

ஜனநாயகன்: நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜன நாயகன் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தணிக்கைச் சான்று கிடைப்பதில் தொடர் தாமதம் நிலவுகிறது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில், உடனடியாக தணிக்கைச் சான்றிதழை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று காலை அவசர வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, ”ஜன நாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கேட்டு மறு ஆய்வுக்காக தணிக்கை வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக தெரிவித்து சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது” என்று படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து, மத உணர்வைப் புண்படுத்தும் காட்சிகள் தொடர்பான புகாரைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
இதன்காரணமாக இன்னும் ஜன நாயகன் படத்துக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமல் இருக்கிறது.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு வருகின்ற 12 ஆம் தேதி தில்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.