ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடித்த 'போகன்'  - சினிமா விமரிசனம்

நாயகனுக்கும் எதிர்நாயகனுக்கும் சமமான வாய்ப்பு உள்ள திரைக்கதை. எனவே ஜெயம் ரவியை விடவும் சில இடங்களில்...
ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடித்த 'போகன்'  - சினிமா விமரிசனம்

இந்த விமரிசனத்தின் தலைப்பு, அரவிந்த் சாமியின் 'போகன்' என்று அமைந்திருந்தாலும் பொருத்தமே. நாயகர்களின் பாத்திரப் பெயர்களை திரைப்படங்களுக்குத் தலைப்பாகச் சூட்டுவது பொதுவான வழக்கம். எதிர்நாயகனின் பெயரைச் சூட்டுவதாக இருந்தால் 'ஹீரோவே' அந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

அப்படியல்லாமல் ஓர் எதிர்நாயகனின் பாத்திரப் பெயரைப் படத்தின் தலைப்பாக வைத்திருப்பதில் வித்தியாசப்பட்டு நிற்கிறது 'போகன்'. படமும் அதைப் போலவே வித்தியாசமானதா என்றால் சற்று தயக்கத்துடன் தலையை ஆட்டி வைக்கலாம்.

'ஆள் மாறாட்டம்' என்கிற விஷயத்தை வைத்துக்கொண்டு பூனை - எலி வேட்டையை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ள இரட்டையர்களைக் கொண்டு பல சுவாரசியமான திரைக்கதைகள் உள்ளன. எஸ்.ஜே.சூர்யாவின் 'வாலி' ஒரு நல்ல உதாரணம்.

போகனில் என்ன வித்தியாசம்? 

ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஐம்பத்தி இரண்டாவது கலையாக சொல்லப்படுவது 'பரகாய பிரவேசம்'. சித்தர்களின் விளையாட்டுக்களில் ஒன்று. 'கூடு விட்டு கூடுபாயும்' இந்தக் கலையை அடிப்படையாகக் கொண்டு தமிழில் நிறைய தொன்மக்கதைகள் உள்ளன. 1997-ல் வெளிவந்த Face/off என்னும் திரைக்கதையின் மீது இந்த தொன்மத்தின் வர்ணத்தை அடித்து மறைக்க முயன்ற  இயக்குநரின் 'சித்து விளையாட்டே' 'போகன்'.


**

ஆதித்யா (அரவிந்த் சாமி)  ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். ராஜாக்களின் சொகுசுகளைச் சுதந்தர அரசு பறித்துக்கொள்வதால் இவரின் தந்தை மீதமுள்ள சொத்துக்களை அனுபவித்து தீர்த்து விடுகிறார். போண்டியாகி விடும் மகன், தந்தையைப் போலவே வாழ்க்கையை மது, மாது என கொண்டாட்டமாக கழிக்க நினைக்கிறான். எனவே பல்வேறு திருட்டுக்களில் ஈடுபடுகிறான். பிறகு ஓலைச்சுவடி மூலம் தற்செயலாக கிடைத்த ஓர் அரிய சக்தியைப் பயன்படுத்துகிறான். அதன்படி, நடுத்தர வர்க்கச் சமூகம் சிட்பண்டில் தாமாக வந்து ஏமாறுவதைப் போலவே பணத்தைக் கையாள்பவர்கள் அத்தனை பணத்தையும் தாமாகக்கொண்டு வந்து இவருடைய வண்டியில் கொண்டுவந்து வைத்துவிட்டு பொத்தென்று மல்லாக்காக விழுந்து சரிகிறார்கள்.

இப்படிப் பணத்தைக் கொட்டிவிட்டு விழுபவர்களில் வங்கி மேலாளரும் ஒருவர். பணத்தைத் திருடியதாக அவர் மீது பழி விழுகிறது. அவரின் மகன்தான் உதவி கமிஷனரான விக்ரம் (ஜெயம் ரவி). தன் தந்தையின் மீதான களங்கத்தைத் துடைக்க இந்தக் குற்றங்களைப் பற்றி விசாரணை செய்வதின் மூலம் போகனை அடையாளம் காண்கிறான். சாமர்த்தியமாக அவனை ஏமாற்றி கைது செய்கிறான். . பதிலுக்கு போகன் தன்னிடமுள்ள பிரத்யேகமான சக்தியைப் பயன்படுத்தி விக்ரமைப் பழிவாங்க முயல்கிறான். இருவரும் எதிரெதிர் நிலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். அதாவது ஜெயம் ரவியின் உடலில் அரவிந்த் சாமியின் ஆளுமை புகுந்து விடுகிறது. அவரின் உடலில் இருக்கும் ஜெயம் ரவி சிறையில் தவிக்கிறான். 

பிறகு நிகழும் சடுகுடு ஆட்டங்களை சற்று விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மண். ஆனால் ஒரு நிலையில் இது சலிப்பான விளையாட்டாகி 'எப்போதடா முடியும்' என்று நமக்குள் ஒரு கோப ஆவி வந்து புகுந்து கொள்கிற அளவுக்கு நீள்கிறது. 

**

ஜெயம் ரவி கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு போகனின் குணாதிசயங்கள் அவருக்குள் புகுந்து கொள்ளும் வித்தியாசமான தோரணைகளை நன்றாகவே கையாள்கிறார். போலவே போகனை ஏமாற்றி கைது செய்யும் காட்சிகளிலும் அவர் நடிப்பு நன்றாக உள்ளது. 

நாயகனுக்கும் எதிர்நாயகனுக்கும் சமமான வாய்ப்பு உள்ள திரைக்கதை. எனவே ஜெயம் ரவியை விடவும் சில இடங்களில் அரவிந்த் சாமியின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. ஜெயம் ரவியும் அவரது போலீஸ் கூட்டணியும் தனியறையில் அடைத்து வைத்து விசாரிக்கும்போது அவர்களை அநாயசமாக கையாளும் காட்சிகளில் 'அடடே' சாமியாகியிருக்கிறார். போதை மருந்தின் உற்சாகத்தில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு காருக்குள் அமர்ந்தபடியே அவர் நடனமாடுவது ரகளையான காட்சி. 

நாயகி ஹன்சிகாவின் நடிப்பு தொடக்க காட்சிகளில் நன்றாகவே அமைந்துள்ளது. ஆனால் நாயகிகளால் எதையும் சுயமாக சிந்திக்க முடியாது என்கிற வழக்கமான தன்மையை இத்திரைப்படமும் கொண்டிருக்கிறது. ஆங்கிலப்படத்தின் நாயகி, தன்கூட குடும்பம் நடத்துவது தன் கணவன் அல்ல என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்கிறாள். ஆனால் இதில் வழக்கமான 'நாயகித்தனத்துக்காகவும்'  கவர்ச்சிக்காகவுமே அந்தப் பாத்திரம் சித்தரிக்கப்படுவது சோர்வூட்டுகிறது. 

**

இமானின் ரகளையான இசையில் பாடல்கள் ஏற்கெனவே வெற்றியடைந்து விட்டன. குறிப்பாக 'செந்தூரா' பாடலில் தாமரையின் கவித்துவமான வரிகள் வசீகரமாக அமைந்துள்ளன. போலவே போகனின் பாத்திர வடிவமைப்பை சரியாக உணர்த்தும் வகையில் 'காதல் என்பது நேர செலவு, காமம் ஒன்றே உண்மைத் துறவு' என்பது போன்ற மதன் கார்க்கியின் வரிகளும் அபாரம். 

நாயகன் x எதிர்நாயகன் என்கிற கருத்தை மையமாகக் கொண்ட 'டமாலு டுமீலு' திரைக்கதைக்கு பொருந்தாதாக இருந்தாலும் கேட்பதற்கு உற்சாகமளிக்கிறது. இமானின் பின்னணி இசையும் பல இடங்களில் அதிரடியாக அமைந்துள்ளது. சில இடங்களில் ஆங்கிலப்படங்களை நினைவூட்டும் திறமையான ஒளிப்பதிவு. படத்தொகுப்பாளர் ஆன்டனி இன்னமும் கூட சிக்கனமாக செயல்பட்டிருக்கலாம் என தோன்ற வைக்குமளவுக்கு சில இழுவையான காட்சிகள்.

**

இந்த திரைப்படத்துக்காக, எதிர்நாயகன் பாத்திரத்துக்கு முதலில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க முயன்று அது இயலாமல் போன செய்தி ஒன்றைக் கவனித்தேன். அது சாத்தியமடைந்திருந்தால் இத்திரைப்படம் நிச்சயமாக வேறு வண்ணத்தில், சுவாரசியத்தில் இன்னமும் மேம்பட்டிருக்கும். அரவிந்த் சாமியின் நடிப்பு நன்றாக இருந்திருந்தாலும்கூட 'தனியொருவன்' கூட்டணியே இதிலும் தொடர்வதால் அது சார்ந்த சலிப்பு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

'கூடுவிட்டு கூடு பாயும் கலையை' தன் திரைக்கதைக்காக யோசித்திருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம் என்றாலும் அந்தச் சாத்தியத்தை அவர் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்தியிருப்பது  ஏமாற்றத்தை தருகிறது. 'இந்தச் சக்தியை வைத்துக்கொண்டு நான் என்னவெல்லாம் செய்திருப்பேன் தெரியுமா?' என்று நாசர் ஒரு காட்சியில் சொல்லும்போது 'ஆமாப்பா' என்று நமக்கே தோன்றுகிறது. இயக்குநருக்குத் தோன்றவில்லை.

இறுதிப்பகுதியில் எப்படிப் பயணிப்பது என்று தெரியாமல் அலைமோதும் திரைக்கதை, இரண்டாம் பாகமும் தொடர்வதற்கான சமிக்ஞையுடன் நிறையும்போது  நம்முடைய கூட்டுக்குள் திகில் பாய்ந்து வெளியேறுகிறது.

வித்தியாசமான பின்னணியைக் கொண்டிருக்கும் திரைக்கதைதான் என்றாலும் அதன் பெரும்பாலான சாத்தியங்களைப் பயன்படுத்தியிருந்தால் போகன் இன்னமும் வசீகரமானவனாக அமைந்திருப்பான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com