Enable Javscript for better performance
சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டு பிள்ளை' - திரை விமர்சனம்- Dinamani

சுடச்சுட

  

  சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டு பிள்ளை' - திரை விமர்சனம்

  By சுரேஷ் கண்ணன்  |   Published on : 01st November 2019 02:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  namma_vettu_pillai12

   

  தமிழ் சினிமாவில் புராணப் படங்களின் காலம் ஓய்ந்த பின் சமூகத் திரைப்படங்களின் வருகை பெருகத் துவங்கியது. குடும்ப உறவுகளின் மேன்மைகளை, சிக்கல்களை கண்ணீர் பிழியப் பிழிய சொன்னார்கள். ஒரு கட்டத்தில் ‘சென்ட்டிமென்ட்’ காட்சிகள் என்பது இளைய தலைமுறையினரின் கேலிக்கு உள்ளானது. எனவே தமிழ் சினிமா ஆக்ஷன், பஞ்ச் டயலாக் என்று ‘மாஸ் சினிமா’ பாணிக்கு மாறிற்று.

  இந்த வெற்றிடத்தை தொலைக்காட்சித் தொடர்கள் வெற்றிகரமாக கைப்பற்றிக் கொண்டன. பெண் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்த இந்த அழுகாச்சி அலையின் வெற்றி இன்னமும் கூட ஓயவில்லை.

  என்றாலும் ‘குடும்பச் சித்திரங்களுக்கு’ என்றும் அழிவில்லை என்பதை அவ்வப்போது தமிழ் சினிமா நிரூபித்தே வந்திருக்கிறது. அதிரடி மசாலா சினிமாக்கள் தொடர்ச்சியாக வந்து சலிக்க வைக்கும் போது இடையில் வெளியாகும் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் பெரும் வெற்றியைப் பெற்று விடும்.

  பாண்டிராஜின் முந்தைய வெளியீடான ‘கடைக்குட்டிச் சிங்கம்’ அப்படியொரு வெற்றியைப் பெற்றதால் அதே பாணியிலேயே மீண்டும் உருவாக்கப்பட்டிருக்கும் படம்தான் ‘நம்ம வீட்டு பிள்ளை’

  இத்திரைப்படத்திலேயே வரும் சுயபகடி வசனம் போல, இது ‘கிழக்குச்சீமையிலே’யின் லேட்டஸ்ட் வெர்ஷன்தான். (இதை பாரதிராஜாவின் வாயாலேயே சொல்ல வைத்திருப்பதுதான் வேடிக்கை).

  **

  நாட்டு வைத்தியரான பாரதிராஜா, தன்னுடைய வாரிசுகளைப் பற்றி ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தும் காட்சியோடு படம் துவங்குகிறது. இந்த அறிமுகமே ஏறத்தாழ கால் மணி நேரத்திற்கு நீள்கிறது. நாமே  பத்து வீடுகளில் ஏறி சென்ஸஸ் கணக்கு எடுத்தது போல் தலையைச் சுற்றுகிறது. அத்தனை பாத்திரங்கள்.

  இந்தக் குடும்ப வரிசையில், பாரதிராஜாவின் பேரன்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ். என்னதான் நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் அந்தஸ்து குறைவாக இருப்பவர்களுக்கு வரன் அமைவது சிரமமாக இருக்கும். இது சார்ந்த மனப்புழுக்கம் பெண்ணைப் பெற்றவர்களுக்கு கூடுதலாக இருக்கும்.

  இங்கும் அதேதான் நிகழ்கிறது. ஐஸ்வர்யாவிற்கு அமையும் வரன்களை உறவினர்களே கலைத்து விடுகிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதை ஃப்ளாஷ்பேக்கில் சொல்லியிருக்கிறார்கள். தன் தங்கைக்கு எப்படியாவது திருமணம் நடத்துவதில் உறுதியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். விரக்தியின் உச்சத்தில் தங்கை எடுக்கும் முடிவு பல சிக்கல்களை கொண்டு வந்து தருகிறது.

  இதற்கிடையில் தன் மாமன் மகளான அனு இம்மானுவேலை விரும்புகிறார் சிவகார்த்திகேயன். அதே அந்தஸ்து வித்தியாசம் காரணமாக இவரது திருமணத்திலும் தடை ஏற்படுகிறது.

  உயிருக்கு உயிரான தன் தங்கையின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் உறவுகளின் குறுக்கீடுகளையும் சிவகார்த்திகேயன் எப்படித் தாண்டி வருகிறார் என்பதை பரபரப்பாகவும் நெகிழ்வாகவும் சிரிப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

  **

  பாசமிகு அண்ணன் பாத்திரத்தில் ‘நச்’ சென்று பொருந்துகிறார் சிவகார்த்திகேயன். காமெடியையும் கலாய்ப்புகளையும் அடக்கி வாசித்து விட்டு தீவிரமான காட்சிகளில் நடிக்க முயன்றிருப்பதில் வெற்றி பெறுகிறார். எகிறும் உறவுகளிடம் தணிந்து அரவணைத்துப் போவதிலும் சரி, பகைமைகளிடமும் வீறுகொண்டு பாய்வதிலும் சரி, தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

  சிவகார்த்திகேயனின் சமீபத்திய பின்னடைவுகளுக்கு மருந்திடும் வகையில் இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியைத் தேடித்தரும் என்று தோன்றுகிறது. இந்தத் திரைப்படத்தை பார்க்கும் இளம்பெண்கள் சிவகார்த்திகேயனை தன்னுடைய சொந்த அண்ணனாகவே கருதும் அளவிற்கு இவரது உணர்ச்சிகரம் வெளிப்படுகிறது. இளம் வயதிலேயே தந்தையை இழக்கும் மகன்கள் அடையும் துயரத்தையும் ஏக்கத்தையும் சிவகார்த்திகேயன் உருக்கமாக விளக்கும் காட்சியில் அவரது நடிப்பு பளிச்சிடுகிறது.

  இதைப் போலவே பாசமிகு தங்கையாக தன் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சுட்டித்தனமும் குறும்பும் நிறைந்த இவர், திருமணச் சிக்கல்களுக்குப் பிறகு இவர் தன் வேதனைகளை மறைத்து ஒடுங்கும் ஒரு சராசரிப் பெண்ணாக, வேறு நபராக மாறி விடுவது சிறப்பு.

  சிவகார்த்திகேயன் சீரியஸாக இருக்க வேண்டி இருப்பதால் அவரது பங்கையும் இட்டு நிரப்ப முயல்கிறார் சூரி. சில காட்சிகளிலும் தோரணைகளிலும் உத்தரவாதமாக சிரிப்பை வரவழைக்கிறார். இவரது மகனாக நடித்திருக்கும் சிறுவன் டைமிங்கில் பின்னியெடுக்கிறான். (இயக்குநரின் மகனாமே?!) யாராவது ஒரு வசனத்தை ஆரம்பிக்கும் போது நையாண்டியோடு முடிப்பதுதான் இவனது வேலை. காமிரா பயமே இல்லாமல் நடித்திருக்கிறான். இவனது அலப்பறைக்கு அரங்கமே குலுங்குகிறது.

  நாயகனுக்கு நிகரான கைத்தட்டல் யோகிபாபுவிற்கு கிடைக்கிறது. ஆனால் இவரது நகைச்சுவையில் புதிதாக எதுவுமில்லை

  குடும்பத்தின் மூத்த தலைவராக தன் பங்களிப்பை நெகிழ்வுடன் தந்திருக்கிறார் பாரதிராஜா. வீட்டின் மூத்த பிள்ளை என்கிற அலட்டலை இறுக்கமான முகத்துடன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் வேல ராமமூர்த்தி. தன் மகளுக்கு வரன் அமையாத மனக்குறையை ஒரு சிறு காட்சியிலேயே அற்புதமாக வெளிப்படுத்தி விடுகிறார் அர்ச்சனா. (இது போன்ற திறமையான நடிகைகளை தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்).

  நாயகியாக அனு இம்மானுவேல். துடைத்து வைத்த டியூப் லைட் மாதிரி பளிச்சென்று இருக்கிறார். ஆனால் நாயகி என்று இவரைச்  சம்பிரதாயத்திற்குத்தான் சொல்ல வேண்டும். காதல் குறும்புகள், டூயட் என்று வழக்கமான விஷயங்கள் இருந்தாலும் இந்த ஜோடியின் வேதியியல் (அதாங்க.. கெமிஸ்ட்ரி) திரைப்படத்தில் வெளியாகவில்லை. இயல்பான வில்லத்தனத்தால் ரசிக்க வைக்கிறார் நட்ராஜ்.

  ஆடுகளம் நரேன், சுப்பு பஞ்சு, சண்முகராஜன், சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், ரமா, அருந்ததி, ஷீலா ராஜ்குமார் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. ஒரு பிரேமில் குறைந்தது ஐம்பது பேராவது நிறைந்திருக்கிறார்கள்.

  **

  அண்ணன் –தங்கை சென்ட்டிமென்ட்டை ஓவராகப் போட்டால் திரையரங்கில் சிரித்து விடுவார்கள் என்பது இயக்குநர் பாண்டிராஜிற்கு தெளிவாகப் புரிந்திருக்கிறது. எனவே புத்திசாலித்தனமாக அடக்கி வாசித்திருக்கிறார். என்றாலும் இந்த உறவின் உணர்ச்சிகள் தேவையான அளவிற்கு சரியாக வெளிப்பட்டிருக்கின்றன.

  உறவினர்களில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பிரத்யேகமாக ஒவ்வொரு மேனரிசத்தை இயக்குநர் வடிவமைத்திருப்பது சிறப்பு. இருமிக் கொண்டே இருக்கும் மாமா, கணவர் பேசி முடித்தவுடன் இழுவையுடன் ஆமோதிக்கும் மனைவி, பணத்தை தெய்வமாக கருதும் கஞ்ச மாமா என்று பல பாத்திரங்கள் நினைவில் நிற்கின்றன. (இயக்குநர் பாலச்சந்தரின் காலக்கட்டம் ஞாபகத்திற்கு வருகிறது).

  இதில் சிறப்பானது போலீஸாக வரும் மாமா பையன்தான். கையைத் தட்டி விட்டு சோடா உடைத்து போல ‘ஹ்ஹ்ஹ்ஹ்’ என்று சிரிக்கும் இவரது மேனரிசத்தை பிறகு சிவகார்த்திகேயனும் சூரியும் இமிடேட் செய்யும் காட்சிகளில் சிரிப்பலை பலமாக பரவுகிறது. நமக்குப் பிடிக்காத உறவினர்களின் மேனரிசங்களை நாம் வீடுகளில் தனியாக கிண்டல் செய்திருப்போம் அல்லவா? அவையெல்லாம் நினைவில் வந்து போகின்றன.

  பாண்டிராஜின் திரைப்படங்களில் வசனங்கள் இயல்பாகவும் ஆழமாகவும் இருக்கும். இதிலும் அந்த முத்திரைகள் உண்டு. ‘சொந்தக்காரங்க கிட்ட தோத்துப் போக தயாரா இருக்கறவனை யாரும் ஜெயிக்க முடியாது’ என்கிற வசனம் ஓர் உதாரணம். போலவே செல்போன் தொடர்பான, பாண்டிராஜின் வழக்கமான நையாண்டியும் உண்டு.

  **

  சிவகார்த்திகேயனை தன் உடன்பிறவா தம்பியாகவே கருதுவதால் அவரது திரைப்படங்களுக்கு பிரத்யேக முனைப்புடன் இசையமைப்பார் டி.இமான். எனவே பாடல்கள் உறுதியாக ஹிட் ஆகும். இந்த மாயம் இதில் ஏனோ நிகழவில்லை. ஏற்கெனவே கேட்டிருந்த சத்தங்களோடு ஒலிக்கும் பாடல்கள் அத்தனை கவரவில்லை. ஆனால் பின்னணி இசையில் தேவையான விஷயங்களை செய்திருக்கிறார் இமான்.

  நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும் (‘மைலாஞ்சி’ பாடலில் வரும் பின்னணிகள் அத்தனை அழகு!) இத்தனை பாத்திரங்கள் இருந்தாலும் குழப்பம் நேராதவாறு காட்சிகளைக் கோர்த்திருக்கும் ரூபனின் எடிட்டிங்கும் சிறப்பு. படத்தின் இரண்டாம் பகுதி அநாவசியத்திற்கு நீண்டு சற்று பொறுமையைச் சோதிக்கிறது.

  ‘உறவுகளைச் சம்பாதிப்பதும் தக்க வைப்பதும்தான் ஒரு மனிதனின் ஆதாரமான பலம்’ என்பதை இந்தத் திரைப்படம் உணர்த்துகிறது. வன்முறையும் ஆபாசமும் நிறைந்திருக்கும் தமிழ் சினிமாவில் மனித குலத்தின் ஆதாரமான உணர்ச்சிகளை நினைவுப்படுத்தும் குடும்பச் சித்திரங்கள் வெளிவருவது ஒருபக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் செக்குமாட்டுப் பாதையிலேயே தமிழ் சினிமா மீண்டும் மீண்டும் சுற்றி வருவது நெருடலையும் ஏற்படுத்துகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai