இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படங்களைத் தயாரிப்பதை நிறுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமான உதயம் என்எச்4 வெற்றிப்படமானது.
தொடர்ந்து, நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்தார். சில திரைப்படங்கள் லாபகரமாக அமைந்தது.
ஆனால், இறுதியாக வெற்றிமாறன் தயாரித்த மனுசி, பேட் கேர்ள் ஆகிய திரைப்படங்கள் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்தது. இதில், பேட் கேர்ள் வருகிற செப். 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், “ஒரு தயாரிப்பாளராக இருந்தால் படம் பேசவரும் கருத்துகளுக்கான எதிர்வினைகளையும் சந்திக்க வேண்டும். இது படத்தின் வணிகத்தையும் பாதிக்கும் என்பதால் தயாரிப்பாளராக இருப்பது அழுத்தம் தரக்கூடியதாக உள்ளது. ஏற்கனவே, மனுசி நீதிமன்ற சிக்கலைச் சந்தித்தது. இனி என்ன பிரச்னை வரப்போகிறது எனத் தெரியவில்லை. பேட் கேர்ள் திரைப்படமும் தணிக்கைக்குச் சென்று 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படம் என்கிற சான்றிதழைப் பெற்றுள்ளது.
எங்களைப் போன்றவர்கள் சிறிய தயாரிப்பாளர்கள் என்பதால் கடன் பெற்றுத்தான் திரைப்படங்களைத் தயாரிக்கிறோம். இது சவாலாக இருக்கிறது. இதனால், பேட் கேர்ள் திரைப்படம்தான் என் கடைசி தயாரிப்பு என்கிற முடிவை எடுத்திருக்கிறேன். இனிமேல், கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி திரைப்படங்களைத் தயாரிக்காது. கடையை இழுத்து மூடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
வெற்றி மாறனின் இப்பேச்சு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. முற்போக்கான சிந்தனைகள் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்தால், அதற்கு எதிரானவர்களால் படமும் அதன் வணிகமும் பாதிக்கப்பட்டு வெற்றி மாறன் போன்றவர்களையே தயாரிப்பிலிருந்து விலகச் செய்துள்ளதாக ரசிகர்கள் தங்கள் ஆதங்கங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: அஜித் - ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.