'குற்றமே தண்டனை' - சினிமா விமரிசனம் 

திரைக்கதை கோரும் பாதையில் மட்டுமே பயணித்திருப்பது மணிகண்டனை ஒரு நம்பிக்கையான படைப்பாளியாக... 
'குற்றமே தண்டனை' - சினிமா விமரிசனம் 
Published on
Updated on
4 min read

'தமிழில் ஓர் உலக சினிமா' என்கிற பின்னொட்டுடன் விளம்பரப்படுத்தப்படும் தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் போலித்தனமான சுயபெருமிதத்துடனும், சந்தைப்படுத்தும் உத்தியின் தந்திரத்துடனும் மட்டுமே இருந்திருப்பதைக் கவனிக்கிறேன். அவ்வாறல்லாமல் உண்மையாகவே உலக சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயலும் அசலான படைப்பாளியாக இயக்குநர் மணிகண்டனைப் பார்க்க முடிகிறது. இரானியத் திரைப்படங்களின் எளிமையின் அழகியலை நினைவுப்படுத்தும் 'காக்கா முட்டை'யும் ஹிட்ச்காக்கின் சஸ்பென்ஸ் மற்றும் டோரண்டினோவின் அவல நகைச்சுவை வகையின் கலவை முயற்சியில் உருவாகியிருக்கும் 'குற்றமே தண்டனை'யும் அவ்வாறான நம்பிக்கையைத் தருகின்றன. சர்வதேசத் திரைவிழாக்களில் திரையிடப்படும் ஒரு சிறந்த படைப்பை பார்த்துக் கொண்டிருக்கும் தோரயமான உணர்வைத் தருகிறது 'குற்றமே தண்டனை'.

ஒரு குற்றத்துக்குப் பின் நிலைநாட்டப்படவேண்டிய நீதி என்னும் கருத்தாக்கம், நடைமுறையில் அவ்வாறு அல்லாமல் குற்றம் என்பது எவ்வாறு சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களாலும் தனி  நபர்களாலும் பொருளியல் ரீதியாக லாபம் ஈட்ட முனையும் நோக்குடன் ஒரு பண்டமாக, சந்தர்ப்பமாக உருமாற்றப்படுகிறது என்பதை இத்திரைப்படம் அபாரமாகப் பதிவு செய்திருக்கிறது.

'வினை விதைத்தவன் வினையறுப்பான்' என்கிற ஆதாரமான நீதி பழமையானதாக இருந்தாலும் அது காலத்தாலும் எவராலும் மாற்றப்பட முடியாத அறத்தின் அடையாளமாக நீடிப்பதையும்  சுட்டிக்காட்டுகிறது. சட்டம், நீதி என்கிற நடைமுறைகளிலிருந்து ஒருவன் சாமர்த்தியமாகத் தப்பித்தாலும், அவனுடைய அகத்தில் பொருந்தியிருக்கும் நீதிமன்றத்திலிருந்து எந்நாளும் அவன் தப்பிக்க முடியாது என்பதையும் சரியாகவே பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.

***

ரவி என்கிற இளைஞன் Tunnel Vision என்கிற பார்வைக் குறைபாட்டினால் அவதியுறுகிறான்.  இயல்பான பார்வையுடைய ஒருவர், பைப்பின் வழியாக ஒன்றைப் பார்த்தால் எப்படித் தெரியுமோ, அப்படிப்பட்ட குறுகிய எல்லையை மட்டுமே அவனுடைய இயல்பில் பார்க்க முடியும். மருத்துவமனைக்குச் சென்றால் மூன்று லட்சத்து இருபதாயிரம் செலவாகும் என்கிறார்கள். இல்லையென்றால் சிறிது சிறிதாக அந்த எல்லை குறைந்து ஒரு கட்டத்தில் பார்வையே போய்விடும் என்கிறார்கள். அவனுடைய சாதாரண பணியின் மூலம் அத்தனை பெரிய பணத்தைப் புரட்ட முடியாது. என்ன செய்வது என அவன் தவித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது.

எதிர்வீட்டில் வசிக்கும் ஓர் இளம்பெண்ணை ரகசியமாகத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது இவனுடைய வழக்கம். அவ்வாறான ஒரு தருணத்தில் சந்தேகப்படும் விதமாக அந்த வீட்டில் ஏதோ தெரியவே விரைந்து சென்று பார்க்கிறான். அவ்வப்போது அங்கு வந்து செல்லும் ஒரு பணக்கார ஆசாமி வீட்டின் உள்ளே திருதிருவென்று விழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். இளம்பெண் கொலை செய்யப்பட்டு ரத்தச்சகதியில் இருப்பதையும் பார்க்கிறான். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு  தன்னுடைய மருத்துச் செலவை பணக்கார ஆசாமியிடமிருந்து கறக்க முயல்கிறான். இதில் ஏற்படும் தடைகள் அனைத்தையும் ஒவ்வொன்றையும் சாமர்த்தியமாக மீறுகிறான்.

அவனுடைய நோக்கம் நிறைவேறியதா, பணம் கிடைத்ததா, கண்பார்வை சரியானதா என்கிற விஷயங்களைப் பரமபத ஏணி, பாம்பு விளையாட்டின கதையாக மீதக்காட்சிகள் நிதானமாக நகரும் சஸ்பென்ஸூடன் விவரிக்கின்றன.

***

பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், அதிரடி சண்டைகள் போன்ற வழக்கமான செயற்கைத் திணிப்புகள் இல்லாமல் இருந்தாலே ஒரு தமிழ் சினிமாவை 'வித்தியாசமான திரைப்படம்' என்று கருதிக் கொள்வது நம் வழக்கம். அவ்வாறான  போலி முயற்சிகளும் சில இருக்கின்றன. ஆனால் இவ்வாறான அலைபாய்தல்களையும் தவிர்த்துவிட்டதோடு மட்டுமல்லாமல், நூல் பிடித்தாற் போல ஒரு நேர்மையான திரைக்கதையுடன், நேரான கதைகூறல் முறையைப்  பின்பற்றியிருக்கிறார் இயக்குநர். சினிமா என்பது காட்சி ஊடகம் என்கிற அடிப்படையை இயக்குநர் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதால் குறைவான வசனங்களோடு காட்சிபூர்வமாகவே பெரும்பாலான படம் நகர்கிறது. இதைப் போலவே அநாவசியமான காட்சிகளும் படத்தில் இல்லை. கச்சிதமான 90 நிமிடங்களுக்குள் முடிந்துவிடுகிறது. சில நெருடல்கள் தோன்றினாலும் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த முழுமையைத் தருகிறது 'குற்றமே தண்டனை'.

படத்தின் நாயகன் விதார்த் மிக அடக்கமாக நடித்திருக்கிறார். மிகப் பெரிய மருத்துவ செலவை எதிர்கொள்ள நேரும் ஒரு சராசரி நபரின் அகம் சார்ந்த தத்தளிப்புகளை நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம் பூஜா தேவரியா. விதார்த்தின் மேலுள்ள தன் காதலை அபாரமான முகபாவங்களின் வழியாகவே அவர் வெளிப்படுத்தும் விதம் அத்தனை அழகாக இருக்கிறது. இவர்கள் பணிபுரியும் எளிய கால்சென்டரின் உட்புறக் காட்சிகளும் இயல்பாக பதிவாகியிருக்கின்றன. பணக்காரத் தோரணையுடன் இருக்கும் ரஹ்மான் அந்தப் பாத்திரத்துக்கு அசலாகப் பொருந்துகிறார். சாட்சியைத் தங்களின் சார்பாக வளைக்க முயலும் ஜூனியர் வக்கீலாக சோமசுந்தரம் அசத்தியிருக்கிறார். விதார்த்திடம் முதலில் சாமர்த்தியமாக பேரம் பேச முயன்று பின்பு அசடு வழிவதும் 'நீங்க செஞ்சதுதான்ஜி கரெக்ட்டு' என்று பின்பு சேம் சைட் கோல் போடுவதும் என சிறிது நேரமே வந்தாலும் அசத்தல். இன்ஸ்பெக்டராக வரும் மாரிமுத்து உள்ளிட்ட இதர பாத்திரங்களும் இயல்பான ஒழுங்கில் இயங்குகின்றன.
  
ஒரு திரைப்படத்தின் அடிப்படையான விதிகளுடன் கதைகூறல் முறையை நிகழ்த்த வேண்டும் என்கிற இயக்குநரின் நேர்மையான பிடிவாதத்தை ஒருபுறம் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்றாலும் இன்னொருபுறம் இந்த திரைக்கதையில் நாம் உணர்கிற நெருடல்கள் படத்துடன் முழுவதும் ஒன்ற முடியாமல் சங்கடப்படுத்துகின்றன. பாத்திரத்தின் வடிவமைப்புகளிலும் செயல்பாடுகளிலும் நம்பகத்தன்மை என்னும் விஷயம் இன்னமும் மேம்பட்டிருக்கவேண்டும்.

பிரதான பாத்திரமான ரவியின் பார்வைக் குறைபாட்டை இயக்குநர் தொடக்கக் காட்சிகளிலேயே சரியாக நிறுவியிருந்தாலும் இதர காட்சிகளில் அந்தப் பாத்திரம் தடுமாறாமல் இயல்பாக நடமாடுவது அல்லது அவ்வாறான பாவனையைச் செய்வது நம்பும்படியாக இல்லை. அவரது உடல்மொழி இன்னமும் சரியாக அமைந்திருக்கவேண்டும். சிகரெட் புகைக்காக கண்டிக்கும் பக்கத்து வீட்டுக்காரரை மெளனமாக சகித்துக் கொள்ளும் ஒரு சராசரியான நடுத்தரவர்க்க நபராக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாத்திரம், கொலை போன்ற மிகப் பெரிய குற்றச் செயலை மறைப்பதற்காகத் துணிவுடன் செய்யும் பேரங்களும் செயல்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. தன் குறைபாட்டை எப்படியாவது போக்கிக் கொள்ள விழையும் அவனுடைய விருப்பம்தான் அவனை உந்தித் தள்ளுகிறது என்பதாகத்தான் இதை நாம் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தனை தெளிவாக பேரங்களை நிகழ்த்தும், சந்தர்ப்பத்துக்கேற்ப மாறும் சாமர்த்தியமான இந்தப் பாத்திரம், தன் மருத்துவ சிகிச்சை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து சரியாக அறிந்து கொள்வதில் இத்தனை அலட்சியமாகவா இருக்கும் என்கிற நெருடலும் எழுகிறது.

'என்னுடைய செல்வாக்கு என்னவென்று உனக்குத் தெரியுமா?' என்று ஒரு கட்டத்தில் விதார்த்திடம் வெடிக்கும் ரஹ்மானின் பாத்திரம், ஏன் தொடக்கத்திலிருந்து அத்தனை அச்சப்பட்டு மென்று விழுங்கவேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. கொலைக்குற்றம் தொடர்பான விஷயங்களை, எத்தனை நெருக்கம் என்றாலும், ஓர் அந்நிய நபரிடம் எவராவது விவாதித்துக் கொண்டிருப்பார்களா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. இறுதியில் அறத்தைப் போதிக்கும் அந்த நபரும் (நாசர்) 'பணத்தை வாங்கிட்டியா.. ஹே..ஹே.. உன்னையும் போட்டுத் தள்ளியிருப்பாங்கன்னு நெனச்சேன்’ என்று அந்தக் குற்றத்தைத் தொடக்கத்தில் எளிதாக எடுத்துக் கொள்வதும் முரணாக இருக்கிறது.

ஒரு சிறுகதையின் எதிர்பாராத திருப்பம் போல அமைந்திருக்கும் இதன் கிளைமாக்ஸ் உத்தி பாராட்டத்தக்கது என்றாலும் அதுவுமே நம்பகத்தன்மையுடன் அமையவில்லை. இயக்குநர், பார்வையாளர்களிடம் ஆட விரும்பும் சதுரங்க ஆட்டமானது அதற்கான நேர்மையுடனும் தர்க்க ஒழுங்குடனும் அமைந்திருக்கவேண்டும். எங்கிருந்து தொடங்குகிறதோ அங்கேயே முடியும் ஒரு முழு வட்டம் போல இதன் கிளைமாக்ஸ் அமைந்திருந்தாலும், அதுவரையான இயக்கத்தின் படி நம்பும் படியாக அமைந்திருக்கவில்லை.

இந்த ரீதியில், அண்மையில் நான் பார்த்த 'Remember' என்கிற திரைப்படத்தை நினைவு கூர விரும்புகிறேன். தன் எதிரி ஒருவரைப் பழிவாங்குவதற்காக கிளம்புகிறார் ஒரு முதியவர். ஆனால், பழிவாங்க ஆவேசமாக கிளம்பும் அவரேதான் அந்த எதிரி என்பது படத்தின் உச்சக்காட்சியில் அபாரமாக வெளிப்படுகிறது. இதற்கான காரணங்களையும் அவருக்கு இருக்கும் குறைபாட்டையும் நம்பகத்தன்மையுடனும் அதற்கான மெனக்கெடல்களுடன்  கூடிய திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நோக்கில் திரைக்கதையில் நம்பகத்தன்மையைக் கச்சிதமாக உருவாக்கும் திட்டமிடல்களை மணிகண்டன் இன்னமும் சிரத்தையாகச் செயல்படுத்தியிருக்கலாம்.

பார்வையாளர்களிடம் இவ்வாறான நெருடல்களைப் பெரிதும் எழுப்பாத, அதனுடன் ஒன்றிப் போக வைக்கிற சாமர்த்தியத்துடன் எழுதப்படும் திரைக்கதையின் மூலம்தான் ஒரு நல்ல சினிமா உருவாகிறது என்பதைப் பல கிளாசிக் திரைப்படங்களின் மூலமாக நாம் பார்க்கிறோம். இந்தக் குறைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால், தமிழ் சினிமாவின் அபத்தமான சூழலில் உண்மையாகவே ஒரு வித்தியாசமான திரைக்கதையை உருவாக்க முயன்றிருக்கும் மணிகண்டன் பாராட்டப்பட வேண்டியவராகிறார்.

***

ஒரு திரைப்படத்தை அடுத்த தளத்துக்கு உயர்த்திச் செல்லும் வலிமை வாய்ந்த உப நுட்பங்களுள் ஒன்று, பின்னணி இசை. இந்த விஷயத்தில் ஒரு மேதையாகவே நம்மால் அறியப்பட்டிருக்கும் இளையராஜாவின் இசை, இந்த திரைப்படத்தைப் பொறுத்த மட்டில் சில தருணங்களில் அபாரமான உணர்வை எழுப்ப முயன்றிருந்தாலும், அவசியமற்ற இடங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருப்பது இம்சையை ஏற்படுத்துகிறது. சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கு பின்னணி இசை எத்தனை முக்கியமோ, அதைப் போலவே மெளனத்தால் நிரப்பும் தருணங்களையும் அறிந்திருப்பது அவசியம். ஆனால் இந்தத் திரைப்படத்தில் சாதாரண காட்சிகளில் கூட வழக்கமான தமிழ் திரைப்படங்களைப் போல  பின்னணி இசை கதறிக் கொண்டேயிருக்கிறது.

இந்த திரைக்கதைக்கு live sound எனப்படும் இயற்கையான சப்தங்களையே பெரும்பாலும் இயக்குநர் பயன்படுத்தியிருந்தால் ஓர் ஆவணப்படத்தின் தன்மையோடு பார்வையாளர்கள் இதனுடன் அதிகம் ஒன்றியிருக்கும் சாத்தியம் கூடியிருக்கும். இத்திரைப்படத்தின் பின்னடைவுகளில் ஒன்று, இளையராஜாவின் அதீதமான பின்னணி இசை என்பது துரதிர்ஷ்டமான விஷயம்.

***

குற்றம் என்பது லாபமீட்டும் சந்தர்ப்பமாக மாற்றப்படும் ஆபத்தை சுட்டிக் காட்டும் இந்த  திரைப்படம், அதேவேளையில் மருத்துவத்துறையில் நிகழும் வணிக மோசடிகளையும் போகிற போக்கில்  சுட்டுகிறது. உயிர் காக்கும் மருத்துவம்  என்பது சேவை  என்கிற நிலையிலிருந்து நழுவி தம்மை நாடி வரும் ஒவ்வொரு நபரையும் ஏடிஎம் மெஷின்களாக பார்க்கும் 'கார்ப்பரேட்' தனத்துக்கு மாறியிருப்பதும் அடிநாதமாக சித்தரிக்கப்படுகிறது.

சராசரி மனங்களில் நவீன பொருளாதார உலகம் உற்பத்தி செய்யும் விருப்பங்கள், குற்றத்தின் ஊற்றுக்கண்களை மேலதிகமாக அதிகரிக்கின்றன. பல்வேறு விதமான மனநெருக்கடிகளை உற்பத்தி செய்கின்றன. விலையுயர்ந்த செல்போனை வாங்க இயலாத நடுத்தரவர்க்க இளைஞர்கள், தாழ்வு மனப்பான்மை தரும் நெருக்கடி தருவதின் உச்சமாக செயின் பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நடைமுறைப் பயங்கரங்கள் பனிப்பாறை நுனியின் உதாரணமாக இருக்கின்றன. இதில் வரும் நாயகனும் மருத்துவத் துறையின் நேர்மையின் வழிகாட்டுதலை எதிர்கொண்டிருந்தால் குற்றத்தை நோக்கி நகராதவனாக கூட இருந்திருக்கக்கூடும்.

இளம்பெண்ணின் வீட்டில் வளர்க்கப்படும் கிளிகளின் கூச்சல் சப்தம், ரவியிடம் மனச்சாட்சியை உலுக்கும் இரைச்சலாக ஒலிப்பது மாதிரியான காட்சிகள், படத்தின் மையத்துக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருந்திருப்பதால் இத்திரைப்படத்தின் பல காட்சிகள் ஒளியின் அழகியலுடன் பதிவாகியிருக்கின்றன. உதாரணமாக மேல்கோணத்திலிருந்து வீட்டுக்குடியிருப்பு காட்டப்படும் காட்சி போன்ற பல கோணங்கள் படத்துக்குப் புதுவிதமான நிறத்தை தருகின்றன.

வழக்கமான தமிழ் சினிமாக்களின் அம்சங்களைத் தவிர்த்து, திரைக்கதை கோரும் பாதையில் மட்டுமே பயணித்திருப்பது மணிகண்டனை ஒரு நம்பிக்கையான படைப்பாளியாக அடையாளப்படுத்துகிறது. ஆனால் இன்னமும் மெனக்கெட்டிருந்தால் உண்மையிலேயே இதுவொரு உலக சினிமாவின் தரத்தை எட்டியிருக்கும். அவரது அடுத்தடுத்த உருவாக்கங்களில் இந்த எல்லையை நோக்கி நகர்வார் என்கிற ஆரோக்கியமான நம்பிக்கையைத் தருகிறது 'குற்றமே தண்டனை'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.