விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ - திரை விமரிசனம்

தீவிரத்திற்கும் நகைச்சுவைக்கும் இடையிலான பயணத்தில் தடுமாறியிருக்கும் பாலாஜி தரணிதரனின் முயற்சி அடுத்தப் படத்திலாவது...
விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ - திரை விமரிசனம்

‘உண்மையான கலைக்கும் கலைஞனுக்கும் எப்போதும் அழிவில்லை’ என்கிற ஆதாரமான உண்மையைப் புதுமையான கற்பனையைக் கொண்ட திரைக்கதையின் மூலம் சொல்ல முயன்ற இயக்குநர் பாலாஜி தரணிதரனை முதலில் பாராட்டி விடலாம். ஆனால் இந்த முயற்சி தீவிரமாகவும் இல்லாமல் நகைச்சுவையாகவும் இல்லாமல் இரண்டுங்கெட்டான்தனமாகப் போனதுதான் பரிதாபம். இதற்கு ஏன் வயசான விஜய் சேதுபதி, ப்ராஸ்தடிக் ஒப்பனை என்றெல்லாம் கேள்விகள் எழாமல் இல்லை.

தமிழ் சினிமாவின் சில நடைமுறைப் பிரச்னைகளைக் கூர்மையாகக் கிண்டலடிக்கும் சில நகைச்சுவைத் தருணங்கள் இந்தத் திரைப்படத்தில் அடங்கியிருந்தாலும் தர்க்கமற்ற கதையின் மையம், சுவாரசியமற்ற திரைக்கதை போன்றவை இந்த நல்ல முயற்சியைப் பின்னுக்கு இழுத்துச் செல்கின்றன.

*

மேடை நாடகத்தில் நடிப்பதையே தன் வாழ்க்கையாகக் கொண்ட ஐயா ஆதிமூலம் (விஜய் சேதுபதி), உன்னதமான நாடகக்கலையை மக்கள் மெல்ல நிராகரித்துக் கொண்டிருக்கிற காரணத்தினாலும் சில சொந்தப் பிரச்னைகளாலும் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இறந்து போகிறார். ஆனால் அவரின் ஆன்மா, நாடகக்குழுவைச் சேர்ந்த பிற நடிகர்களின் வழியாக வந்து திறமையான நடிப்பைத் தருவதை சபாவின் நிர்வாகி பரசுராமன் (மெளலி) கண்டு உணர்ச்சிவசப்படுகிறார். ஆதிமூலத்தின் குடும்பத்தினரும் இதனால் மகிழ்கிறார்கள்.

நாடகக்குழுவில் இருக்கும் சுமாரான நடிகரான சரவணனுக்கு (ராஜ்குமார்) ‘ஆன்மா’வின் வழியாக வரும் நடிப்பு காரணமாக சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. ‘நல்ல கதைகளாக இருந்தால் ஒப்புக் கொள்வோம்’ என்கிற பரசுராமனின் நிபந்தனையுடன் சரவணன் திரையுலகில் நுழைகிறார். மெல்ல வரவேற்பைப் பெறுகிறார். ஆதிமூலத்தின் குடும்பப் பிரச்னைகளும் இதனால் தீரத் துவங்குகின்றன.

ஆனால் ஒரு கட்டத்தில் சரவணன் மனம் மாறுகிறார். தன் திறமை காரணமாகக் கிடைக்கும் பணத்தையும் புகழையும் ஏன் ஆதிமூலத்தின் பிம்பத்துடன் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார். அந்தக் கணத்திலிருந்து அவரால் சிறப்பாக நடிக்க முடிவதில்லை. பிறகு மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறார்.

ஆதிமூலத்தின் ஆன்மாதான் மனிதர்களின் வழியாக வந்து நடிக்கிறது என்கிற உண்மை இதனால் அம்பலப்படவே ‘அய்யா’விற்கு ரசிகர் மன்றங்கள் உருவாகின்றன. ஒரு சூப்பர் ஸ்டாருக்கு நிகரான புகழ் அவருக்குக் கிடைக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் நடிப்பதை ஆதிமூலத்தின் ஆன்மா நிறுத்தி விடுகிறது. இதனால் ஏற்படும் சில நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு தேடும் காட்சிகளுடன் நகர்கிறது திரைப்படம்.

*

முப்பதுகளின் புராண நாடகமான ‘லவகுசா’ முதல் எண்பதுகளின் சமூக நாடகமான ‘விசாரணை’யைத் தொடர்ந்து சுஜாதாவின் ‘ஊஞ்சல்’ நாடகம் வரை விதவிதமான தோற்றங்களில் சிறப்பாக நடிக்கும் விஜய் சேதுபதியின் நடிப்புத்திறமை ஆரம்பத்திலேயே சில நிமிடங்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்டு விடுகிறது. அதிலும் ஒளரங்கசீப்பாக ஒரே ஷாட்டில் நடித்திருக்கும் காட்சி வழக்கத்திற்கு மாறான விஜய் சேதுபதியை அடையாளம் காண்பிக்கிறது. ஒரு முதியவரின் உடல்மொழியையும் சிறப்பாக அவர் வெளிப்படுத்துகிறார்.

ஆனால் இது தொடர்பான மேடை நாடகக் காட்சிகள் துவக்கத்திலேயே வந்து பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிப்பதையும் கவனிக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்குள் சடசடவென மாறும் பல நூறு காட்சித்துண்டுகளுக்குப் பழகி விட்டிருக்கும் நவீன மனிதர்களின் மூளை, மெல்ல நகரும் மேடை நாடகக் காட்சிகளைச் சலிப்புடன் நோக்குகிறது.

பிறகு ஆரம்பிக்கிறது அந்த நகைச்சுவைக் கலாட்டா. ஒரேயொரு க்ளோஷப் காட்சியில் கூட நடிக்கத் திராணியில்லாமல் தொழில்நுட்பங்களில் இருக்கும் வசதிகளின் வழியாக ஊதிப் பெருக்கப்படும் நட்சத்திரப் பிம்பங்களின் முகமூடிகள் கருணையின்றிக் கிழிக்கப்படுகின்றன. ஒரேயொரு ரொமான்ஸ் பார்வைக்காக, நடிப்பே வராத ஆசாமிகளிடம் திரைப்பட இயக்குநர்கள் மல்லுக்கட்டி அவதிப்படும் காட்சிகள் நிழலுக்குப் பின்னால் உள்ள நிஜத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன. பணமிருப்பதாலேயே நடிக்க வந்து விடும் பட முதலாளிகளையும் இயக்குநர் விட்டு வைக்கவில்லை. இவை சார்ந்த காட்சிகள் நகைச்சுவைத்தன்மையோடு அமைந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

பரசுராமனாக மெளலி தன் பங்களிப்பைச் சிறப்பாக செய்துள்ளார். ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துப் பழக்கப்பட்டு விட்டதாலேயோ என்னவோ, அந்தப் பாணியிலான முகபாவத்தைச் சில காட்சிகளில் வெளிப்படுத்துவது செயற்கையானதாக இருக்கிறது. நட்சத்திரமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நடிகரான ராஜ்குமாரிடமிருந்து வலுக்கட்டாயமாக நடிப்பைப் பிடுங்க முயற்சிக்கும் இயக்குநராக பக்ஸ் (பகவதி பெருமாள்) கலக்கியிருக்கிறார். தேசிய விருது பெற்ற அர்ச்சனா அநியாயமாக வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

தர்க்கத்திற்குப் பொருந்தாத கதையமைப்பிற்கு முட்டுக் கொடுக்கவும் நம்பகத்தன்மையை உருவாக்கவும் பாரதிராஜா, பாக்யராஜ், ராம், பவா செல்லத்துரை, பரத்வாஜ் ரங்கன், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் போன்றவர்கள் தலைகாட்டி உதவியிருக்கிறார்கள். நீதிபதியாக நடித்திருக்கும் இயக்குநர் மகேந்திரனின் நடிப்பு அருமை. ஹீரோவாக ஆசைப்பட்டு அலப்பறை செய்யும் பட முதலாளியாக சுனில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் துவக்கக் காட்சிகளில், சில நிமிடங்களுக்கு மட்டும் விஜய் சேதுபதி வருவது கூட பிரச்னையில்லை. ஒரு பலமான அஸ்திவாரமாக இந்தக் காட்சிகள் அமைந்து உதவியிருந்தன. ஆனால் இதற்கு மேல் பலமாகக் கட்டவேண்டிய கட்டடம்தான் சுமாராக அமைந்து விட்டது. என்னதான் மகா நடிகராக இருந்தாலும் இறந்து போனவரின் ஆன்மாவிற்கு இத்தனை வெறித்தனமாக ரசிகர்கள் இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதெல்லாம் ஒருபுறம் தமிழர்களின் சினிமா வெறியைக் கிண்டலடிப்பது போல் இருந்தாலும் இன்னொரு புறம் தர்க்கமில்லாமல் இருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டின்போது எதிர்பாராதவிதமாக ஒருவருக்குத் தலையில் அடிபடுவதின் மூலம் சமகால நினைவுகள் அழிந்து போகின்றன. என்றாலும் நண்பர்கள் இணைந்து எப்படியோ சமாளித்து அவரது திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். இது உண்மையான சம்பவம் என்று சொல்லப்பட்டாலும் தர்க்கத்திற்கு அத்தனை பொருந்தாத இந்த மெல்லியக் கதையை வைத்துக்கொண்டு இயல்பான நகைச்சுவை, சீரான திரைக்கதை, அடுக்கி வைக்கப்பட்ட நம்பகத்தன்மை போன்றவற்றினால் முதல் திரைப்படத்தில் அசத்தியிருந்த பாலாஜி தரணிதரன், இரண்டாவது திரைப்படத்தில் அந்த மாயத்தை நிகழ்த்துவதில் சறுக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஆன்மா நடிப்பதை ஊரே நம்புவது, அது வழக்கு விசாரணைக்கு வருவது போன்ற செயற்கையான காட்சிகள் எல்லாம் படத்தின் நம்பகத்தன்மையைச் சாகடித்திருக்கின்றன.

உயிரோடு இருக்கும்போது சினிமாவில் நடிப்பதை அறவே விரும்பாத நாடக நடிகரின் ஆன்மா, பிறகு திரையில் நடிப்பதற்கு எவ்வாறு சம்மதிக்கிறது, குடும்பச் சிக்கல் தீர்ந்த பிறகும் எவ்வாறு தொடர்கிறது போன்றவை பெரிய கேள்விக்குறி.

மதுக்கடைகளில் முண்டியடிக்கும் கூட்டம், செல்ஃபி மோக இளைஞர்கள், மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகள், அரங்கத்தின் காலி இருக்கைகள் போன்றவற்றை மெளனமான வருத்தத்துடன் விஜய் சேதுபதி பார்வையிட்டுக் கொண்டு வரும் காட்சியிலேயே உண்மையான நடிப்புக் கலையை விட்டு நாம் எவ்வளவு தூரம் நகர்ந்து வந்துள்ளோம் என்பது அழுத்தமாக நிறுவப்படுகிறது. ‘நடிப்பு என்றால் என்ன விலை?’ என்று கேட்கும் செல்வாக்கான ஆசாமிகளிடம் தமிழ் சினிமா மாட்டிக் கொண்டிருக்கும் அவலத்தையும் நகைச்சுவையின் வழியாகப் படம் அம்பலப்படுத்துகிறது. நாடக அரங்கின் மூலையிலுள்ள குருவிக்கூடு முதற்கொண்டு வசனம் இல்லாமல் ஒருவரின் முகபாவத்தின் வழியாகவே வெளிப்படும் அபாரமான எதிர்வினை வரை இயக்குநரின் பல நுணுக்கமான திட்டமிடல்கள் ரசிக்க வைக்கின்றன.

நாடக சபாவின் உள்ளரங்கக் காட்சிகள், வெளிப்புறப் படப்பிடிப்புகள் போன்றவற்றின் வித்தியாசத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரஸ்காந்த். கோவிந்த் வசந்தாவின் பாடல்களும் பின்னணி இசையும் மனத்தில் நிற்கவில்லை. படத்தொகுப்பாளர் ஆர். கோவிந்தராஜ்,  அநாவசியமான காட்சிகளைக் குறைத்து படத்தை இன்னமும் இறுக்கமாக்கியிருக்கலாம் (173 நிமிடங்கள் என்பது ஆடம்பர விரயம்).

தீவிரத்திற்கும் நகைச்சுவைக்கும் இடையிலான பயணத்தில் தடுமாறியிருக்கும் பாலாஜி தரணிதரனின் முயற்சி அடுத்தப் படத்திலாவது நன்றாக அமையட்டும். விஜய்சேதுபதியின் 25-வது திரைப்படம் என்கிற பெருமையுடன் வெளிவந்திருக்கும் இந்தப் படைப்பு இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com