சுடச்சுட

  
  petta REVIEW

   

  பழைய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை மீட்டெடுத்துக் கொண்டுவந்து அவருடைய ரசிகர்களுக்குப் பிரத்யேக உற்சாகத்தை தந்திருக்கிறது ‘பேட்ட’. தனது வயதுக்கேற்ற திரைப்படங்களில் ரஜினி நடிக்க வேண்டும் என்று பரவலாக எழுந்த விமரிசனங்களையொட்டி ‘கபாலி, காலா’ போன்ற திரைப்படங்களில் அவ்வாறே நடித்தார் ரஜினி. ஆனால் அவற்றில் பேசப்பட்ட அரசியல் பின்னணி காரணத்தினாலேயோ என்னவோ, ரஜினி ரசிகர்களும் சரி, பொதுவான வெகுஜன ரசிகர்களும் சரி, அவற்றைப் பரவலாக ரசிக்கவில்லை. தங்களின் பழைய ரஜினியைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார்கள்.

  அந்த ஆவலை மிக கச்சிதமாகப் பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அவரே ஒரு தீவிரமான ரஜினி ரசிகர் என்பதால் அவர்களின் மனநிலையை உணர்ந்து ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டுப் பார்த்துப் பார்த்து அலங்கரித்திருக்கிறார். இந்த வகையில் அவரது நோக்கம் வெற்றிதான்.

  ஆனால், ரஜினிக்காக உருவாக்கிய திரைப்படம் என்பதால் இயக்குநரின் தனித்தன்மை பெரும்பாலும் தொலைந்து போயிருக்கிறது. இயக்குநரின் அடையாளத்திற்காகவும் இந்தத் திரைப்படத்தைப் பொதுவான ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் ஆவலை கார்த்திக் சுப்புராஜ் நிறைவேற்றத் தவறியது துரதிர்ஷ்டமானது.

  *

  மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு கல்லூரி. ராகிங் கொடுமைகள் சகஜமாக நடக்கின்றன. அங்குப் படிக்கும் பாபி சிம்ஹாவினால் மாணவர்களுக்குக் கொடுமைகள் நடக்கின்றன. அவரது தந்தையான ‘ஆடுகளம்’ நரேன் அங்குப் பெரிய ரெளடி என்பதால் தட்டிக் கேட்க எவருமில்லை. புதிதாக வரும் விடுதி வார்டனான ரஜினி அவர்களின் கொட்டத்தை ஒடுக்குகிறார். ரெளடியின் ஆள்கள் ரஜினியைத் தாக்க வருகிறார்கள்.

  இதையொட்டியே படம் நகரும் போல என்று கொட்டாவி விட்டுக் கொண்டு சலிப்பாக அமர்ந்து கொண்டிருக்கும்போது ஒரு திருப்பம். வந்தவர்கள் ரெளடியின் ஆள்கள் அல்ல. வடமாநிலத்திலிருந்து வந்திருக்கும் வேறு ரெளடிகள். அவர்களின் குறி, ஒரு குறிப்பிட்ட மாணவனின் (சனத் ரெட்டி) மீது இருக்கிறது. அவனுக்குக் காவலாக இருந்து காப்பாற்றுகிறார் ரஜினி. ‘நான் யார்.. ஏன் இவர்கள் என்னைக் கொல்ல வந்தார்கள், நீங்கள் யார்?’ என்றெல்லாம் குழப்பத்தோடு கேட்கிறான் அவன்.

  இதற்குப் பதில் சொல்லும் விதமாக, இருபது வருடங்களுக்கும் மேலாக தொடரும் ஒரு பகை, அது தொடர்பான பழிவாங்கல், பின்னணி மற்றும் காரணங்களோடு  விரிகிறது இரண்டாம் பகுதி.

  இதுவும் கொட்டாவிச் சமாசாரம்தான் என்றாலும் கார்த்திக் சுப்புராஜின் விறுவிறுப்பான திரைக்கதை ஒரளவிற்குக் காப்பாற்றியிருக்கிறது. 

  *

  படம் முழுக்க ரஜினியின் ஆதிக்கம்தான். துள்ளலான, புத்துணர்ச்சியான, ஸ்டைலான ரஜினியைப் பார்க்க முடிகிறது. ‘ரெண்டு மொட்டை, ரெண்டு மீசை, நாலு ஸ்கூல் பசங்க’ என்பது முதல் இதுவரையான திரைப்படங்களில் இருந்து ரஜினியின் பல பிரபலமான வசனங்கள், தோரணைகள். சண்டைக் காட்சிகள் போன்றவற்றை ஆங்காங்கே தூவுவதின் மூலம் பழைய நினைவுகளைக் கிளப்பி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார் இயக்குநர். ஆங்காங்கே அரசியல் வாசனையுடன் கூடிய வசனங்களும் வருகின்றன. (இன்னுமா?)

  த்ரிஷா ஓரமாக வந்து போகிறார். சிம்ரனுக்கு ஒரு காட்சியாவது கிடைத்தது அதிர்ஷ்டம். விஜய் சேதுபதி தன் இயல்பான நடிப்பைக் கையாள முயற்சித்தாலும் ரஜினி படம் என்பதால் அடக்கி வாசித்திருக்கிறார். நவாஸூதின் சித்திக்கை இன்னமும் பயன்படுத்தியிருக்கலாம். என்றாலும் பழிவாங்கிய திருப்தியில் மகிழ்ச்சியடையும் ஒரு சிறிய காட்சியில், தான் எத்தனை இயல்பான, மகத்தான நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

  மணிகண்டன் ஆசாரி போன்ற திறமைசாலிகளையெல்லாம் அடியாள் போல வீணடித்திருப்பது அநீதி. சசிகுமார், இயக்குநர் மகேந்திரன், குரு சோமசுந்தரம், மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், ராமதாஸ் போன்றோர் ஆங்காங்கே வந்து போகிறார்கள். எவருமே சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

  அனிருத்தின் பாடல்களும் சரி, அட்டகாசமான பின்னணி இசையும் சரி, இந்தத் திரைப்படத்தில் ரகளையாகப் பின்னிப் பிணைந்துள்ளது. சர்ச் மற்றும் விடுதியின் இருளுக்குள் நிகழும் சண்டைக்காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் ஒளிப்பதிவாளர் திருவின் உழைப்பும் அழகியலும் பிரமிக்க வைக்கின்றன. 

  முதற்பாதி வேகமாக நகர்ந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்போது, இரண்டாம் பகுதி சலிப்பை ஏற்படுத்துகிறது. அதுவரை பொத்தி வைத்த ரகசியம் உடைந்து நாயகன், யாரை பழிவாங்கப் போகிறார் என்பது தெரிந்துவிடும்போது வேறு வழியில்லாமல் வந்த கடமைக்காக அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

  உத்தரப் பிரதேசப் பின்னணி, காதலர் தின ஜோடிகளைத் தாலி கட்டித் திருமணம் செய்யச் சொல்லி தொந்தரவு தருவது, கொண்டாட்ட விடுதிக்குள் நுழைந்துத் தாக்குவது, ஆன்ட்டி இந்தியன் என்று திட்டுவது போன்ற சங்பரிவார் அட்டகாசங்கள் காட்சிப்படுத்தப்பட்டாலும் படத்தின் போக்கிற்கு எவ்வகையிலும் உதவவில்லை.

  படத்தின் இறுதியில் விஜய் சேதுபதியின் பாத்திரம் தொடர்பாக ஒரு திருப்பம் வருகிறது. ‘அவல நகைச்சுவை’ பாணியில் அமைந்த அந்தத் திருப்பம் போன்று படம் முழுவதிலும் ஆச்சர்யங்கள் நிகழ்ந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இயக்குநரின் பெயரும் காப்பாற்றப்பட்டிருக்கும். ‘Open ended plot’ என்பது ஹாலிவுட் ரசிகர்களுக்குப் பழக்கம். இது தமிழிலும் வருவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால்  நிறைவின்மையையும் குழப்பத்தையும் பலர் உணரலாம். (படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கான ஆபத்து சார்ந்த சமிக்ஞையாகவும் இருக்கலாம்).

  கார்த்திக் சுப்புராஜ், ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்த பெரிதும் பாடுபட்டிருக்கிறார். அது நிறைவேறினாலும் ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதாக அது முடிந்திருப்பது துரதிர்ஷ்டம். தன் தனித்தன்மையைப் பலி கொடுத்து ரஜினிக்கான திருவிழாவைக் கொண்டாடியிருக்கிறார்.

  ‘பேட்ட’ – சிறப்பான சம்பவம்தான். ஆனால் தரமான சம்பவமில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai