செல்வராகவனின் ‘என்ஜிகே’ - திரை விமரிசனம்

தன்னுடைய வழக்கமான பாணியைக் கறாராகக் கடைப்பிடிக்க முடியாமலும் வெகுஜன சினிமாவின் வழக்கமான அம்சங்களுக்கு இசைந்திருப்பதற்குமான இடைவெளியில் செல்வராகவன் தத்தளித்திருப்பது...
செல்வராகவனின் ‘என்ஜிகே’ - திரை விமரிசனம்

‘படித்த இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும்’ என்கிற செய்தி மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ திரைப்படத்தின் வழியாகச் சொல்லப்பட்டது. ஆனால், கல்வி கற்றவர்கள் அரசியலுக்குள் நுழைந்தால் அது சுத்தமாகி விடும் என்பதும் ஒருவகையான சுகமான கற்பனைதான். கல்வியறிவு இல்லாதவர்களும் அரசியல் அதிகாரத்திற்குள் நுழைய முடியும் என்பதே ஜனநாயகத்தின் பெருமைகளுள் ஒன்று. படித்தவனோ, படிக்காதவனோ, தன் தேசம் குறித்த உண்மையான அக்கறை, நேர்மை, பொதுநலன் போன்ற அடிப்படையான விஷயங்களே ஒரு நல்ல அரசியல்வாதிக்குத் தேவை.

மணிரத்னம் சொன்ன அதே விஷயத்தை தன்னுடைய பார்வையில் சொல்ல முயன்றிருக்கிறார் செல்வராகவன். ஆனால் இது ‘செல்வராகவனின்’ படமாக அமையவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

ஒருவகையில் இந்தத் திரைப்படத்தை ‘புதுப்பேட்டை’யின் இன்னொரு வடிவம் எனலாம். விளிம்புநிலைச் சமூகத்தில் வாழும் ஒரு சிறுவன், சூழல் காரணமாக குற்றங்களில் வீழ்ந்து எப்படி ஒரு அரசியல்வாதியாக முன்னகர்கிறான் என்பதை அந்தத் திரைப்படம் திறமையாக விவரித்தது. என்ஜிகே-ல் நிகழ்வது வேறு. படித்த, சமூக உணர்வுள்ள ஓர் இளைஞன் அரசியல் அதிகாரத்தின் வழியாகப் பொதுச்சேவையை நிகழ்த்த விரும்புகிறான். அவனுடைய பயணம் எவ்வாறாக இருக்கிறது என்பதை இந்தத் திரைப்படம் விவரிக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் சில ஆதாரமான விஷயங்கள் பார்வையாளர்களுக்குச் சென்று சேரப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தெளிவற்ற திரைக்கதை, வெகுஜன சமரச இடையூறுகள் போன்ற காரணங்களால் இந்தத் திரைப்படம் நிறையவே தடுமாறுகிறது.

*

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இயற்கை விவசாயம் செய்பவர் நந்த கோபாலன் குமரன் (என்ஜிகே). இவர் செய்யும் உண்மையான சமூகசேவை காரணமாகத் தொகுதியில் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். ஆனால் இவருடைய நேர்மையான அணுகுமுறையால் அரசு அதிகாரிகளை நெருங்கக்கூட முடிவதில்லை. அவசியமான உரிமைகளைக் கூட கேட்டுப் பெற முடியவில்லை. ஆனால் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இதை ஒரு நொடியில் சாதித்து விடுகிறார்கள். ‘நாங்கள் வாழ்நாள் முழுவதும் போராடுகிற விஷயத்தை அவர்கள் சுண்டுவிரலால் செய்து விட்டுப் போகிறார்கள்’ என்று இவர் மனம் புழுங்க நேர்கிறது.

அரசியல் அதிகாரத்தைப் பெறுவதின் மூலமே பொதுமக்களுக்கான நன்மையை செய்ய முடியும் என்கிற முடிவுடன் அரசியலுக்குள் இறங்குகிறார் குமரன். ஆனால், உள்ளூர் எம்.எல்.ஏ-விடம் எடுபிடியாக இருக்க வேண்டிய நடைமுறை அவமானங்கள் துரத்துகின்றன. எம்.எல்.ஏ-வின் கழிப்பறையைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் குமரனின் சுயமரியாதையை தட்டி எழுப்புகின்றன.

ஆனால், ‘சத்திரியனாக இருப்பதை விடவும் சாணக்கியனாக இருப்போம்’ என்கிற தெளிவுடன் அரசியல் அல்லக்கையாகவே பாவனை செய்கிறார் குமரன். இதன் மூலம் எம்.எல்.ஏவின் அபிமானத்தைப் பெற முடிகிறது. இந்தப் பயணம், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவருக்கான பகைமைப் புள்ளியில் சென்று இவரை நிறுத்துகிறது.

பிறகு குமரனுக்கு என்னானது, அவரது இலக்கை எட்ட முடிந்ததா என்பதை மீதமுள்ள காட்சிகள் விவரிக்கின்றன.

*

வருடங்கள் கடக்க கடக்க சூர்யா இளமையாகிக் கொண்டே போகிறார். தன்னுடைய உடலை மிகக் கச்சிதமாகப் பராமரிக்கிறார். நடிப்பதற்கான சந்தர்ப்பங்களையும் அவர் பெரிதும் வீணாக்கவில்லை. சுயமரியாதையுள்ள இளைஞன், அரசியல் அல்லக்கை, அதிகாரத்தை நோக்கி நகரும் மூர்க்கமான அரசியல்வாதி போன்ற பிம்பங்களை அவர் அநாயசமாக வெளிப்படுத்துவது நன்று. ஆனால் கோர்வையற்ற திரைக்கதை காரணமாக இவரது உழைப்பு வீணாகியிருக்கிறது.  இவரின் நோக்கம் என்ன என்பது தெளிவாகப் பதிவு செய்யப்படவில்லை.

குமரனின் மனைவி ‘கீதா குமாரி’யாக சாய் பல்லவி. கணவனை நுட்பமாகச் சந்தேகப்படுவதைத் தவிர வேறொன்றையும் இவர் பெரிதாகச் செய்வதில்லை. இயக்குநர் கற்றுத்தந்த ‘வித்தியாசமான’ நடிப்பை அப்படியே பின்பற்றியிருக்கிறார்.

அரசியல் கட்சிகளின் வியூகங்களை வடிவமைக்கும் ‘கார்ப்பரேட்’ அழகி ‘வானதி’யாக ரகுல் ப்ரீத் சிங். தனது அலட்டலான தோற்றத்திலும் நடிப்பிலும் கவர்கிறார். ஆனால் இவர் நாயகனிடம் காதலில் விழுவது தேய்வழக்கு சினிமாவின் அடையாளம்.

சற்று மிகையான நடிப்பைக் கொட்டினாலும் ஒரு சராசரியான அம்மாவின் பாத்திரத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் உமா பத்மநாபன். ‘நிழல்கள்’ ரவி, ‘தலைவாசல்’ விஜய், வேல ராமமூர்த்தி போன்ற நடிகர்கள் ஓரமாக வந்து போகிறார்கள். தளர்ந்து போயிருக்கும் ஒரு அடிமட்டத்து அரசியல்வாதியின் சித்திரத்தை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் பாலாசிங்.

இளவரசு இயல்பாக நடிக்கக்கூடிய திறமையான நடிகர்தான். ஆனால் அவரைச் சாதாரண பாத்திரங்களில் தொடர்ந்து பார்த்திருப்பதாலோ என்னமோ, அதிகார மமதையில் திளைக்கும் அலட்டலான சட்டமன்ற உறுப்பினராக காண்பது நெருடலாக இருக்கிறது. கன்னடத் திரைப்படங்களில் அதிகமாக நடிக்கும் தேவராஜ் முதலமைச்சராகவும் பொன்வண்ணன் எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்து போகிறார்கள். உயிரை விடும் பரிதாப நண்பனாக ராஜ்குமார்.

தந்தை இறந்தவுடன் தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அரசுப் பணிக்காகக் கூட ஆறுமாதங்களுக்கும் மேல் போராட வேண்டிய அவலமான சூழல் சிலருக்கு ஏற்படுகிறது. ஆனால் உள்ளூர் கவுன்சிலர் ஒரே நிமிடத்தில் இந்த விஷயத்தை முடிக்கிறார். நாயகன் செய்யும் இயற்கை விவசாயத்தை நிறுத்தச் சொல்லி மாஃபியா கும்பல் மிரட்டுகிறது. ஆனால் உள்ளூர் எம்.எல்.ஏ விடம் சரண் அடைந்தவுடன் ஒரே தொலைப்பேசி அழைப்பில் அது நின்று போகிறது.

அடிமட்ட நிலையில் இருந்து முதலமைச்சர் என்கிற உயர்பதவி வரை ‘அரசியல் அதிகாரம்’ என்பது எத்தனை செல்வாக்கானது என்பது இது போன்ற காட்சிகளின் வழியாக மிகத் திறமையாக நிறுவப்படுகிறது. சிப்பாய்கள், தளபதிகள், குறுநில மன்னர்கள், மாமன்னர்கள், பேரரசர்கள் என்று இந்த அதிகாரப் படிநிலைக்களுக்கேற்ப ஒவ்வொருவரும் செல்வத்திலும் அதிகார மமதையிலும் கொழிக்கிறார்கள். தங்களின் ஆதாயத்திற்காக எதையும் செய்ய அவர்கள் தயங்குவதில்லை.

உள்ளூரில் குறுநில மன்னராக உலவும் சட்டமன்ற உறுப்பினர், தனது கட்சியின் தலைமை அலுவலகத்திற்குக் கோயிலுக்குச் செல்லும் பக்தன் போல பயபக்தியுடனும் பணிவுடனும் செல்வது இந்த அதிகாரப் படிநிலையின் நடைமுறை யதார்த்த்தை உணர்த்தும் காட்சிகளாக அமைந்திருக்கின்றன.  

தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக எவ்வித கீழ்மையிலும் இறங்கத் தயாராக இருக்கும் இந்த அரசியல்வாதிகள், எதிரிகளின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை ஒழித்துக் கட்டுவதற்கான சந்தர்ப்பங்களுக்காக காத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அல்லது அவற்றை கச்சிதமாக உருவாக்குகிறார்கள். அரசு அதிகாரிகள், காவல்துறை, உளவுத்துறை என்று பெரும்பான்மையான அரசு இயந்திரமும் ஆளுங்கட்சியின் ஏவல் அடிமைகளாக இருக்கும் அவலங்கள் இந்தத் திரைப்படத்தில் சரியாக வெளிப்பட்டிருக்கின்றன.

பொதுவில் நாம் காணும் அரசியல்வாதிகளின் இன்னொரு பக்க பிம்பங்களை அம்பலப்படுத்துவதில் செல்வராகவன் வென்றிருக்கிறார். ‘உன் கட்சில யார் வளர்ந்தாலும் உனக்குப் பிடிக்காதே. என்னையும் அப்படித்தானே போட்டுத்தள்ளப் பார்த்தே?!’ என்று முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் பேசிக் கொள்வது போன்ற காட்சிகளின் வழியாக கடந்த கால தமிழக அரசியல் சம்பவங்கள் உரித்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ‘மெயின் ரோட்டுக்கு வந்துடும்மா’ என்கிற சமகால அரசியல் கூட அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

அரசியல் என்பது தேச சேவை என்கிற காலமெல்லாம் எப்போதோ மலையேறி போய் விட்டது. இன்று அது மிகப்பெரிய வணிகம். சில கோடிகளை முதலீடு செய்து பல கோடிகளை அள்ளும் தொழில். மக்களுக்குத் தேவையான விஷயங்களை செய்யாமலிருப்பது மட்டுமல்ல, கார்ப்பரேட் கம்பெனிகளுடனான மறைமுக ஒப்பந்தங்களின் மூலம் பொதுச்சமூகத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷயங்களும் திரைமறைவில் கனஜோராக நிகழ்கின்றன. தேசத்தையே நோயாக்கும் சீழ்பிடித்த வணிகமாக அரசியல் எவ்வாறு மாறிப் போயிருக்கிறது என்பதை இது தொடர்பான காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

இப்படி, சமகால அரசியல் அவலங்கள் குறித்து பல நுட்பமான விஷயங்களைத் திறமையாகக் கட்டமைத்திருக்கும் செல்வராகவன், இதை ஒரு முழுமையான அரசியல் சினிமாவாக உருவாக்குவதில் நிறையவே தடுமாறியிருக்கிறார். பாடல்களும் அநாவசியமான காட்சிளும் இடையூறை ஏற்படுத்துகின்றன. திரைக்கதையிலும் நிறைய குளறுபடிகள். பல உதிரியான முனைகள் நிறைவை எட்டாமல் அந்தரத்தில் நிற்கின்றன.

தன்னுடைய வழக்கமான பாணியைக் கறாராகக் கடைப்பிடிக்க முடியாமலும் வெகுஜன சினிமாவின் வழக்கமான அம்சங்களுக்கு இசைந்திருப்பதற்குமான இடைவெளியில் செல்வராகவன் தத்தளித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் உருவாக்கியிருந்த சில முந்தைய திரைப்படங்களின் வெளியீடுகள் தாமதமாகிக் கொண்டிருப்பதால், அது சார்ந்த மன உளைச்சலில் இந்த சமசரங்களுக்கு செல்வராகவன் பலியாகி விட்டாரா என்கிற வருத்தமும் ஏற்படுகிறது.

*

செல்வராகவன் + யுவன் கூட்டணி என்றால் அதில் பாடல்கள் உத்தரவாதமாக சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் இந்த மாயம் இதில் நிகழவில்லை. நாயகனின் சவடால் பாடல்கள் வெறுப்பையே தருகின்றன. ஆனால் இந்த இழப்பை பின்னணி இசையின் மூலம் ஈடுகட்டி விடுகிறார் யுவன். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு அவசியமான பங்களிப்பைத் தந்திருக்கிறது.

என்ஜிகே-ன் டிரைய்லர் பார்க்கும்போதே அதில் செல்வராகவனின் வாசனையை உணர முடியவில்லை. மாறாக, முருகதாஸ், அட்லி வகையறாக்களின் பாணியே எதிரொலித்தது. திரைப்படமும் இதை உண்மையாக்கியிருக்கிறது. இது செல்வராகவனின் பிரத்யேகத் திரைப்படமாக நிகழாத துரதிர்ஷ்டம் ஒருபுறம் இருந்தாலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் சில ஆதாரமான அரசியல் விஷயங்களுக்காக எளிதில் நிராகரிக்க முடியாததாகவும் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com