ஒரே படம், 'மொத்த தமிழ் சினிமாவும் டோட்டல் டேமேஜ்' - இது தான் தமிழ்ப்படம் 2.0

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2.0 ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் விட்டுவைக்காமல் கலாய்த்து தள்ளியுள்ளது. 
ஒரே படம், 'மொத்த தமிழ் சினிமாவும் டோட்டல் டேமேஜ்' - இது தான் தமிழ்ப்படம் 2.0

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் 'தமிழ்ப்படம் 2.0' திரையரங்குகளில் வியாழக்கிழமை வெளியானது. இந்த படக்குழுவினர் எண்ணற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், பாடல் காட்சி, படத்தில் இருந்து நீ்க்கப்பட்ட காட்சி என வரிசையாக வெளியிட்டு படம் வெளியாவதற்கு முன்பு இருந்தே திரைப்படத்தின் வேவ்லென்த்துக்கு ரசிகர்களை டியூன் செய்துவிட்டனர். அதற்கு கிடைத்த பலனாக திரையரங்குகளில் காலை 5 மணி காட்சியில் இருந்தே ரசிகர்கள் பட்டாளம் குவிந்துள்ளது. 

சரி, படத்தின் கதையை பார்ப்போம். 

தமிழ்படம் 2.0, முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே தொடங்குகிறது. முதல் பாகத்தில் சிவாவின் காதலியாக வரும் பிரியா (திஷா பாண்டே) இந்த பாகத்தில் மனைவி கதாபாத்திரத்தில் தொடர்கிறார். 

பிரியாவை, வில்லன் 'பி' கொலை செய்கிறார். இதனால், வில்லன் 'பி' யை பழி வாங்குவதற்கு சிவா போலீஸ் வேலையில் சேர்கிறார். இதையடுத்து, வில்லன் 'பி' யை சிவா பழி வாங்கினாரா இல்லையா என்பது தான் கதை. 

இந்தப் படத்தின் டைடில் கார்டில் இருந்தே ரசிகர்களை டியூன் செய்கிறார் சி.எஸ்.அமுதன். அதன்பிறகு படத்தில் காட்சிக்கு காட்சி, வசனத்துக்கு வசனம் ஒவ்வொரு சினிமாவாக வரிசையாக கலாய்க்கிறார் சிவா. படத்தில் வரும் சிறிய வசனங்களை கூட தவறவிடாமல் கவனிக்க வேண்டிய அளவுக்கு கலாய்கள் உள்ளன. 

படம் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொரு வசனத்துக்கு இடையிலும் இது இந்த நபரை குறிக்கிறது, இந்த நிகழ்வை குறிக்கிறது என உரையாடும் அளவுக்கு 2 1/2 மணி நேரமும் கலாய் மழைகளை பொழிந்துள்ளார் அமுதன். அமுதன் பொழியும் கலாய் மழைகளை சிவா மற்றும் சதீஷ் கச்சிதமாக செயல்படுத்தியது தான் படத்தின் மிகப் பெரிய பலமே. 

இது புதுசு: 

தமிழ்ப்படம் 2.0 முதல் பாகத்தில் இருந்து 2-ஆம் பாகத்துக்கு அப்கிரேட் ஆகியுள்ளது. அதற்கு ஏற்றவாறு கதை களத்தில் கலாய்களும் அப்கிரேட் ஆகியுள்ளன. இந்த படத்தில் திரைப்படங்கள் மட்டுமின்றி அரசியல் ஸ்பூஃப்களையும் அமுதன் புதியதாக களமிறக்கியுள்ளார். 

மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்த தமிழக அரசியல் மற்றும் தேசிய அரசியல் நிகழ்வுகளை படத்தில் அரங்கேற்றியிருப்பது ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளுகிறது. உதாரணத்துக்கு, அண்மையில் நடந்து முடிந்த ஆளுநர் சர்ச்சை கூட படத்தில் கிண்டலாக காண்பிக்கப்பட்டுள்ளது. 

அகில உலக சூப்பர் ஸ்டாராக வரும் சிவாவை வைத்து அகில உலக சினிமாக்களை கூட அமுதன் விட்டுவைக்கவில்லை. ஹாலிவுட் படங்களான ஸ்கைஃபால், கசினோ ராயல், எக்ஸ்மென் வோல்வுரின் மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸ் என உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள சினிமாக்களையும் விட்டுவைக்காமல் அமுதன் படத்தை நன்றாக அப்கிரேட் செய்துள்ளார். 

பிறகு சினிமாக்கள் இல்லாமல் திரை பிரபலங்களின் அரசியல் பிரவேசங்கள், நேர்காணல்கள், குறிப்பிட்ட பிரபலங்களின் தனித்துவமான பாணி என கலாய்களுக்கு பஞ்சமே இல்லாமல் படம் பயணிக்கும்.  

அஜித் ரசிகர்கள் ரியாக்ஷன்?

இந்தப் படம் நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு எப்படி காட்சியளிக்கும் என்பது கேள்விக்குறி. அது ஏன் அஜித்குமார் என்று கேள்வி எழுப்பினால், அதற்கான விடை படத்தில் உள்ளது. 

பொதுவாக படம் முடிந்த பிறகு வரும் என்ட் கார்டுகளை பெரும்பாலான ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள். படம் முடிந்தவுடன் வெளியே சென்றுவிடுவார்கள். ஆனால், இந்த படத்தில் என்ட் கார்டு கூட  மொத்த ரசிகர்களையும் ஈர்த்து இருக்கையிலே அமர வைத்தது.

பின்னணி நாயகர்கள்:

இதுபோன்ற எண்ணற்ற ஸ்பூஃப்களை கோர்த்து அதனை கதையுடன் திணித்து, பார்த்த சினிமாக்களை திரும்ப பார்க்கும் போதும் முகம் சுளிக்க வைக்காத வகையில் திரைக்கதை அமைப்பது என்பது எளிதானதல்ல. அதனால், ரசிகர்களிடம் இருந்து அமுதன் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார். 

வசனத்துக்கு வசனம் கலாய் மழைகளை பொழியும் வகையில் சுவாரஸ்யமாக அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை கலாய் தன்மையுடனேயே ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்த கே.சந்துரு மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளார். கே. சந்துரு தான் இந்த படத்துக்கு வசனம் எழுதியவர். 

படத்தின் கதையில் சினிமாக்கள் மட்டுமின்றி, பாடல்களும் பாடல் வரிகளும் கலாய்க்கப்பட்டுள்ளனர். முத்து படத்தில் வரும் 'விடுகதையா' பாடலை 'சிறுகதையா', ஆரோமலே பாடலை ஏழோமலே என பின்னணி பாடல்களிலும் கலாய் மன நிலையிலேயே தமிழ்படம் 2.0  ரசிகர்களை வைத்திருக்கிறது. இதில், பாடலாசிரியர்கள் சி.எஸ்.அமுதன், கார்க்கி, தியாகும், கே. சந்துரு மற்றும் இசையமைப்பாளர் கண்ணன் கூட்டணி வெற்றி கண்டுள்ளது.  

திரை நாயகர்கள்:

மிர்சி சிவா தனது வழக்கமான கலாய் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து அகில உலக சூப்பர் ஸ்டாராக கைதட்டல்களை பெற்றுள்ளார். 

வில்லன் 'பி' ஆக வரும் சதீஷ், தமிழ் சினிமா வில்லன்கள் மட்டுமின்றி ஹாலிவுட் சினிமா வில்லன்களுக்கே கடும் போட்டியாக திகழும் அளவுக்கு தனது விதவிதமான கெட்-அப் களில் ஜொலித்து ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார். 

தமிழ்படம் 2.0 வின் கதாநாயகி ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

மிர்சி சிவாவின் நண்பர்களாக வரும் இயக்குநர்கள் மனோபாலா, சுந்தர்ராஜன் மற்றும் சந்தானபாரதி தங்களது கெட் அப்களில் கைதட்டல்களை அள்ளினர். குறிப்பாக சந்தானபாரதியின் ஒரு கெட் ஆப் ரசிகர்கள் மனதில் என்றும் நினைவில் இருப்பார். 

பொதுவாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தோன்றும் கலைராணி இந்த படத்தில் மிர்சி சிவாவின் பாட்டியாக நகைச்சுவையில் வென்றுள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் வரை கலைராணி கதாபாத்திரத்துக்கு முக்கியமான காட்சிகள் உள்ளது.   

மொத்தத்தில், வடிவேல் பாணியில் சொன்னால், தமிழ்ப்படம் 2.0 'மொத்த தமிழ் சினிமாவும் டோட்டல் டேமேஜ்'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com