத்திரம் கொண்டுள்ள காதலின் ஆழத்தைக் காட்டுவதும் அவருடைய நோக்கம் என்றால் கொஞ்சம் தடுமாற்றம் தெரிகிறது. ஏனெனில் அவர் மமிதா மீது கொண்டுள்ள காதலின் அளவு, “என் மூச்சவ, பேச்சவ…” என்ற அப்யங்கரின் இரண்டு வரி இசையில் MONTAGE-ஆக மட்டுமே காட்டப்படுவதால், அந்தக் காதலோடு ஒன்ற முடியவில்லை. இரண்டாம் பாதியில் மமிதா பிரதீப்புக்காக எடுக்கும் முடிவில் இருந்திருக்க வேண்டிய MASS-ஐ உணர முடியவில்லை. பிரதீப் கதாபாத்திரத்தை முடித்துவைத்துள்ள விதம், பிரதீப்பின் காதல் குறித்த புரிதலைக் கேள்விக்குள்ளாக்குகிறது. 

நிக்கெத் பொம்மியின் ஒளிப்பதிவு படம் முழுதும் பலமாகத் தெரிகிறது. சண்டை முதல் காதல்வரை எல்லாவற்றையும் சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரதீப்பின் ஸ்டைல் காட்சிகள் ரசிக்கப்பட அவரும் முக்கியக் காரணம். 

சாய் அப்யங்கரின் இசை படம் முழுதும் பொருந்திப்போகிறது. பின்னணி இசையும், பாடல்களும் மனதில் நின்றுவிடுகிறது. அவரின் மீது விழுந்துவரும் நெகட்டிவிட்டிகளை இதுபோன்ற 2, 3 மூன்று படங்கள் மூலம் தூக்கி எறிவார் எனக் கண்டிப்பாக நம்பலாம்.

முடிவாகச் சொல்லவேண்டுமெனில் இந்த டியூட் கண்டிப்பாக இந்த தீபாவளிக்கு நீங்கள் குடும்பத்துடன், முக்கியமாக, நண்பர்களுடன் சென்று ரசித்துவிட்டுவரக் கூடிய படமாகவே உருவாகியுள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com