சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’: சினிமா விமரிசனம்!

சிம்பு வேண்டுமானால் அசராதவராக, அடங்காதவராக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு ஜனங்கள்...
சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’: சினிமா விமரிசனம்!
Updated on
3 min read

சிம்பு அடிப்படையில் திறமையான நடிகர். ஒருவகையில் தண்ணீரைப் போன்றவர். பாத்திரத்துக்கேற்ப நீர் தன்னை மாற்றிக் கொள்ளும் அல்லவா, அதுபோல. ஆனால் சிம்புவின் பயணத்தில் பெரும்பாலும் சாக்கடை நீராக ஓடுகிறது என்பதுதான் பரிதாபம். அவர் நல்ல இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டால் 'விண்ணைத் தாண்டி வருவாயா' போன்ற அற்புதங்கள் அடிக்கடி நிகழக்கூடும். ஆனால் 'அ அ அ' போன்ற அபத்தங்களே அதிகம் நிகழ சிம்புவேதான் காரணம் என்று தோன்றுகிறது. கமல்ஹாசன் தன்னை கமல்ஹாசனாக நினைத்துக் கொள்வதில் கூட ஒருவகை நியாயமிருக்கிறது. ஆனால் சிம்பு தன்னை கமலாக ஒருவேளை நினைத்துக்கொண்டிருந்தால் அதைவிடவும் கொடுமை ஒன்று இருக்கவேமுடியாது.

எத்தனை முயன்றும் இந்தப் படத்தையும் அதன் தலைப்பையும் தொடர்புப்படுத்தி எதையும் யோசிக்கவோ கண்டுபிடிக்கவோ இயலவில்லை. விளங்காத மர்மமாக இருக்கிறது. தமிழின் மோசமான திரைக்கதைகளை வரிசைப்படுத்தினால் இந்த திரைப்படத்துக்கு முதல் வரிசையில் இடம் தரலாம். இதில் பாகம்-2 வேறு வரப்போகிற செய்தியை அறியும்போது, சிம்பு வேண்டுமானால் அசராதவராக, அடங்காதவராக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு ஜனங்கள் அத்தனை அன்பானவர்கள் இல்லை! 

**

அ அ அ திரைப்படத்தின் கதை என்ன?

கஸ்தூரி தன்னை கவர்ச்சியாக சித்தரித்துக்கொண்டு ஒரு கெட்டவனை மயக்கி சுட்டு வீழ்த்தும் மிகையுடன் தொடங்குகிறது திரைப்படம். அவர் துபாயில் காவல்துறை அதிகாரியாம். துபாயைக் கலக்கிய ஒரு டானை வலைவீசி தேடுகிறார்கள். அவனுடைய நண்பன் ஒருவனின் வாக்குமூலம் வழியாக பழைய கதை மதுரையில் இருந்து விரிகிறது. எண்பதுகளின் காலக்கட்டமாம்.

மதுரை மைக்கேல் என்பவனைச் சிறையிலிருந்து விடுவிக்க எல்லாக் கைதிகளும் இணைகிறார்கள். டி.ராஜேந்தரின் மினியேச்சர் மாதிரி இருக்கும் சிம்புவின் அறிமுகக் காட்சி. கைதிகள் மனித கோபுரம் அமைத்து நிற்க, பீடியை வலித்துக்கொண்டே அவர்களின் மீது ஏறி அநாயசமாகச் சிறையிலிருந்துத் தப்பிக்கிறார். மற்ற கைதிகள் எவருக்கும் தப்பிக்கும் நோக்கமில்லை. நியாயமான கைதிகள் போல.

எதற்காக தப்பிக்கிறார்? அதற்கு இன்னொரு ஃப்ளாஷ்பேக்.

மதுரை மைக்கேல், ஒரு ரவுடி. செல்வாக்குள்ள நபரிடம் அடியாளாக இருக்கிறார். வெட்டுவது, குத்துவது போன்ற பணிகளை நேர்மையாகச் செய்து முடிக்கிறார். ஸ்ரேயாவிடம் தன் காதலை வற்புறுத்திக் கொண்டேயிருக்கிறார். ஸ்ரேயாவின் தந்தையான ஒய்.ஜி.மகேந்திரன் உயிருக்காகப் போராடும் சமயத்தில், 'காதலை ஏற்றுக் கொண்டால் காப்பாற்றுகிறேன்' என்கிறார். ஒரு சிக்கலான நகைச்சுவை சந்தர்ப்பத்தில் தாலியும் கட்டி விடுகிறார். 'இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம், நாம் துபாய்க்குச் சென்று பிழைக்கலாம்' என்று திடீர் மனைவி உபதேசம் தர கிளம்பும் சமயத்தில் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க இறுதியாக ஒரு 'சம்பவம்' செய்ய நேர்கிறது. அந்தச் சம்பவம் அசம்பாவிதமாக முடிய, சிறைக்குப் போகிறார்.

அங்கிருந்து தப்பிப்பதுதான் முதல் காட்சி. ஸ்ரேயாவின் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அவரைக் கடத்திக் கைப்பற்றும் நோக்கத்துடன் சென்றவர், திடீரென்று மனம் மாறி 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று கண்கலங்கி விட்டு பாண்டிச்சேரிக்குச் செல்கிறார்.

சில வருடங்கள் கடக்கின்றன.

பிற்பாதியில் அஸ்வின் தாத்தா என்றொருவரை சென்னையில் காட்டுகிறார்கள். அவர்தான் முன்னாளில் மதுரை மைக்கேலாக அறியப்பட்டவர். வருஷங்கள் பல ஓடி விட்டதால் வேறு வழியில்லாமல் தாத்தாவாகி விட்டார். ஆனால் இளமையான தாத்தா. முதியோர் இல்லத்தை பராமரிக்கும் தமன்னாவைப் பார்த்து காதல் உருவாகிறது. 'பவர் பாண்டி'யாகி விடுகிறார்.

தமன்னா தன்னைக் காதலிப்பதாக இவர் நினைத்துக் கொண்டிருக்கும்போது இறுதிக் காட்சியில் தமன்னா தன் காதலரை அறிமுகப்படுத்துகிறார். அது இளமையான சிம்பு. அவர் பெயர் திக்கு சிவா. திக்கிப் பேசுவதால் அந்தப் பெயராம்.

'இதுவரைக்கும் நல்லவனா இருந்துட்டேன். இனிமே நான் கெட்டவன்' என்று சிம்பு தாத்தா இருமிக்கொண்டே ஆவேசப்பட்டு 'திக்கு் சிவாவைக் கடத்துவதோடு படம் நிறைவடைகிறது. அதாவது இதுதான் முதல் பாகமாம்.

மதுரை மைக்கேலுக்கும், சென்னை அஸ்வின் தாத்தாவுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நிகழ்ந்தது, அவர் எப்படி துபாய்க்குச் சென்று அகில உலக காவல்துறையே வலைவீசித் தேடுமளவுக்குப் பெரிய டானாக மாறினார் என்பதையும், அஸ்வின் தாத்தாவுக்கும் திக்கு சிவாவுக்கும் தமன்னாவை முன்னிட்டு நிகழும் போட்டியையும் இரண்டாம் பாகத்தில் சொல்வார்களாக இருக்கும்.


***

இப்படியொரு மகா அசட்டுத்தனமான திரைக்கதையை சிம்பு எப்படி ஒப்புக் கொண்டார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எந்தவொரு இடத்திலும் சுவாரசியம் என்பது மருந்துக்கும் இல்லை. இந்த சினிமாவை எவருமே spoof செய்யமுடியாது. ஏனென்றால் இது தன்னைத்தானே அப்படித்தான் செய்துகொள்கிறது. 'இது ஏதோ அறியாத்தனமான விளையாட்டு போல, இதோ சரியான திசைக்கு சென்று விடுவார்கள்' என்று ஒவ்வொரு காட்சியிலும் காத்திருந்தால் ஒட்டுமொத்த திரைப்படமுமே அந்த துயரப்பாதையில் பயணித்து நம்மை 'அம்போ'வென்று ஏமாற்றிச் செல்கிறது.

இதன் திரைக்கதைக்காகத்தான் சிம்பு, மினி டி.ஆர் போல தன்னை உருமாற்றிக் கொண்டார் என்றால் அதை விட பைத்தியக்காரத்தனம் வேறொன்றுமே இருக்கமுடியாது. தலை வழிய டோப்பா முடி வைத்துக்கொண்டால் அது எண்பதுகளின் காலக்கட்டம் என்று எவரோ தவறாகச் சொல்லிவிட்டார்கள் போல.

ஒய்.ஜி. மகேந்திரன் அடிக்கடி மின்விபத்தில் சிக்கிச் சரிந்து விடுகிறாராம். வாய் வழியே ஊதி அவரைக் காப்பாற்றுகிறார்களாம். இப்படியொரு அபத்தமான விஷயத்தை வைத்துக்கொண்டு ஆபாச விளையாட்டை தொடர்ச்சியாக விளையாடுகிறார்கள். படமெங்கும் நிறைய இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச சைகைகள் போன்றவை எரிச்சலையும் முகச்சுளிப்பையும் உண்டாக்குகின்றன.

தனுஷ் இயக்கிய 'பவர் பாண்டி' பாத்திரத்தை கிண்டலடிக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டார்களோ, என்னமோ.. அஸ்வின் தாத்தாவின் செய்கைகள் ஒவ்வொன்றுமே கொடுமையாகத் தோன்றுகிறது. 'இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே..'' என்று ஆரம்பித்து நிறைய அபத்தமான உபதேசங்கள், அபிப்ராயங்கள் வழிந்துகொண்டே இருக்கின்றன. சிம்புவின் தனிப்பட்ட ஆளுமை தொடர்பான வசனங்கள் தொடர்பேயில்லாமல் படத்துக்குள் வந்து கொண்டேயிருக்கின்றன.

கோவை சரளா வேறு தம் பங்குக்கு 'நடிகன்' திரைப்படத்து மனோரமா கெட்டப்பைப் போட்டுக்கொண்டு வந்து எரிச்சலை அதிகப்படுத்துகிறார். மொட்டை ராஜேந்திரன் மற்றும் விடிவி கணேஷின் நகைச்சுவைகள் வேறுவகையான கொடுமை ரகம். மதுரை மைக்கேலின் முதலாளி, கிராமத்து நாடகங்களில் 'சிவாஜி' வேடமிட்டு வருடக்கணக்காக நடித்தவர் போலிருக்கிறது. சிவாஜியின் கொடுமையான நகல் போல தோன்றுகிறார்.

மொட்டை ராஜேந்திரனும் கோவை சரளாவும் 'தள்ளிப் போகாதே' பாடலை வதம் செய்யும் காட்சிக்கு மட்டுமே வேறு வழியில்லாமல் அரங்கம் இறுக்கம் தளர்ந்து சற்றாவது சிரிக்கிறது.

பொதுவாக சிம்புவின் படங்கள் ஒருமாதிரியான அபத்தத்துடன் அமைந்தாலும் யுவன்சங்கர் ராஜா தன்னுடைய அபாரமான பாடல்களால் ஓரளவு தப்பிக்க வைப்பார். ஆனால் இந்த திரைப்படத்தில் அவரும் சிம்புவுடன் இணைந்து சோதித்த துயரத்தை எங்கே சொல்வது என்றே தெரியவில்லை.

பாகம் -2  வரப்போகிற செய்தியை இறுதியில் காண்பித்து ரசிகர்களை எரிச்சலின் உச்சிக்கே கொண்டு செல்கிறார்கள்.

அ அ அ - அபத்தம், அசிங்கம், அய்யோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com