அச்சம் என்பது மடமையடா! கோட்டை விட்ட திரைக்கதை!

கெளதம் வாசுதேவ் மேனனின் படங்களுக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு
அச்சம் என்பது மடமையடா! கோட்டை விட்ட திரைக்கதை!
Published on
Updated on
4 min read

சில இயக்குனர்களின் படங்களுக்கு நிச்சயம் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு இருக்கும். மின்னலே படத்தில் தொடங்கி அச்சம் என்பது மடமையடா வரையில் கெளதம் வாசுதேவ் மேனனின் படங்களுக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்து வந்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் கெளதம் மேனனின் மேஜிக் நிகழ்ந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.

அவன் அவளுடைய தோழியின் அண்ணன். விஸ்காம் முடித்துவிட்டு தோழியின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருக்கிறாள். (அவளைக் கண்டதும் காதல் கொள்கிறான் அவன்). அவளுக்கோ அவனுடைய பெயர் கூட தெரியாது. எதிர்ப்படும் சமயங்களில் புன்னகைகளை பரிமாறிக்கொள்வதும், உறக்கமற்ற இரவுகளின் அரட்டைகளும் மட்டுமே அவனைப் பற்றிய அறிதல்கள். இந்நிலையில் அவனுடன் ஒரு நீண்ட பயணத்தை தொடங்க முடிவெடுக்கிறாள் லீலாவாகிய அவள் (மஞ்சிமா மோகன்).  லீலாவுக்கும் அவனுக்கும் (சிம்பு) இடையேயான காதலும், அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும், குழப்பங்களும் அதன் பின்னணியும், சில ப்ளாஷ்பேக்குகளின் தொகுப்பு தான் இந்த ரொமான்ஸ் ஆக்‌ஷன் படம்.

எதிர்ப்பார்த்தவை மட்டுமே வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்குமா என்ன? பல விஷயங்கள் நம் கைமீறித் தானே நிகழ்கின்றன. இரவில் உறங்கச் செல்லும் முன் இன்று நள்ளிரவு முதல் உங்களிடம் இருக்கும் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று ஒரு அரசு அறிவிக்கும் என்று நாம் எதிர்ப்பார்த்தோமா என்ன? சொந்த வாழ்க்கை மட்டுமல்லாமல் அரசியல், சமூகம் என பல தளங்களில் எதிர்பாராதவையே நிகழ்கின்றன. அவற்றின் மொத்த தொகுப்புத்தான் மனித வாழ்க்கை. வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் நம்மை அதற்குத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் இது தான் இப்படத்தின் ஒரு வரிக் கதை.

எழுத்தாளர் ஜி.நாகராஜனின் புகழ்ப்பெற்ற வாக்கியமான நாளை மற்றொரு நாளே’ என்ற வாக்கியம் போல ஒரேவிதமாகப் போய்க்கொண்டிருந்த நாயகனின் வாழ்க்கையில் திடீர் என்று ஒரு திருப்பம் ஏற்படுகிறது. காதல் என்ற ஒன்று மனத்துக்குள் முகிழ்ந்தபின் ஒவ்வொரு நாளும் அவனுக்கு புத்தம் புதிது. காதல் தரும் ஒளிய அவன் உள்ளும், புறமும் சிற்சில மாற்றங்களுக்கு உட்படுகிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. விட்டேத்தியாகத் திரிந்து கொண்டிருந்தவனை பொறுப்புள்ளவனாக மாற்றுகிறது. அவளுடனான பைக் பயண முடிவில் அவன் முற்றிலும் வேறு ஒருவனாக மாறி, அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை திசை மாற்றப்படுகிறது. சாவின் விளிம்பில் நின்று கொண்டு செயலற்ற நிலையில் துரிதமான சில முடிவுகளை எடுக்கச் செய்கிறது. துப்பாக்கியைக் கையில் எடுத்தவன் அதைக் கீழே போட்டானா அல்லது மிச்சமிருக்கும் வாழ்க்கை முழுவதும் தன்னுடன் தக்க வைத்துக் கொண்டானா என்பதை அழகியலுடன் இத்திரைப்படத்தில் விளக்கியிருக்கிறார் கெளதம் மேனன்.

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பரிசாய் கிடைத்திருப்பது மீண்டும் மீண்டும் கேட்க / பார்க்கத் தூண்டும் பாடல்கள். விக்னேஷ் இயற்றியுள்ள ஷோக்காலி பாடலும், மதன் எழுதியுள்ள ’இது நாள் வரையும்’ பாடலும் அச்சு அசல் ஏ.ஆர்.ரஹ்மான் மேஜிக். பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை நானும் அவளும் பாடலில் சுகமான மெட்டில் இசையமைத்துள்ள ரஹ்மானை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கவிஞர் தாமரையின் வரிகளில் தள்ளிப் போகாதே, ராசாளி பாடல்களும் அருமை. படம் வெளிவருதற்கு முன்னரே வைரலாகிவிட்டன பாடல்கள். இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்களித்திருப்பது இசை. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை இன்னொரு தளத்துக்கு உயர்த்திச் சென்றது ஏ.ஆர். ரகுமானின் இசைதான். அதே போல அச்சம் என்பது மடமையடா படத்தின் முதல் பாதியை முழுக்க முழுக்க தன் இசையால் ஆக்கிரமித்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான். தள்ளிப் போகாதே, ராசாளி ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் பாடல்களை முணுமுணுக்காத உதடுகள் இல்லை. படத்தின் முதல் பகுதி பாடல்களுக்கு இடையில் தான் வருகிறது எனும்படி ஒவ்வொரு பாடலும் கதையோட்டத்துடன் ஒத்திசைவாக, சிறப்பான ஒளிப்பதிவுடன் காண்பவர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் உள்ளிட்ட அனைவரின்  நடிப்பும் இயல்பும் எதார்த்தமானதாகவும் இருந்தது. லீலாவை (மஞ்சிமா மோகன்) சுதந்திரமான சிந்தனையுள்ள பெண்ணாக சித்தரித்ததற்கும், கதையின் மையப்பாத்திரமாக நாயகியை முன் நிறுத்தியதற்கும் இயக்குனரை பாராட்டலாம். மஞ்சிமா மோகன் ஆரம்பத்தில் சிம்புவுடனான காதல் காட்சிகளிலும் சரி, அப்பா அம்மாவுக்காக துடித்து துயர் அடையும் காட்சிகளாகட்டும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சிரிப்பும், நெகிழ்ச்சியும், உயிர்ப்பும் நடிப்புமாக ஒரு நாயகியை திரையில் உலவ விட்டிருக்கும் கெளதம் மேனனை பாராட்டலாம்.

படத்தைத் தூக்கி சுமப்பவரான சிம்பு கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல் பொங்கி வழியும் கண்களும், தாடிக்குள் மலர்ந்த முகமுமாக சிம்புவின் புதிய தோற்றம் அழகு. முக்கியமாக தள்ளிப் போகாதே பாடல் காட்சியில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் முகபாவங்கள், ஆக்‌ஷன் காட்சிகளில் சுறுசுறுப்பு, பொறியில் சிக்கிவிட்ட இயலாமையின் கணங்களில் கண்களால் வெளிப்படுத்தும் துயர் போன்ற முக்கிய இடங்களில் மிகையற்ற நடிப்பால் அசத்தியிருக்கிறார். சிம்புவின் அப்பாவாக நடித்திருப்பவர் தன் மகனின் பெயர் சொல்லும் ஒற்றை வரி வசனத்தில் கைதட்டல் பெறுகிறார். தமிழ் திரைக்கு ஒரு அழகான அப்பா கிடைத்துள்ளார். பாபா சேகலின் நடிப்பு அவர் திடீரென்று பேசும் தமிழ்ச்சொற்கள் கருத்தை கவர்வதில்லை. டேனியல் பாலாஜி தூக்கக் கலகத்தில் வந்து நடித்துவிட்டுப் போயிருப்பதைப் போல திரையில் தோன்றுகிறார். அவரின் பாத்திரப்படைப்பும் முழுமை அடையவில்லை.  

படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் நாயகனின் பைக். பைக் தான் சிம்புவின் முதல் காதலில். வகித்திருப்பது பைக். பெரும்பாலான நடுத்தர வர்க்க இளைஞர்களின் கனவு வாகனம் அது. கை நிறைய சம்பளம், ஒரு பைக், பின்னால் கட்டியணைத்தபடி அமர்ந்து உடன் பயணிக்கும் ஒரு காதலி. இதுவே ஒவ்வொரு சராசரி இந்தியனின் கனவு. இன்னும் சிலருக்கு பைக் என்றால் சுதந்திரம். தரை, வானம், காற்று, நகரும் நாம் என்று அவர்கள் பைக்கில் ஊர் ஊராக பயணம் செய்வதை சாகசமாகச் செய்து வருவார்கள். இந்தப் படத்தில் இலக்கற்ற ஒருவனுக்காக இலக்கை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததன் ஆரம்பம் பைக் பயணம் தான். 

தனுஷ் நடித்து வெற்றி பெற்ற பொல்லாதவன் படம், பயணத்தினூடே கதை நகரும் ‘பையா’ போன்ற படங்களில் சில சாயல்கள் இப்படத்தில் இருந்தாலும் இக்கதையை இயக்குனர் கையாண்ட விதம் முற்றிலும் வேறு. கூறுவது கூறுல், போல செய்தல் எல்லாம் கெளதம் மேனனுக்கு வேறு திரைப்படங்களிலிருந்து கிடைப்பதில்லை. தன்னுடைய படங்களிலிருந்தே அவர் எடுத்துக் கையாள்வதில் நிபுணர். தவிர இப்படம் காட்ஃபாதர் திரைப்படத்தின் காதல் காட்சியில் வரும், ஒரு வரியை ஆதர்சமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று அவரே பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் காட்ஃபாதர் இன்றளவும் உலக சினிமா ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்றதற்கு முக்கிய காரணம் அதன் இயக்குனர் பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலா செதுக்கி செதுக்கி எழுதிய திரைக்கதை. முழுமையாக திரைக்கதை எழுதிய பின்னர் தான் கப்போலா படப்பிடிப்புக்குச் சென்றார். ஆனால் கெளதம் மேனனின் படத்தின் திரைக்கதையில் பல இடங்களில் முழுமை இல்லை. திரைக்கதை என்பது அர்த்தபூர்வமாக இணைக்கப்படும் நிகழ்வுகளால் ஆனது. அந்த அர்த்தத்தை அளிப்பது அதன் கதையோட்டம்.  காட்சிகளின் வழியே திரையில் கதையை நகர்த்திக் கொண்டே, துல்லியமாகவும் அக்கதையைச் சொல்லி, இறுதியில் சொல்ல வந்த கதைக்கு நேர்மையான முடிவை கொடுப்பதே நல்ல திரைக்கதை எனலாம். இப்படத்தின் பிற்பகுதி இதில் எதுவொன்றையும் செய்யவில்லை. ஆரம்பக் காட்சிகளில் இருந்த நேர்த்தி இறுதிக் காட்சி வரை நீண்டிருக்கவில்லை என்பதே இத்திரைப்படத்தின் வீழ்ச்சி. இறந்துவிடுவோமோ என்று பயந்து நாயகன் சொல்லும் காதல் வரை கதை நெருடல்களின்றி முதல் பாதியில் கவிதையாக விரிகிறது. ஆனால் இரண்டாம் பாதியில், புதிர்க்கட்டங்களை அவிழ்க்கும் முயற்சிகளில் ஒருவித அலட்சியத்தன்மையால் படம் தத்தளிக்கிறது.

சஸ்பென்ஸ் என்று நினைத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் எளிதாகவே யூகிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு லாரி வரும் போதே அது விபத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் நாயகனின் அடுத்த அவதாரம் இதுவாகத்த்டான் இருக்கும் என்றும் இப்படத்தில் எளிதில் சொல்லிவிடலாம். தவிர விவரணையில் (Narration) கதை கூறல் முறை அதிலும் முக்கியமாக மஹாராஷ்ட்ராவில் நடக்கும் விஷயங்களை நேரடியாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். கதையுடன் ஒட்டாமலும், மனதில் பதியாமலும் காட்சிகள் மேலோட்டமாக இருப்பதால் தான் இத்தகைய நிறைவின்மை ஏற்படுத்துகிறது.  

திரைக்கதையில் பிரச்னைகள் இருந்தாலும் படத்தின் சிறப்பம்சம் அதன் வசனங்கள் மற்றும் நேர்த்தியாக சொல்லிய விதம் (மேக்கிங்). அவ்வப்போது சிம்பு பேசும் பர்சனல் வசனங்கள் (என்னைப் பத்தி தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே) போன்ற ஜிமிக்ஸ் நன்றாக எடுபட்டிருக்கின்றன. அவ்வகையில் ரசிகர்களின் கவனத்தை திரைக்குள் வைத்திருந்த கெளதம் வாசுதேவ் மேனனின் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி எனலாம். கதைப்போக்கில் சில சிக்கல்கள், கெளதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் மட்டுமே தென்படும் தேய்வழக்குகள், மற்றும் லாஜிக் மீறல்கள் ஆகியவற்றால் திரைக்கதையில் தள்ளாட்டம் ஏற்பட்டுவிட்டது. கவனம் எடுத்து இவற்றைத் தவிர்த்திருந்தால் இத்திரைப்படம் நிச்சயம் ஆழமான ஒரு அனுபவத்தைக் தந்திருக்கும். கெளதம் வாசுதேவ் மேனன், சிம்பு ரசிகர்கள் மற்றும் இசைப் பிரியர்களை இந்தப் படம் நிச்சயம் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்லும். மற்றவர்களைப் பொறுத்தவரையில் அச்சம் என்பது மடமையடா இன்னொரு படம் அவ்வளவே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com