ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்

அரசியல் போராளிகள் தொடர்ந்து தோன்றிக் கொண்டேயிருப்பார்கள் என்கிற செய்தியும் அழுத்தமாக...
ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்

அடித்தட்டு மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளை அதிகாரத்தின் கைகளிலிருந்து மீட்பதற்குப் போராட்டத்தைத் தவிர வேறு வழியேயில்லை என்கிற அரசியல் செய்தியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது, ரஞ்சித்தின் ‘காலா’ திரைப்படம். ‘நிலம் எங்கள் உரிமை’ என்கிற ஆதாரமான செய்தி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் இது சார்ந்த தீர்வு எந்த வகையான போராட்டத்தில் கிடைக்கும் என்பது தடுமாற்றத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.

எதிர்ப்பதற்காகவும் தற்காத்துக் கொள்வதற்காகவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வன்முறையை வன்முறையால் எதிர்கொள்வது அவசியம்தான் என்றாலும், நிலையான தீர்வுகளுக்கு மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு பரவுவதே சரியான வழி என்பதை ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் சொன்ன இரஞ்சித், ‘காலா’வில் பல குழப்பமான செய்திகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

காலாவின் மகனான லெனின் ஜனநாயகப் போராட்டங்களின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயல்கிறார். ஆனால் அவரின் வழிமுறைகள் கோமாளியாக்கப்படும் சூழலில் அதிகாரத்தின் மூர்க்கத்தை எதிர்க்கவும் கட்டுப்படுத்தவும் ரஜினியின் ரவுடியிஸம்தான் இறுதி வரை கைகொடுக்கிறது. இதன் மூலம் இரஞ்சித் உணர்த்த வரும் செய்தி என்ன?

**

மும்பை, தாராவியில் உள்ள அடித்தட்டு மக்களின் காப்பாளன் ‘காலா’ என்கிற கரிகாலன். அங்குள்ள மக்களுக்கு ‘வீடு கட்டித் தருகிறேன்’ என்று சில கட்டுமான நிறுவனங்கள் கிளம்புகின்றன. இந்தத் திட்டத்தின் பின்னால் அந்த ஊரின் பிரபல அரசியல்வாதியான ஹரிதாதா இருக்கிறார். தாராவி பகுதியின் முன்னாள் காப்பாளராக இருந்தவரும், காலாவின் தந்தையுமான ‘வேங்கையன்’ கொல்லப்படுவதற்கு இந்த ஹரிதான் காரணம். ஹரியின் சூழ்ச்சியை உணரும் கரிகாலன், வீட்டுத் திட்டம் நிறைவேற்றப்படாமலும், அதன் மூலம் பாமர மக்கள் ஏமாறாமல் இருக்கவும் அரணாக நிற்கிறார். இதன் மூலம் அவர் பல தனிப்பட்ட இழப்புகளை எதிர்கொள்ள நேர்கிறது.

எதிரிகளைக் காலா வீழ்த்தினாரா, வீழ்ந்தாரா என்பதைப் படத்தின் பிற்பகுதியில் வரும் பரபரப்பான காட்சிகள் விவரிக்கின்றன.

**

மிகையான ஒப்பனையுடன் இளம்பெண்களிடம் ‘டூயட்’ பாடும் அபத்தங்களில் இருந்து விடுபட்டுத் தன் வயதிற்கு ஏற்ற பாத்திரங்களை ரஜினி ஏற்கத் துவங்கியிருப்பது மகிழ்ச்சி. இது தொடர வேண்டும். ‘காலா’வாகப் பெரும்பான்மையான இடங்களில் ரஜினி தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் சில காட்சிகளில் வழக்கமான ஹீரோயிஸம் உயர்ந்து நிற்பது நெருடலாகவும் அபத்தமாகவும் இருக்கின்றன. அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒருவர், பத்து பதினைந்து மூர்க்கர்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடும் காட்சிகள் ரஜினி மற்றும் வெகுஜன ரசிகர்களுக்காகச் செய்யப்பட்ட சமரசமாகி நிற்கின்றன. எனவே இது ரஜினி சினிமாவாக அல்லாமலும் இரஞ்சித்தின் சினிமாவாக இல்லாமலும் இரண்டுங்கெட்டான்தனமாக ஆகியுள்ளது. 

இழந்த காதலின் தேடல் மற்றும் ஏக்கம் என்கிற படிமம் இரஞ்சித்தின் படங்களில் தொடர்ந்து காணப்படுகின்றன. தொலைந்து போன மனைவியை ‘கபாலி’யில் தேடித் தவித்த ரஜினி, ‘காலா’வில் தன் பழைய காதலியைக் கண்டு உருகுகிறார்; மருகுகிறார். இது தொடர்பான காட்சிகள் இயல்பாகவும் நெகிழ்ச்சியாகவும் பதிவாகியிருக்கின்றன. இரஞ்சித்தால் நல்லதொரு ‘ரொமாண்ட்டிக்’ சினிமாவைத் தர முடியும் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.

ரஜினியின் பழைய காதலி ‘ஜெரீனா’வாக ஹியூமா குரேஷி இயல்பாக நடித்திருக்கிறார். இருவரும் உணவகம் ஒன்றில் அமர்ந்து பேசும் காட்சி சிறப்பானது. தங்களின் ‘மலரும் நினைவுகளைப்’ பரவசத்துடன் நினைவுகூர்வது முதற்கொண்டுச் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவர்கள் சமகாலத்திற்குள் வந்து விழுவது வரை அந்தக் காட்சி அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ரஜினியின் மனைவி ‘செல்வி’யாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவின் நடிப்பு பிரத்யேகமாகச் சொல்லப்பட வேண்டியது. ‘தே.. இப்படி வந்து உக்காரு. திருஷ்டி சுத்திப் போடணும்’ என்று ஏக வசனத்தில் கணவரைத் தொடர்ந்து கலாட்டா செய்து கொண்டேயிருந்தாலும் அடியாழத்தில் உள்ள அவரின் அன்பும் காதலும் பல காட்சிகளில் அற்புதமாகப் பிரதிபலித்திருக்கின்றன. பழைய காதலியை சந்தித்துவிட்டு ரகசிய உற்சாகத்துடன் வரும் ரஜினியிடம் ‘தின்னவேலில பத்தாப்பு படிக்கும்போது என்னையும் நெறய பசங்க விரட்டிட்டு இருந்தாங்க.. அதில ஒருத்தன் என்னையே சுத்தி சுத்தி வந்தான். நானும் ஒரு எட்டு ஊருக்குப் போய் அவன் எப்படியிருக்கான்னு பாத்திட்டு வந்துடறேன்’ என்று கோபத்தை வெளிக்காட்டும் காட்சி நகைச்சுவைக் கலாட்டா.

எதிர்நாயகனாக நானா படேகர். அதிகார மமதையும் அகங்காரமும் தளும்பி வழியும் அரசியல்வாதியின் பாத்திரத்தை அற்புத இயல்புடன் கையாண்டிருக்கிறார். எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார். ‘உன்னைத்தான் கொல்ல நினைச்சேன். உன் மனைவியும் மகனும் இறந்துட்டாங்க. மன்னிச்சுடு’ என்று ரஜினியிடம் சொல்வது போன்ற காட்சிகளில் அசத்தியிருக்கிறார். ரஜினியின் மச்சானாகவும் வலதுகையாகவும் வரும் சமுத்திரக்கனியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. ரஜினியின் மகன் ‘லெனின்’ ஆக நடித்திருக்கும் மணிகண்டனின் பங்களிப்பு சிறப்பானது.

*

பார்வையாளர்கள் எரிச்சலடையும்படி பாடல்களைச் செயற்கையாகத் திணிக்காமல் சரியான சந்தர்ப்பங்களில் உபயோகிக்கும் இரஞ்சித்தின் திறமை ‘காலா’விலும் தொடர்கிறது. பொருத்தமான இடங்களில் பாடல்கள் அளவோடு ஒலிக்கின்றன. படவெளியீட்டிற்கு முன்னால் ‘பாடல்களை’ இரைச்சலாக உணர்ந்தவர்கள் கூட திருப்தியடையும்படி இருக்கின்றன பாடல் காட்சிகள். இரஞ்சித் முன்மொழியும் அரசியல், பாடல் வரிகளில் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன. காட்சிகளின் பரபரப்பிற்கு சந்தோஷ் நாராயணின் அபாரமான பின்னணி இசை உறுதுணையாக நின்றிருக்கிறது. வசனங்கள் இயல்பாகவும் சமயங்களில் அரசியல் அனல் தெறிப்புடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்துத்துவக் கருத்தியல்களின் பின்புலத்தில் வலதுசாரிக் கட்சிகள், அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் ஆவேசமாக முன்னகரும் சமகாலச் சூழலின் ஒரு சரியான காலக்கட்டத்தில் ஓர் எதிர்ப்பாயுதமாக ‘காலா’ நின்றிருக்கிறது எனலாம். ராமன்xராவணன் என்கிற கருத்துருவாக்கம் அரசியல் பொருளில் கச்சிதமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. வெட்டுப்பட வெட்டுப்பட ராவணனின் தலை முளைத்துக் கொண்டேயிருப்பதைப் போல அரசியல் போராளிகள் தொடர்ந்து தோன்றிக் கொண்டேயிருப்பார்கள் என்கிற செய்தியும் அழுத்தமாக சொல்லப்படுகிறது.

அடித்தட்டு மக்களின் போராட்ட வழி, வன்முறையை வன்முறையால் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டேயிருப்பதின் வழியிலா அல்லது கல்வியறிவு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதின் வழியிலா என்கிற தீர்வை அழுத்தமாக முன்வைப்பதில் படம் தடுமாறியிருக்கிறது. சில இழப்புகளுக்குப் பிறகு ‘போதும். அடிதடியெல்லாம் என் காலத்தோட போகட்டும்’ என்று ரஜினி உணர்ச்சியுடன் சொல்லும் வசனம், அதற்குப் பிறகான காட்சிகளின் வழி நிரூபிக்கப்படவில்லை.

ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற பிம்பம் உடைந்து பல இடங்களில் அவர் இயல்பான மனிதராகவே உலா வருவது மகிழ்ச்சி. ஆனால் அந்தப் பிம்பம் முழுமையாக உடையவில்லை என்பதுதான் சோகம். அதனால் இது ரஜினியின் சினிமாவா அல்லது இரஞ்சித்தின் சினிமாவா என்கிற குழப்பத்தைப் படத்தின் பிற்பகுதியின் காட்சிகள் உணர்த்துகின்றன. முன்னணி நாயகர்களால் விழுங்கப்படுவதற்கு முன்னால் ரஞ்சித் உடனே வெளிவர வேண்டும் என்பதைத்தான் ‘காலா’ நிரூபிக்கிறது.

ரஜினியின் கலைப்பயணத்தில் ‘காலா’ ஒரு சிறந்த முயற்சி. இரஞ்சித்தின் பயணத்தின் அது நிகழவில்லை என்பதுதான் முரண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com