
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிறகு மலையாள சினிமாவின் பாரம்பரியம் குறித்து நடிகர் மோகன் லால் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தங்கள் மலையாள சினிமா பாரம்பரியத்தின் குரலாக என்னைத் தேர்வு செய்துள்ளதாக எண்ணிப் பெருமைகொள்வதாகவும் குறிப்பிட்டார்.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (செப். 23) நடைபெற்றது. தேசிய விருதுக்குத் தேர்வான கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
இதில், வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை மலையாள நடிகர் மோகன்லாலுக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார். அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த மிகுந்த நெகிழ்ச்சியுடன் மோகன்லால் விருதைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் மோகன் லால் பேசியதாவது,
''மலையாளத் திரைப்படத் துறையின் பிரதிநிதியாக, இந்த தேசிய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கிறேன். மாநிலத்திலிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறும் இளைய மற்றும் இரண்டாவது நபராக பணிவுடன் இந்த விருதை ஏற்கிறேன். இந்த தருணம் என்னுடையது மட்டுமல்ல. ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது.
இந்த விருதை மலையாள சினிமாவின் பெருமை, மரபு, படைப்பாற்றலுக்கு கிடைத்த ஒட்டுமொத்த மரியாதையாகப் பார்க்கிறேன்.
தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ளதாக மத்திய அரசிடமிருந்து அழைப்பு வந்ததும் வெறுமனே பெருமை அடையவில்லை பதிலாக, எங்கள் சினிமா பாரம்பரியத்தின் குரலாக என்னைத் தேர்வு செய்துள்ளதாகப் பெருமிதமடைந்தேன்.
தங்கள் இலக்கு மூலமும் கலைத்திறன் மூலமும் மலையாள சினிமாவை முன்னகர்த்திச் சென்றவர்களின் சார்பாக நான் இந்த விருதைப் பெற்றுக்கொள்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் இந்த தருணத்தை கனவு காணக் கூட நினைத்ததில்லை'' என மோகன் லால் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.