

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு செல்லும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 9 சீசன் கடந்த அக். 5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு, 30 நாள்கள் ஆன நிலையில், வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, நடிகை கெமி, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்ஷா, விக்கல்ஸ் விக்ரம், கமுருதீன், கலையரசன் ஆகிய 16 பேர் உள்ளனர்
கடந்த வாரங்களில் நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, அப்சரா, நடிகை ஆகியோர் வெளியேறினர்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டுவதற்காக, வைல்ட் கார்டு போட்டியாளர்களை களமிறக்க நிகழ்ச்சி குழு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் நுழைவு மூலம் செல்லவுள்ள 4 போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திவ்யா கணேசன்
வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்கு சின்ன திரை நடிகை திவ்யா கணேசன் செல்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
கேளடி கண்மணி, லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி, பாக்கியலட்சுமி, அன்னம், மகாநதி ஆகிய தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ப்ரஜின் - சான்ட்ரா
மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சான்ட்ரா. இவர் ஏராளமான தமிழ் தொடர்களில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். இவர் சின்ன திரை நடிகர் ப்ரஜினை திருமணம் செய்துகொண்டார்.
தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருந்து சின்ன திரைகளில் நடித்து கவனம் பெற்ற நடிகர் ப்ரஜின், காதலிக்க நேரமில்லை தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
தற்போது, ப்ரஜன் மற்றும் அவரின் மனைவி சான்ட்ரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக நுழையவுள்ளனர்.
அமித் பார்கவ்
கன்னட தொடர்களில் நடித்து சின்ன திரையில் அறிமுகமான அமித் பார்கவ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து பிரபலமானவர்.
மகாபாரதம் தொடரில் கிருஷ்ணராக நடித்து கவனம் பெற்ற இவர், நெஞ்சம் மறப்பதில்லை, திருமதி ஹிட்லர் உள்ளிட்ட தொடர்களிலும் ஹார்ட் பீட் இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.
வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, ஏற்கெனவே உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் மனநிலையை புரிந்துகொண்டு செல்வதால் ஆட்டம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: சக்தித் திருமகன் கதை திருடப்பட்டதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.