விஜய் சேதுபதி நடித்த கவண் பட விமரிசனம்!

இயக்குநரின் முந்தைய திரைப்படமான 'கோ'வின் வாசனையும் இதில் தூக்கலாக இருக்கிறது...
விஜய் சேதுபதி நடித்த கவண் பட விமரிசனம்!

தனது திரைப்படங்களில் அடிப்படையாக உத்தரவாதமான சுவாரசியத்தை முயலும் இயக்குநர்களில் முக்கியமானவர் கே.வி.ஆனந்த். 'கவண்' அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்வதில் வெற்றி பெறுகிறது. 

எவராலும் வெல்ல முடியாத பயில்வானான கோலியாத்தைச் சிறுவனான தாவீத் வெறும் கவணையும் கற்களையும் கொண்டு வீழ்த்தியதாக பைபிளில் ஒரு கதையுண்டு. திரைப்படத்தின் தலைப்பும் உள்ளடக்கமும் இந்த விஷயத்தைத்தான் மையமாகக் கொண்டிருக்கிறது. 

கோடிக்கணக்கான வருவாய்க்காகவும் போட்டி சானல்களைத் தாண்டி முன்னணி நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் செய்திகளை எப்படி வேண்டுமானாலும் திரிக்கும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் அட்டூழியங்களை அங்குப் பணிபுரியும் சாதாரணமான ஒருவன் எப்படி தடுத்து நிறுத்துகிறான் என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். இதையொட்டிப் படத்தின் முற்பகுதி சுவாரசியமாக நகர்ந்தாலும் பிற்பகுதி தொலைக்காட்சி சீரியல் போலவே எங்கெங்கோ அலைபாய்ந்ததோடு மட்டுமல்லாமல் நம்பகத்தன்மையற்ற காட்சிகளால் நிறைந்து தடுமாறியிருக்கிறது. கூடவே இயக்குநரின் முந்தைய திரைப்படமான 'கோ'வின் வாசனையும் இதில் தூக்கலாக இருக்கிறது.

என்றாலும், மக்களின் வரவேற்பு அறையையும் பெரும்பாலான நேரத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்கள், செய்திகள், அதன் மீதான விவாதங்கள் ஆகியவற்றின் பின்னால் எத்தனை பொய்யும் புரட்டலும் திட்டமிட்ட நாடகங்களும் இருப்பதை அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருக்கும் துணிச்சலுக்காகவே இந்தப் படத்தை வரவேற்கலாம்; ரசிக்கலாம். 


***

படத்தின் முதல் காட்சிக் கோர்வையிலேயே முக்கியமான பாத்திரங்களையும் அவற்றின் பின்னணி மற்றும் தன்மைகளையும் அறிமுகப்படுத்தி நேரடியாக விஷயத்துக்குள் நுழைந்திருக்கும் திரைக்கதையின் அபாரமான தொடக்கத்தை நிச்சயம் பாராட்டவேண்டும். போலவே விஜய் சேதுபதிக்கும் நாயகி மடோனாவுக்குமான ஊடல் 'பிளாஷ்பேக்கை' சுருக்கமான காட்சிகளில் சுவாரசியமாக விளக்கியதும்.

விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். தொடக்கக் காட்சிகளில் ஜடாமுடி போன்ற விக்குடன் அவருடைய தோற்றம் சற்று எரிச்சலை தந்தாலும் அயோக்கிய அரசியல்வாதியான போஸ் வெங்கட்டை நேர்காணல் செய்வதற்காகத் தனது இயல்பான தோற்றத்துக்கு மாறும்போதுதான் ஆறுதலாக இருக்கிறது. உண்மையில் இந்தக் காட்சியில் இருந்துதான் அவருடைய அநாயசமான நடிப்பு தொடங்குகிறது என்றுகூடச் சொல்லி விடலாம். ஒரு வழக்கமான நாயகனாகப் பெரும்பாலான காட்சிகளில் தன்னைத் திணித்துக் கொள்ளாமல் திரைக்கதை கோரும் காட்சிகளில் மட்டும் வந்து போகத் தயங்காத விஜய் சேதுபதியின் புரிந்துணர்வு நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. போலவே பொளீர் பொளீர் என்று நாயகியின் கையால் அறை வாங்கத் தயங்காத இயல்பும்.

மடோனா வழக்கமான நாயகி. என்றாலும் ஒரு காட்சியில் இவரது அபாரமான நடிப்பு வெளிப்படுகிறது. நேர்காணலை நிகழ்த்த விரும்பாமல் கோபமாகக் கிளம்பும் விஜய் சேதுபதியை ஆண்கள் கழிவறைக்குள் தடுத்து நிறுத்தி 'இந்த நேர்காணல் ஏன் முக்கியமானது' என்பதை விளக்கி தனது மூன்று வருட ஊடலைத் தளர்த்தி கண்ணீருடன் கட்டியணைத்து முத்தமிட்டு அனுப்பி வைக்கும் அந்தக் காட்சியில் அழுத்தமாக கவர்கிறார். 

விஜய்காந்த்தை நினைவுப்படுத்தும் அரசியல்வாதி பாத்திரத்தில் போஸ் வெங்கட். கே.வி.ஆனந்த்தின் படங்களில் தவறாமல் இடம்பெறும் ஜகன். படத்தின் ஓரமாக வந்து போகும் பாண்டியராஜன், நாசர்.  பிரதான வில்லனாகவும் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளராகவும் வரும் ஆகாஷ்தீப் சைகலின் நடிப்பு சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இல்லாவிட்டாலும் ஆர்ப்பாட்டமாக வந்து பார்வையாளர்களின் எரிச்சலை நன்றாகவே சம்பாதிக்கிறார். ஆனால் இவரை விடவும் தொலைக்காட்சி நிறுவனத்தின் விசுவாசமான பணியாளர்களாகவும் வரும் ஃபைவ்ஸ்டார் கிருஷ்ணாவும் பெயர் தெரியாத அந்த மிகை ஒப்பனை பேரிளம் பெண்ணும் திறமையாகவே எரிச்சல் மூட்டுகிறார்கள். இவர்கள் அடிவாங்கும்போது அரங்கமே குதூகலிக்கிறது. 

கார்ப்பரேட்களின் வணிக அரசியலை எதிர்க்கும் இடதுசாரி குழு இளைஞர்களில் ஒருவராக விக்ராந்த் தன் பங்கைச் சிறப்பாக செய்திருக்கிறார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதற்காகவே தாம் முன்தீர்மானமான ஆபத்தாக பார்க்கப்படுவதிலுள்ள அவலத்தை ஆவேசமாக பேசும் காட்சியில் கூடுதலாகக் கவனிக்க வைக்கிறார்.

பார்வையாளர்களின் ஆவலைத் தூண்டும் படத்தின் USP-களுள் ஒன்றாக டி.ராஜேந்தர். தன் படங்களைத் தவிர மற்றவர்களின் படங்களில் நடிக்காதவர் என்கிற பிம்பம் இவருக்குண்டு. மட்டுமல்லாது நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வருகிறார். நொடிந்து போன தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர். இயக்குநர் இவரை முற்றிலுமாக உருமாற்றி புதிய பரிமாணத்தில் உபயோகித்திருக்கலாம். ஆனால் தனது பிரத்யேக பாணியில்  'வாடா.. என் மச்சி ' என ஹை-டெசிபலில் கத்துவது எரிச்சலாகவே இருக்கிறது. என்றாலும் தனது தொழிலில் தோற்றுப் போய்க்கொண்டிருக்கும் துயரத்தையும் அதிலிருந்து மீள்கிற துணிச்சலையும் வெளிப்படுத்தும் சில காட்சிகளில் கவர்கிறார்.


***

கே.வி. ஆனந்தின் ஆஸ்தான திரைக்கதையாளர்களான எழுத்தாளர்கள் சுபாவோடு கபிலன் வைரமுத்துவும் இணைந்து இதில் பணியாற்றியுள்ளார். 'கேள்வி முக்கியம்னு நெனைக்கறவன் சத்தமா கேட்பான். பதில்தான் முக்கியம்’னு நெனைக்கறவன் மெதுவா கேட்பான் என்பது போன்ற வசனங்கள் கவர்கின்றன. முதல் பாதி முழுக்க ரியாலிட்டி ஷோக்களையும் அரசியல்வாதிகளின் இமேஜை உயர்த்துவதற்காக சானல்கள் செய்யும் தகிடுதத்தங்களையும் கண்டபடி கிண்டலடிக்கிறார்கள்; விமர்சிக்கிறார்கள். 

போராட்டக் குழுவில் உள்ள இளம்பெண் அரசியல்வாதிகளால் சீரழிக்கப்படுவது, தொழிற்சாலை கழிவினால் பாதிக்கப்படும் ஊர் மக்கள் ஆகிய இரண்டு தீவிரமான பிரச்னைகளின் பின்னணியில் இரண்டாம் பகுதி வேகமாக நகர முயன்றாலும் திரைக்கதையும் காட்சிகளும் ஒத்திசைவாக இல்லாததால் குழப்பத்தையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. மட்டுமல்லாமல் நம்பகத்தன்மையையும் இழந்து நிற்கிறது. 

படத்தின் கலை இயக்குநர் கிரணைப் பிரத்யேகமாகப் பாராட்டலாம். முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தின் பளபளப்பை பிரம்மாண்டமாக வடிவமைத்த அதே திறமையோடு நொடிந்து போய்க் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் சோகையான உட்புறத்தையும் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார். வெஸ்டர்ன் டாய்லெட் 'கம்மோடை' அழகான இருக்கையாக மாற்றுவது போல உபயோகமற்ற பொருட்களைக் கொண்டு அந்த அலுவலகத்தை கலை ரசனையோடு மாற்றியமைக்கும் காட்சிகளில் உள்ள நுண்விவரங்கள், அதன் திறமைகள் ரசிக்க வைக்கின்றன.

பொதுவாக கே.வி.ஆனந்தின் திரைப்படங்களில் பாடல்களும் அதைக் காட்சிப்படுத்துதல்களும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் இதில் அந்த அம்சம் இல்லை. ஹிப் - ஹாப் தமிழாவின் இசையில் பாடல்கள் கவராததைப் போலவே அதன் சித்தரிப்புகளும் சுவாரசியமாக இல்லை. வேகமாக நகர முயலும் பிற்பாதியில் எரிச்சலான இடையூறு போல வந்து நின்றிருக்கிறது விஜய் சேதுபதியும் டி.ராஜேந்தரும் ஆடி வெறுப்பேற்றும் 'புத்தாண்டுப்' பாட்டு.


***

நாட்டையே திகைக்க வைத்த பிரம்மாண்டமான தொகையுடன் கூடிய தேசிய ஊழல் ஒன்றோடு ஒரு பிராந்தியக் கட்சிக்கு வலுவான தொடர்பிருந்ததாகப் பேசப்பட்டு அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்தக் கட்சியின் புகழை சமூகவலைத்தளங்களில் பரப்புவதற்காக அதன் சார்பில் பணிபுரியும் ஐ.டி இளைஞர்கள் ஒரு நேர்காணலில் போகிற போக்கில் அந்த அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்கள். 'குறிப்பிட்ட வழக்கு விவரமான தகவல்களை இணையத்தில் எவர் தேடினாலும் அது நாலைந்து பக்கங்களுக்கு பிறகு கடைசியாக வரும்படியாக அந்த விவரங்களை பின்னுக்குத் தள்ளி விடுவோம்’ என்றார்கள்.

அவ்வாறாக இணைய ஊடகத்தில் செய்யும் பல அதர்மங்களை இத்திரைப்படம் தீவிரமாகவும் நையாண்டியாகவும் சுட்டுகிறது. இரக்கமேயில்லாமல் மற்றவர்களைக் கிண்டலடிப்பதைச் சமன் செய்வது போல தன்னையும் கிண்டலடித்துக் கொள்ள இயக்குநர் தயங்கவில்லை. 'எனக்கு ஏதாவதொரு விருது பார்த்து தரலாம் இல்லே...' என்று கே.வி.ஆனந்த்தின் குரல் சானல் நபரிடம் வழிவது பல உண்மைகளைப் போட்டு உடைக்கிறது. 'எப்படியும் தனுஷுக்கு ஆக்டர் கேட்டகிரில ஒரு அவார்டு நிச்சயமா வெச்சிருப்போம்' என்று சானல் தரப்பு சொல்கிறது. இப்படிச் சில காட்சிகளில் நேரடியாகவே கிண்டலடிக்கிறார்கள். 

'சூப்பர் சிங்கர்' மாதிரியான ஒரு ரியாலிட்டி ஷோவில் நன்றாக பாடாவிட்டாலும் கவர்ச்சி வேண்டும் என்பதற்காக பெண்களின் குழுவை தேர்ந்தெடுத்து தக்கவைத்துக்கொள்வதும் அந்தக் காரணத்துக்காகவே நன்றாகப் பாடினாலும் நாட்டுப்புறப்பாடல் குழுவொன்றை தகுதிநீக்கம் செய்து வெளியேற்றுவது போன்ற காட்சிகள்,  நமது மாலை நேர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் பின்னணியில் உள்ள வணிக அசிங்கங்களை அம்பலப்படுத்துகின்றன. டிஆர்பி ரேட்டிங்குக்காகவும் போட்டி சானல்களை முந்துகிற பரபரப்புக்காகவும் எத்தனை வேண்டுமானாலும் கீழே இறங்கும் சானல்களின் ஊடக அதர்மங்கள் வலுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. சானல் தரப்பின் சமிக்ஞைகளுக்கேற்ப நிகழ்ச்சி நீதிபதிகளும் செயல்படுவது அதிர்ச்சியடைய வைக்கிறது.

தோல்வியடைய வைக்கப்பட்டு வெளியேறும் நாட்டுப்புற இசைக்குழுவில் உள்ள சிறுவனை 'அழு' என்று கட்டாயப்படுத்துகிறார் நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவர். 'நாங்க ஆடிப் பாடும்போது இங்க இருந்தவங்க எல்லாம் கைத்தட்டி ரசிச்சாங்க. அப்புறம் ஏன் நான் அழணும்' என்று சிறுவன் கேட்கும் கேள்வியில் ஆயிரம் அர்த்தமுள்ளது. 

பேனை பெருமாளுக்குவது போல ஊழல் அரசியல்வாதிகளைத் தேசத்தின் தியாகிகளாகச் சித்தரிக்கும் ஊடகங்களின் அநீதிகளை சுவாரசியமாகவும் வலுவாகவும் சித்தரிக்கும் திரைக்கதை நிறைய அலைபாயாமல் கச்சிதமான பாதையில் பயணித்திருந்தால் 'கவண்' இன்னமும் வலுவாகவும் வேகமாகவும் தன் இலக்கை எட்டியிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com