
பிரதமர் மோடியின் பாடலுக்கு இசையமைத்ததால் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திரைத்துறையில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைத்து வருகிறார். வெயில் திரைப்படத்தின், ‘வெயிலோடு விளையாடி’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை ஆட்கொண்டவர் பல வெற்றிப் படங்களுக்கு தன் இசையமைப்பின் மூலம் பெரிய வெளிச்சங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
தற்போது, நாயகனாக நடித்து வருவதுடன் 10 மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.
இந்த நிலையில், நேற்று (செப். 17) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜிவி பிரகாஷ், “இசையமைப்பாளராகவும் , பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும், 140 கோடி மக்களின் பாதுகாவலர், எனது பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளிற்கு மக்களின் சார்பாக இந்த அன்பு பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைகிறேன். நீண்ட நெடிய ஆயுளோடு மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என பிரதமர் மோடியை வாழ்த்தும், ‘ஒரு ஏழைத்தாயின் மகன்’ என்கிற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்த விடியோவை பகிர்ந்திருந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ஜிவியின் இசையில் உருவான இப்பாடலுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதுடன் ஜிவி பிரகாஷைத் தாக்கியும் வருகின்றனர்.
குறிப்பாக, தேசிய விருதுகளுக்காக ஜிவி பிரகாஷ் மாறிவிட்டார் என எழுதி வருவதுடன் சிலர் ஜிவியைப் பின்தொடர்வதையும் நிறுத்திவிட்டதாகப் பதிவிட்டுள்ளனர்.
மேலும், வலதுசாரி சிந்தனைகளுக்கு எதிரான இயக்குநர் சி.எஸ். அமுதன், ”அபாரம் ஜிவி பிரகாஷ். இதுதான் உங்கள் சொத்தாக இருக்கும்” என விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழின் முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைத்தது அரசியல் ரீதியாகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரம், பாஜகவினர் ஜிவி பிரகாஷுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.