தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' 2 - சினிமா விமரிசனம்

தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' 2 - சினிமா விமரிசனம்

ஒரு சாதாரண பாத்திரம் தோன்றும்போது அரங்கமே அதிரும் என்றால் அது ஆச்சரியம்தானே?. ஆம். ‘பிக் பாஸ்’ புகழ் ரைஸா...

ஹாலிவுட் பாணி போல, ஒரு வெற்றிகரமான திரைப்படத்தின் அடுத்தப் பாகம் (sequel) தமிழில் உருவாவது மிக அரிது. அம்மாதிரியான வழக்கமும் கலாசாரமும் இங்குப் பெரிதும் இல்லை.. ‘சில காலம் கழித்தும் கூட பார்வையாளர்கள் முதல் பாகத்தை நினைவுவைத்துக்கொண்டு பார்ப்பார்களா’ என்று இயக்குநர்கள் தயங்குகிறார்களோ என்னவோ.

இரண்டாம் பாகமாக அல்லது அடுத்தடுத்தப் பாகங்களாக வெளிவந்த திரைப்படங்களே தமிழில் குறைவுதான். அவையும் பொதுவாக இங்கு வெற்றியடைவதில்லை. பாகுபலி, சென்னை 28, சிங்கம் போன்றவை மட்டுமே விதிவிலக்கு. தமிழின் ஒரே முந்தையப் பாகத் (prequel) திரைப்படமாகக் கருதப்படும் பில்லா – 2 கூட தோல்விதான். எந்திரன், விஸ்வரூபம் ஆகிய தொடர்ச்சிகளின் வெற்றியை இனிதான் பார்க்கவேண்டும்.

இது மட்டுமல்லாமல் சீக்குவல் வகைத் திரைப்படங்கள் இங்குப் பொருத்தமான காரணங்களோடு, அதன் சரியான தொடர்ச்சித் தன்மைகளோடு தீவிரமான போக்கில் உருவாக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். இந்த வகையில் பாகுபலி மட்டுமே முந்தைய பாகத்தோடு அதிகம் பிரிக்க முடியாத வகையிலான திரைக்கதையோடு உருவாகியிருந்தது.

மற்றதெல்லாம் முதல் பாகத்தின் தற்செயலான, பிரம்மாண்டமான வணிக வெற்றியைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற பேராசையில் பிறகு உருவாக்கப்பட்ட தனித்தனித் துண்டுகள் மட்டுமே. தனியாகப் பார்த்தாலும் பார்வையாளர்களுக்குப் புரிய வேண்டும் என்கிற கவனத்தோடு எடுக்கப்பட்டவை. விஐபி 2-ம் அப்படியொரு தனிப்படமே. ஆனால் அப்படித் தெரியாத அளவுக்கு முந்தைய பாகத்தின் அடையாளத் தொடர்ச்சிகளைக் கவனத்துடன் பயன்படுத்தியிருக்கும் மெனக்கிடலுக்காக இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த்தைப் பாராட்டலாம்.

**

வேலையில்லா பட்டதாரி -2 ஐ  பார்ப்பதற்கு முன் முதல் பாகத்தைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

ரகுவரன் கட்டடப் பொறியியல் பட்டதாரி. அதிகச் சம்பளத்துக்காக ஏதோவொரு பணியில் ஈடுபடுவதை விட தான் கற்ற துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவு உள்ளவன். ஆனால் அவனது நேர்மை ஒரு தடையாக இருக்கிறது. எனவே ‘தண்டச்சோறு’ என்று தகப்பனால் அடிக்கடித் திட்டப்படுகிறான். இடையில் ஒரு காதல். அசந்தர்ப்பமான தருணத்தில் அவனுடைய அன்புத்தாயின் மரணம் நிகழ்கிறது. தான்தான் அதற்குக் காரணம் என்கிற குற்றவுணர்வில் இருக்கிறான்.

அவனது தாயின் மரணத்தின் மூலமாக அவனுக்கொரு நல்ல காலம் பிறக்கிறது. அவனுடைய விருப்பப்படியே கட்டட பொறியியல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்கிறான். லாபமில்லாத நோக்கோடு ஏழைகளுக்கான வீடுகள் கட்டித்தரும் திட்டம் ஒன்றை ஆசையோடு ஏற்கிறான்.

ஆனால் வணிகத்தையே பிரதான நோக்கமாகக் கொண்ட ஒரு பலமான போட்டி நிறுவனம் குறுக்கே வருகிறது. அந்த நிறுவன உரிமையாளரின் மகன் எப்படியாவது இந்தத் திட்டத்தைக் கைப்பற்றி தந்தையிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கிறான். எனவே ரகுவரனுக்குப் பல வழிகளில் இடைஞ்சல் தருகிறான். அந்தச் சிக்கல்களை வென்று நாயகன் எப்படித் தன் லட்சியத்தை அடைகிறான் என்பதோடு முதல் பாகம் நிறைவடைகிறது.

பொறியியல் படித்த மாணவர்கள் எவ்வாறு சம்பந்தமில்லாத துறைகளில் வேலை செய்ய நேர்கிறது, பணியில்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மனச்சிக்கல்கள் ஆகியவற்றை வெகுஜனத் திரைப்படத்துக்கான ஜனரஞ்சகமான காட்சிகளுடன் பயணிக்கும் அந்தத் திரைப்படம் கடைசிப்பகுதியில் நாயகத்தன்மையை நிலைநாட்டுவதோடு நிறைகிறது.

**

இனி, இரண்டாவது பாகம்.

தான் பணியாற்றும் நிறுவனத்தில் திறமையுள்ள கட்டடக் கலைஞனாக இருக்கிறான் ரகுவரன் (தனுஷ்). கட்டடத் துறையில் தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்ற நிறுவனம், வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ். அதன் உரிமையாளர் வசுந்தரா (கஜோல்).  இளம் வயதிலேயே தந்தையை இழந்து பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த பிரம்மாண்ட வெற்றியை அடைந்தவர். கட்டடத் துறையில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. வசுந்தராவின் நிறுவனமே ஏறத்தாழ அனைத்து விருதுகளையும் வாங்குகிறது. துறையில் சிறந்து விளங்குபவர்கள், தன் நிறுவனத்தின் பணியாளர்களாக இருக்கவேண்டும் என்கிற பிடிவாதத்தை உடையவர் வசுந்தரா.

ஒரேயொரு விருது மட்டும் ராகவனுக்குச் செல்கிறது. ஆச்சரியமடையும் வசுந்தரா அவனைத் தன்னுடைய நிறுவனத்துக்கு வளைத்துப் போட முயல்கிறார். ஆனால் தன் நிறுவனத்தின் மீது விசுவாசமுள்ள ரகுவரன், வசுந்தராவின் ஆணவமான தோரணையை தன்மானத்தோடு எதிர்கொள்கிறான்.

இங்கு ஆரம்பமாகிறது ரகுவரனுக்கும் வசுந்தராவுக்குமான பகை. வசுந்தரா தொடர்ந்து தரும் பல்வேறுவிதமான தொல்லைகளை ராகவன் எப்படி வெல்கிறான் என்பது இதன் திரைக்கதை.

**

தனுஷைப் பற்றி பார்ப்பதற்கு முன் அதை விடவும் முக்கியமான கஜோலைப் பற்றி பார்த்து விடுவோம். அம்மணி எப்படி இளமையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அழகுசுந்தரம் (விவேக்) உள்ளிட்ட சிலர் இவரை வியப்புடன் ‘சைட்’ அடிப்பதில் ஆச்சரியமேயில்லை. ‘பாஸிகர்’ காலத்திலேயே உறைந்து விட்டாரோ என்கிற பிரமை.

ஒரு நாயகனுக்கு நிகரான அறிமுகக்காட்சி இவருக்குத் தரப்படுகிறது. ஏறத்தாழ தனுஷுக்கு ஈடான முக்கியத்துவம். அட்டகாசமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் என்ன பிரச்னையென்றால் இந்தப் பாத்திரத்துக்கு என தனித்தன்மை எதுவுமில்லை. படையப்பா நீலாம்பரி, மன்னன் விஜயசாந்தி போன்ற அதே மாதிரியான பாத்திர வடிவமைப்பு. செல்வாக்கான, பணத்திமிர் பிடித்த பெண். தான் நினைத்ததை அடைய விரும்பும் பிடிவாதம். ஆனால் படத்தின் கடைசிப்பகுதியில் இவருடைய கதாபாத்திரம் எதிர்திசைக்கு மாறும்போது இவர் தரும் முகபாவங்கள் அற்புதம். இத்திரைப்படத்தின் புத்துணர்ச்சியான அடையாளத்துக்குக் காரணம் கஜோலாக இருப்பார்.

தனுஷைப் பற்றி என்ன சொல்ல? அதேதான். கஜோலைப் போலவேதான் இவருடைய இளமையையும் வியக்க வேண்டியிருக்கிறது. எளிமையான பின்னணி சார்ந்த நாயகன் செய்ய வேண்டிய அத்தனை சாகசங்களையும் செய்கிறார். இவர் அடித்தால் பத்து பேர் வீழ்வார்கள் என்று நம்பும்படி காட்சிகளை உருவாக்கிய சண்டை வடிவமைப்பாளருக்குப் பாராட்டு. சில காட்சிகளில் ரஜினியை நகலெடுப்பது போன்ற பிரமை.

முதலாளிக்குப் பக்கத்தில் உதவியாளராக வரும் ஒரு சாதாரண பாத்திரம் தோன்றும்போது அரங்கமே அதிரும் என்றால் அது ஆச்சரியம்தானே?. ஆம். ‘பிக் பாஸ்’ புகழ் ரைஸா, கஜோலின் உதவியாளராக படம் முழுவதும் வருகிறார். 

முந்தைய பாகத்தின் ‘கடுகடு’வில் இருந்து வேறுபட்ட பாத்திர வடிவமைப்பு சமுத்திரக்கனிக்கு. சில காட்சிகளில் நெகிழ வைக்கிறார். விவேக் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். தனுஷின் மனைவியாக அமலா பால். சிடுசிடு குடும்பத்தலைவியாக அந்த வீட்டையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துறுதுறுப்பு கவர்கிறது. தனுஷைச் சந்தேகப்படும் காட்சிகளில் மிகையான நடிப்பு என்றாலும் ரசிக்க முடிகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘பீம்சிங்’ திரைப்பட டிராமா மாதிரியே இருக்கிறது.


**
ஒரு வெகுஜன திரைப்பட இயக்குநராக, செளந்தர்யா திறம்பட தயாராகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய பாகத்தின் வடிவமைப்பை அடித்தளமாகக் கொண்டு அதன் முக்கியமான அடையாளங்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு புது வடிவத்தைச் சிறப்பாகவே உருவாக்கியிருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா காட்சிகள் என்றாலும் சலிப்பூட்டாமல் வேகமாக நகரும் திரைக்கதை.

தனுஷின் தம்பி முதற்கொண்டு முந்தைய பாகத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களையும், தனுஷின் மோஃபா வண்டியையும் அப்படியே பயன்படுத்தியிருப்பது சிறப்பு. தனுஷ் பணிபுரியும் கட்டட நிறுவன உரிமையாளரின் மகள் பாத்திரத்துக்கான நடிகர் மட்டுமே மாறியிருக்கிறார்.

இந்தப் பாகத்துக்காகப் புது நாயகியை உள்ளே கொண்டு வந்து டூயட் பாடுவது போல் எல்லாம்  திரைக்கதை அமைக்காத இயக்குநரின் துணிச்சலைப் பாராட்டலாம்.

முந்தைய பாகத்தில் இறந்து போன சரண்யாவை இதன் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கும் புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது.

முந்தைய பாகத்துக்காக அனிருத் உருவாக்கிய பின்னணி இசையே இந்தத்திரைப்படத்தின் பரபரப்புக்கு பெரும்பாலும் உதவுகிறது. இரண்டாவது பாகத்தின் இசையமைப்பாளரான ஷான் ரோல்டனால் இதைக் கடக்க முடியவில்லை. பாடல்கள் பெரிதும் கவரவில்லை. சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு காட்சிகளின் பிரம்மாண்டத்தை சரியாகக் கைப்பற்றியிருக்கிறது.

**

வெகுஜனத் திரைப்படம்தான் என்றாலும் சில காட்சிகளில் தர்க்கம் சரியாகக் கூடிவரவில்லை. வசுந்தராவுக்கும் ரகுவரனுக்கும் ஏற்படும் பகைமைதான் இந்தத் திரைப்படத்தின் மையம். ஆனால் அது அழுத்தமாக உருவாக்கப்படவில்லை. தன்னுடைய தொழிலில் எத்தனையோ எதிரிகளைப் பார்த்து வளர்ந்த வசுந்தரா, தனுஷின் பணி நியமன நிராகரிப்பை அத்தனை தீவிரமாகவா எடுத்துக்கொள்வார்?

தன்னை விடவும் சிறிய நிறுவனத்தின் ஆர்டர்களைக் கைப்பற்ற கோடிக்கணக்கான நிதியை வணிகர்கள் இழப்பார்கள் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். சென்னையில் நிகழ்ந்த வெள்ளத்தில் வசுந்தராவின் அத்தனை பிரம்மாண்டக் கட்டடத்தில் தண்ணீர் புகுந்துவிட்டது, எவருமே இருக்க மாட்டார்கள் என்பதெல்லாம் நிச்சயம் பூச்சுற்றல். இப்படி லாஜிக் இல்லாமல் நிறைய காட்சிகள் நகர்கின்றன.

மிஸ்டர் பாரத், உழைப்பாளி, என்று பல ரஜினி படங்களின் திரைக்கதை வாசனை பலமாக அடிக்கிறது. (கதை – வசனம்: தனுஷ்).

படத்தின் இறுதிப்பகுதி சற்று நீளமாக அமைந்து சலிப்பை ஏற்படுத்தினாலும் கூடவே சுவாரசியமாகவும் இருக்கிறது. வெள்ளம் காரணமாக கட்டடத்தின் உள்ளே மாட்டிக் கொள்ளும் தனுஷூம் கஜோலும் ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ளும் காட்சிகள் சிறப்பு.

வழக்கமான தமிழ் சினிமாக்கள் போல அதிரடியான கிளைமாக்ஸ் சண்டையுடன் ‘சுபம்’ போடாமல் எதிர்நாயகியின் மனமாற்றத்துடன் படத்தை நேர்மறையாகவும் இயல்பாகவும் முடித்திருப்பது வித்தியாசம். இதற்காக இயக்குநரைப் பாராட்டத் தோன்றினாலும் ஏதோவொரு நிறைவின்மையுடன், திரைப்படம் சட்டென்று முடிந்து விட்டது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

ஒரு வெகுஜனத் திரைப்படமாக விஐபி2 தேறுகிறது என்றாலும் முந்தைய பாகத்தில் இருந்த சுவாரசியம் காணாமல் போகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஒப்பீட்டைத் தவிர்க்க முடியாது. சீக்குவல் வகைத் திரைப்படங்களுக்குப் பொதுவாக ஏற்படும் விபத்து இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com