கஜினி பாணியில் சிவகார்த்திகேயன்! அமரனை வெல்லுமா மதராஸி? திரை விமர்சனம்
மதராஸி (3 / 5)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் குறைவான எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள மதராஸி திரைப்படம் SK-வின் அடுத்த வெற்றியாக அமைந்ததா? ஏ.ஆர். முருகதாஸுக்கு Comeback கொடுத்ததா?
மதராஸியின் கதைக்களம் என்னவென்றால்...
யாருக்கு ஆபத்து என்றாலும் உடனடியாக சென்று உதவி செய்யும் நாயகன் ரகுவிற்கு மனநலத்தில் சிறிய பாதிப்பு உள்ளது! அந்த பாதிப்பே உதவி செய்வதுதான். யாராக இருந்தாலும் சரி, உயிரைக் கொடுத்து உதவி செய்யுமளவில் ஒரு நல்ல எண்ணம் கொண்டவர். சிறுவயதில் ஏற்பட்ட ஒரு அசம்பாவிதத்தால் இந்த மனநோய்க்கு ஆளாகிறார். இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டிற்குள் துப்பாக்கி கலாசாரத்தை அதிகரிக்க நினைக்கும் ஒரு கும்பலைத் தடுக்க, உளவுத்துறை போராடுகிறது. இந்த போராட்டத்திற்குள் ரகு எப்படி நுழைகிறார்? அவரது உளவியல் நோய்க்கான காரணம் என்ன? அந்த நோய் அதிதீவிரமடைந்தால் என்னவாகும்? என்ற கேள்விகளுக்கான விடையே இந்த மதராஸி!
முதலில் இந்தப் படத்தில் நாம் பேச வேண்டிய முக்கியமான ஆள் துப்பாக்கியைக் கையில் வைத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றிதான்! அமரன் திரைப்படத்தில் காமெடி ஹீரோ என்ற பெயரைக் களைந்து, ஆக்சன் ஹீரோவாக திரையில் மிளிர்ந்தார். மிகப்பெரிய வெற்றியும் பெற்றார். அதன்பின் துப்பாக்கியையும் கையில் வாங்கி இப்போது மதராஸியாக வந்திருக்கும் SK, இதிலும் ஆக்சன் ஹீரோவாகக் கலக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தோற்றத்தில் புதுமையான விஷயங்களை படக்குழு அவர் மீது புகுத்தாவிட்டாலும், நடிப்பில் ரகுவாக திரையில் தெரிய, SK செய்துள்ள முயற்சிகள் நன்றாக இருக்கின்றன. வெகுளியாகச் சிரிப்பதானாலும், மற்றவர் கஷ்டங்களுக்கு இவர் அழுதுகொண்டு ஓடுவதானாலும் ஒரு இலகுவான இதயம் கொண்டவனாகவும், இரண்டாம் பாதியில் கழுத்தை திருப்பிக்கொண்டு வெறியோடு சண்டை போடும் காட்சிகளானாலும், நடிப்பில் சிறப்பான பங்கை இந்தப் படத்திற்குச் செய்துகொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறனையும் ஹீரோ பரிணாமத்தையும் நிரூபித்துக்கொண்டேயிருக்கிறார்.
அடுத்ததாக முக்கிய ஆள், இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஏ.ஆர். முருகதாஸ். தொடர் வெற்றிகளுக்குப் பிறகு, சில சறுக்கல்களைச் சந்தித்தவர் இந்தப் படத்தில் Comeback கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. எனவே தனது பழை உத்தியான கஜினி போன்ற உளவியல் பிரச்னையை பலமாகக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். அதன்படி உண்மையில் விட்ட இடத்தைப் பிடிக்காவிட்டாலும், கமெர்ஷியல் பந்தயத்தில் மீண்டும் இறங்கியுள்ளார் எனச் சொல்லலாம்! சமீபத்திய பெரிய இயக்குநர்கள் போல், யார் தப்பு செய்தாலும் 10 பேரானாலும் பறக்கவிடும் வழக்கமான ஹீரோவைக் கொடுக்காமல் அவருக்கென ஒரு கதையைக் கொடுத்து, பலத்திற்கான காரணத்தைக் கொடுத்து நம்மைக் ஏமாற்றாமல் கொஞ்சம் தப்பிக்கிறார்.
ஆரம்பத்தில் வழக்கமான ஏமாற்றம்தான் மிஞ்சும் போலத் தெரிந்தாலும், படம் நகர நகர, ஒழுங்கான கமெர்சியல் படமாக விரிகிறது. இருந்தாலும் கஜினியைப் போலவே விறுவிறுப்பு குறையாமல் இருக்கிறதா என்று பார்த்தால், அங்கங்கு கொஞ்சம் சலிப்பு தட்டத்தான் செய்கிறது. அதற்கு திரைக்கதையையே காரணமாகச் சொல்லலாம்.
கதையாகச் சொல்லும்போது சில காட்சிகள் நன்றாகவும், ஆனால் திரையில் பார்க்க சுமாராகவும் இருக்கும்! அப்படி சில காட்சிகள் இதில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக, இடைவேளைக் காட்சி! டென்சன் உச்சத்தைத் தொட வேண்டிய ஒரு காட்சி, போதுமான விறுவிறுப்பு இல்லாததால் விசில்களைத் தவறவிடுகிறது. கமெர்சியல் என சில விஷயங்களுக்கு கண்ணைக் கொடுக்காமல் சென்றாலும், சில காட்சிகள் உருத்தலாகத்தான் இருக்கின்றன. அதிலும் க்ளைமேக்ஸ் கொஞ்சம் சலிப்பு தட்டும் வகையிலும் புதுமையில்லாமலும் இருப்பது ஒரு சின்னஞ்சிறிறிய மைனஸ் எனலாம். ஆனால் மொத்தமாகப் பார்க்கையில், கடந்த கால தோல்விகளை மிஞ்சி, தேர்ச்சி பெறும் அளவிலான படத்தைக் கொடுத்து வெற்றிப் பாதை நோக்கிய பயணத்தை மீண்டும் துவங்கியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்..
அடுத்ததாக படத்தில் நடித்துள்ள இதர முக்கிய கதாப்பாத்திரங்களான, பிஜு மேனன், ருக்மினி உள்ளிட்டோர் தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். ருக்மினி அடுத்து கொஞ்ச காலத்திற்கு தமிழ் ரசிகர்கள் தலையில் சுற்றுவருவார் என்பதில் சந்தேகமில்லாத அளவில் அழகாக நடித்துள்ளார். பிஜு மேனனுக்கு முழு நடிப்பைக் காட்டும் அளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும், கதை கேட்கும் நடிப்பைக் கொடுத்துள்ளார். வில்லனாக இரண்டாவது ரவுண்டு வந்திருக்கும் வித்யூத் ஜம்வால் ஆக்சன் காட்சிகள் மிரட்டியுள்ளார். Physics-ஐ கண்டுகொள்ளாத சண்டைகள்தான் என்றாலும், கமெர்சியல் ஆக்சன் பட ரசிகர்கள் விரும்பும்படி சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டு, அதில் அசத்துகிறார் வித்யூத். அவருடன் இரண்டாவது வில்லனாக வந்த ஷபீர் கல்லரக்கல்லும் வில்லனாக மிளிர்கிறார்.
ஒளிப்பதிவில் சுதீப் எல்மோன் நல்ல வேலைபாட்டைச் செய்துள்ளார். இருந்தாலும் அவரது திறமையைக் காட்ட ஒருசில இடங்கள் மட்டுமே அவருக்குக் கிடைத்ததாகவும் படுகிறது. சண்டைக் காட்சிகள் சிலவற்றில் மட்டுமே அவரது முழு வேலைபாடு கண்ணில் படுகிறது.
இசையில் அனிருத்தின் 100 சதவீதம் என்று சொல்ல முடியாவிட்டாலும், சண்டைக் காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி இசையைக் கொடுத்துள்ளார். ஆனால் அதிக நாள் ரசிகர்களிடம் நிலைத்து நிற்கும் இசையாக இந்தப் படம் இல்லை என்பது முக்கியமானதொன்று.
சண்டைக் காட்சிகளில் அங்கங்கே அறிவியல் Offline சென்றாலும், மொத்தமாக ரசிக்கும்படியான சண்டைக் காட்சிகளை கெவின் குமார் மற்றும் திலிப் சுப்பராயன் குழு செய்துகொடுத்துள்ளது.
மொத்தமாகப் பார்த்தால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடும் படமாக இந்த மதராஸி உருவாகியுள்ளது எனச் சொல்லலாம். மாபெரும் வசூல் வெற்றியை நோக்கியோ, அல்லது அமரனைப் போல சிவகார்த்திகேயனின் அடுத்த படியாகவோ, அல்லது ஏ.ஆர். முருகதாஸின் முழுமையான கம்பேக்காகவோ இந்தப் படம் இல்லாவிட்டாலும், கமெர்சியல் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிக்கும் படமாக இந்த மதராஸி திரைக்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.