சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ - சினிமா விமரிசனம்

சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ - சினிமா விமரிசனம்

ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமாகப் பயணிப்பதில் ‘சீமராஜா’ வெற்றி பெற்றிருக்கிறது...

இயக்குநர் பொன்ராம், சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷிடம் இணை இயக்குநராக இருந்தவர். நகர்ப்புறப் பின்னணியில் ராஜேஷ் செய்ததை, கிராமம் அல்லது சிறுநகரத்தின் பின்னணியில் பொன்ராம் செய்வார். வித்தியாசம் அவ்வளவே. பொறுப்பற்ற முறையில் தன் நண்பனுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன், தான் விரும்பும் பெண்ணை அடையும் முயற்சியில் சில சிக்கல்களைச் சந்திப்பான். அவற்றை வென்று எவ்வாறு தன் துணையை அடைகிறான் என்பதுதான் இதன் அடிப்படையான வடிவம். ஒருவகையில் இது தமிழ் சினிமாவின் அரதப்பழசான வடிவமும் கூட.

தன் குடும்பப் பின்னணியைப் பற்றி அறிந்தவுடன் ‘டானாக’ மாறும் விஜய்சேதுபதியை சமீபத்தில் பார்த்தோம். ‘சீமராஜா’விலும் ஏறத்தாழ அப்படியொரு நாயகன்.

இந்திய விடுதலைக்குப் பிறகு ஜமீன்தார், சமஸ்தானங்களின் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு அவர்களின் அதிகாரங்களும் சொத்துக்களும் பறிக்கப்பட்டன. எஞ்சிய சொத்துக்களையும் மிஞ்சிய புகழையும் வைத்துக்கொண்டு காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்குள் அவர்கள் தள்ளப்பட்டார்கள். அவ்வாறான சில வாரிசுகள் இன்னமும் கூட மீதமுள்ள ராஜவிசுவாசத்துடன் உள்ளூர் மக்களால் மதிக்கப்படுகிறார்கள். அப்படியொரு காலி பெருங்காய டப்பாதான் ‘சீமராஜா’.

**

புளியம்பட்டிக்கும் சிங்கம்பட்டிக்கும் உள்ள பகைமையுடன் திரைப்படம் ஆரம்பிக்கிறது. அலெக்ஸ், டெலக்ஸ் என்ற பெயருடைய இரட்டைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டு வண்டியில் உலா வரும் சிவகார்த்திகேயன், சிங்கம்பட்டியில் செல்வாக்கு மிக்கவர். கையெடுத்து கும்பிடாமல், ‘நல்லாயிருக்கீங்களா ராஜா’ என்று எவராவது கையை உயர்த்தி வாழ்த்தினால் பணத்தை அள்ளி இறைப்பவர் (சுயமரியாதையை வலியுறுத்துகிறாராம்). ஜில், ஜங், ஜக் என்று மூவரை மனைவியாக வைத்திருக்கும் சூரி. இவருடைய கணக்குப் பிள்ளை. (இவருடைய ‘சிக்ஸ் பேக்’ காமெடியாகவே முடிந்து விட்டது) சீனியர் ராஜாவான நெப்போலியனுக்கு சிவகார்த்திகேயனின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் பிடிப்பதில்லை என்றாலும் மகன் மீது பாசம் மிக்கவர்.

கறிக்கடை நடத்தி வரும் கண்ணன், (லால்), தனது மனைவியை ஒதுக்கிவிட்டு சந்தையில் காய்கறி விற்கும் காளீஸ்வரியை (சிம்ரன்) மணம் புரிந்தவுடன் அதிர்ஷ்டம் கொட்டுகிறது. விவசாயிகளை மிரட்டி நிலங்களைப் பறித்து அவற்றில் காற்றாலைகளை அமைக்கும் வணிகத்தில் கொடி கட்டிப் பறக்கிறார். என்றாலும் மக்களிடம் ‘ராஜா’விற்குக் கிடைக்கும் மரியாதை தனக்குக் கிடைப்பதில்லையே என்று மனம் குமைகிறார்.

புளியம்பட்டியில் உள்ள பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாகப் பணிபுரியும் சுதந்திரா தேவியைக் (சமந்தா) கண்டவுடன் காதல் கொள்கிறார் சிவகார்த்திகேயன். அவரை மணம் புரிவதில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. காற்றாடி கண்ணனுடன் மோதல் ஏற்படுகிறது. அதன் மூலம் தன்னுடைய ஜமீனின் புகழ்மிக்க வரலாற்றின் பின்னணியை அறிந்து கொள்ளும் சிவகார்த்திகேயன், விவசாய நிலங்களைப் பறிக்க முயலும் எதிரியின் சதியை முறியடித்து காதலியைக் கைப்பற்றுவதுதான் ‘சீமராஜா’.

**

பொன்ராமின் முந்தைய திரைப்படங்களான, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ‘ரஜினி முருகன்’ ஆகிய திரைப்படங்களின் ‘போகிற போக்கிலான’ நகைச்சுவையை மட்டுமே எதிர்பார்த்துச் செல்பவர்கள் ஏமாற்றமடையலாம். அந்த அம்சங்களும் ‘சீமராஜா’வில் இருக்கிறதுதான் என்றாலும் சிவகார்த்திகேயனை ‘சாகச நாயகனாக’ உயர்த்தும் முயற்சியில் பொன்ராம் ஈடுபட்டதால் நகைச்சுவை அம்சங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ‘அடுத்த வீட்டுப் பையன்” என்று சிவகார்த்திகேயனுக்கு இருக்கிற பிம்பம் அதிகம் சேதம் ஆகாமல் கவனமாக இந்த முயற்சியை நகர்த்தியிருக்கும் பொன்ராமிற்குப் பாராட்டு. சிவகார்த்திகேயனின் ‘ஆக்‌ஷன்’ காட்சிகள் நன்றாக எடுபட்டிருக்கின்றன. சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கும் ‘அனல் அரசு’ இதை திறமையாகச் சாதித்திருக்கிறார்.

‘பொறுப்பில்லாத இளைய ராஜா’ என்கிற சித்திரத்திற்குள் நன்றாகப் பொருந்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். முதல் பாதியில் சூரியுடன் இணைந்து இவர் செய்யும் கலாட்டாக்களில் வழக்கமான அம்சங்கள் இருக்கின்றன. பிறகு ஃப்ளாஷ்பேக்கில் 14-ம் நூற்றாண்டிற்குள் கதை நுழையும்போது ‘கடம்பவேல் ராஜாவாக’ சீரியஸ் முகம் காட்டுகிறார். ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் முரணாகிவிடுவது அவல நகைச்சுவை. வளர்ப்பு நாயைச் சிறுத்தையாக ஒப்பனை செய்து ஏமாற்ற முயலும் கொடூர நகைச்சுவைக் காட்சி ஒன்றும் இத்திரைப்படத்தில் வருகிறது.

ஃப்ளாஷ்பேக் காட்சிகள் சிறிது நேரமே வந்தாலும் அந்த சரித்திரப் பின்னணிக்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள். கலை இயக்குநர் முத்துராஜின் அபாரமான உழைப்பு தெரிகிறது. அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூரை எதிர்த்து கடம்பவேல் ராஜா வீரத்துடன் போரிடுவதாலேயே அவர் இதைப் பாராட்டி அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றாமல் திரும்பிச் செல்வதெல்லாம் வரலாற்று நகைச்சுவை. (‘பத்மாவதி’ திரைப்படத்தின் பாதிப்பு தெரிகிறது).

சுதந்திராதேவியாக சமந்தா மிக வசீகரமாக இருக்கிறார். இவருடைய தோற்றத்தாலும் திறமையான நடிப்பாலும் பல காட்சிகள் கண்ணுக்கு குளுமையாக இருக்கின்றன. இவர் சிலம்பம் சுற்றும் காட்சியில் நாயகனுக்கு ஈடான கைத்தட்டல்கள் கிடைக்கிறது. இத்தனை வீரமான ஒரு பெண்ணை வழக்கமான நாயகிகளைப் போலவே கையாண்டிருக்கும் இயக்குநர் கடைசியில் ஆறுதலாக ஒரேயொரு காட்சியில் மட்டும் வீரத்தைப் பயன்படுத்த வைக்கிறார்.

‘நீலாம்பரி” ‘சொர்ணாக்கா’ போன்ற வில்லிகளின் வரிசையில் சிம்ரனை உருவாக்கப் படாத பாடு பட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால் சிங்கத்தைப் போன்று கத்த முயன்று தோற்கும் பூனையின் பரிதாபக் கதையாகி விட்டது. சிம்ரனின் வில்லத்தனம் எடுபடவில்லை. மொட்டை ராஜேந்திரன், கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் ஆங்காங்கே தென்படுகிறார்கள். நெப்போலியன் இன்னமும் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

பாலசுப்பிரமணியனின் அபாரமான ஒளிப்பதிவில் பெரும்பாலான காட்சிகள் குளுமையாக இருக்கின்றன. குறிப்பாக பாடல் காட்சிகளில் அதிக உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். இமானின் ரகளையான பின்னணி இசை இத்திரைப்படத்தின் பலங்களில் ஒன்றாக சொல்லலாம். குறிப்பாக சரித்திரப் பின்னணியுடன் கூடிய காட்சிகளில் சிறப்பாக இசையமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கிறதுதான் என்றாலும் மைனா, கும்கியின் போதையிலிருந்து இவர் இன்னமும் வெளியே வரவேயில்லை.

அசட்டுத்தனமான நகைச்சுவைகளுக்கு இடையே புதைந்து போன தமிழ்ப் பண்பாட்டுப் பெருமைகளையும் நினைவுப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர். தமிழக மன்னர்களின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘வளரி’ என்கிற ஆயுதம்தான் பின்னர் பூமராங் ஆக மாறிய கதையும் உணர்ச்சிகரமாகச் சொல்லப்படுகிறது. (சிங்கம்பட்டி ஜமீனின்  வரலாற்றுப் பின்புலத்தை உணர்ச்சியுடன் விவரிக்கும் காட்சியில் மு.ராமசாமி நன்றாக நடித்துள்ளார். ஆனால் இதர காட்சிகளில் ‘தொட்டித்தாத்தா’ என்கிற அபத்த நகைச்சுவையுடன் இவரை வீணடித்துள்ளார்கள்).

வெறும் நகைச்சுவைத் திரைப்படமாக கடந்து விடாமல் சில தீவிரமான விஷயங்களையும் இதில் கலக்க முயன்றுள்ளார் இயக்குநர். இந்த முயற்சிக்காக இவரைப் பாராட்டலாம் என்றாலும் இந்தக் கலவை சரியாக இணையாமல் போயிருக்கிறது. ஒரு பக்கம் முந்தைய திரைப்படங்களின் சாயலைக் கைவிட முடியாமலும், இன்னொரு பக்கம் தீவிரமான அம்சங்களை இணைக்க விரும்பியும் தடுமாறியிருக்கிறார் இயக்குநர். ஜமீன்தார், தமிழக வரலாறு, பண்பாட்டுப் பெருமை, விவசாயிகளின் மீதான திடீர் அக்கறை என்று பல கோணங்களில் இஷ்டம் போல் தாவுகிறது திரைக்கதை. ‘எஜமான் காலடி மண்ணைத் தொட்டு கும்பிட வேணும்’ என்பது போல நிலப்பிரபுத்துவத்தின் பெருமையை நிலைநாட்டும் ஆபத்தும் இதில் கலந்திருக்கிறது. சில முன்னணி நாயகர்களின் முந்தைய திரைப்படங்களின் சாயல்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆங்காங்கே சில தடுமாற்றங்கள் இருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமாகப் பயணிப்பதில் ‘சீமராஜா’ வெற்றி பெற்றிருக்கிறது எனலாம். ஒரு சராசரித் தமிழ்த் திரைப்படமான ‘சீமராஜா’, சற்றுக் கூடுதல் கவனத்துடன் திட்டமிடப்பட்டிருந்தால் குறிப்பிடத்தக்கப் படமாக மாறியிருக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com