சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்

சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்

சமூகப் பிரச்சினைகளை ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளும் பாவனையை தமிழ் சினிமா முதலில் கைவிட வேண்டும். 

அந்நிய நாட்டுத் தீவிரவாதிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிய முன்னோடிகளான அர்ஜுன், விஜய்காந்த் போன்றோரின் வரிசையில் இணைந்திருக்கிறார் சூர்யா. கூடவே அவர் இயற்கை விவசாயியாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருப்பதுதான் இதில் வித்தியாசம்.

இந்தியப் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட எஸ்பிஜி (SPG, Special Protection Group) என்னும் அமைப்பின் வீரத்தையும் தியாகத்தையும் சித்தரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆக்‌ஷன் திரில்லர் இது என்று சொல்லப்பட்டாலும் ஒரு பொழுதுபோக்குச் சித்திரமாக இந்தத் திரைப்படம் எவ்வித சுவாரசியத்தையும் தரவில்லை.

எஸ்பிஜி அமைப்பினர் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள், அனுபவங்கள், ஆபத்துகள், அரசியல்கள் ஆகியவற்றை மட்டும் மையப்படுத்தி உருவாக்கியிருந்தாலாவது இத்திரைப்படம் பிரத்யேக கவனத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் அதற்கு இடையில் பல்வேறு சமூகப் பிரச்னைகளைப் பேசுகிற பாவனைகள் அநாவசியமாகத் திணிக்கப்பட்டிருப்பதால் இந்தக் குழுவின் அத்தனை உழைப்பும் வீணாகியிருக்கிறது.

*

ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ரயிலின் மீது பாய்ந்து வெடிகுண்டுகளைப் பொருத்துகிறார் சூர்யா. படத்தின் துவக்க காட்சி இதுதான். ஏன் அவர் அவ்வாறு செய்ய வேண்டும்? கதை நாலைந்து மாதத்திற்கு முன் நகர்கிறது.

ராணுவ உளவுத்துறையில் இருந்து கொண்டு நாட்டின் பாதுகாப்பிற்காகப் பல சிரமங்களையும் சாகசங்களையும் செய்தவர் சூர்யா. அவரின் திறமையை அடையாளம் காணும் இந்தியப் பிரதமரான மோகன்லால், சூர்யாவைத் தனது பாதுகாப்பு அதிகாரியாக வைத்துக் கொள்கிறார். பிரதமரைக் கொல்வதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து முயல்கின்றனர். இவற்றையெல்லாம் முறியடிக்கிறார் சூர்யா. ஆனால் ஒரு கட்டத்தில் தீவிரவாதிகள் தங்களின் நோக்கத்தில் வெற்றி பெறுகின்றார்கள்.

இதற்குப் பிறகு என்னவானது என்பதைச் சூடும் சுவையும் இன்றி வெற்று ஆக்‌ஷன் காட்சிகளின் வழியாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

தோற்றத்தில் மாறா இளமையுடன் இருக்கும் சூர்யாவின் அசாதாரணமான ஃபிட்னஸ் அவரது பாத்திரத்திற்கும் சாகசங்களுக்கும் நியாயம் சேர்க்கிறது. தனது பாத்திரத்தைக் கம்பீரமாகவும் வலுவாகவும் கையாண்டிருக்கிறார் சூர்யா.

சாயிஷாவை இத்திரைப்படத்தின் நாயகி என்று சம்பிரதாயத்திற்குச் சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவே. இடையிலேயே ஆர்யாவிற்கும் இவருக்கும் திருமணம் நடந்து விட்டதால் திரைக்கதையில்  அடக்கி வாசித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. ஹோட்டல் ரூம் நகைச்சுவையில் சற்று எல்லை மீறியிருக்கிறார்கள். ஆண் என்றால் புத்திசாலித்தனமானவன், பெண் என்றால் முந்திரிக்கொட்டைத்தனமான முட்டாள் என்பது இதிலும் தொடர்கிறது.

பிரதமராக மோகன்லால். இயல்பாக நடித்திருக்கிறார். சமயங்களில் கல்லூரி நாடகக் காட்சிகள் போல் இருந்தாலும் பாகிஸ்தான் தூதரக அதிகாரியைக் கண்டிக்கும் காட்சியில் அசர வைக்கிறார். ஆர்யாவின் இயல்பான குணாதிசயத்தை அவரது பாத்திரத்திலும் அப்படியே பொருத்தியிருக்கிறார்கள். தொழிலதிபரிடம் பேசும் காட்சியைத் தவிர வேறொன்றும் சுவாரசியமில்லை.

இந்தியாவின் பொருளாதாரச் சூழலையே நிர்ணயிக்கும் தொழிலதிபராக போமன் இரானி தனது அட்டகாசமான உடல்மொழியில் கலக்கியிருக்கிறார். எந்தவொரு தேசத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பவர்கள் கார்ப்ரேட் அதிபர்களே என்னும நிதர்சனமான உண்மை இவரது பாத்திரத்தின் வழியாக ‘நச்’சென்று சொல்லப்பட்டிருக்கிறது. முன்னாள் மற்றும் சமகால மத்திய அரசுகளின் செயல்கள் விமரிசனங்களுக்கும் கேலிக்கும் ஆளாகின்றன. பிரதான வில்லனாக வருபவர் எந்த சுவாரசியத்தையும் தரவில்லை.

இது கே.வி. ஆனந்தின் வழக்கமான வடிவமைப்பில் வந்திருக்கும் திரைப்படம். நெருங்கிய நண்பனின் துரோகம், ஹைடைக் பார் நடனம், பயோ வார், லாஜிக்கும் சுவாரசியமும் இல்லாத திருப்பங்கள் என்று பல விஷயங்கள் அப்படியே வந்திருக்கின்றன. கதாநாயகனை முதலில் தீவிரவாதி போலவும் அரசியல் பிரமுகரைக் கொல்லப் போவது போலவும் சித்தரித்து பிறகு அவரைப் பிரமுகரின் ‘பாதுகாவலராக’ காட்டும் திருப்பங்களையெல்லாம் நாம் ‘ஆதவன்’ போன்ற பழைய திரைப்படங்களிலேயே பார்த்து விட்டோம். வழக்கமாக எழுத்தாளர்கள் சுபாவுடன் கூட்டணி அமைக்கும் கே.வி. ஆனந்த், இம்முறை  பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்திருக்கிறார். சில இடங்களில் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. பிகேபியின் பிரத்யேகமான குறும்புகளும் ஆங்காங்கே இணைந்திருக்கின்றன.

எம்.எஸ்.பிரபுவின் அட்டகாசமான ஒளிப்பதிவு தன் பங்களிப்பைச் சிறப்பாகத் தந்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் பரபரப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பூச்சிகளின் தாக்குதல் தொடர்பான காட்சி குறிப்பிடத்தக்கது. ஆண்டனியின் துள்ளலான எடிட்டிங்கின் மாயத்தை இதில் காண முடியவில்லை. இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நீளும் இந்தத் திரைப்படத்தில் சில காட்சிகள் கொட்டாவி விட வைக்கின்றன. சமுத்திரக்கனி தன் பழைய காதல் கதையைச் சொல்லும் காட்சி ஓர் உதாரணம்.

நாளுக்கு நாள் கட்டெறும்பாகத் தேய்ந்து கொண்டே போகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இதில் எந்தவொரு பாடலும் ரசிக்கும்படியாக இல்லை. நவீன நுட்பத்தில் தோய்க்கப்பட்டு நம் முன் எறியப்படும் சத்தங்கள் மட்டுமே ஒலிக்கின்றன. பரபரப்பான பின்னணி இசையில் இந்தக் குறையைப் போக்க முயன்றிருக்கிறார் ஹாரிஸ்.

*

கமல்ஹாசனின் ‘குருதிப்புனல்’ திரைப்படத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகிறது. பிரதமரின் பாதுகாப்பு கமாண்டோக்களின் பலத்த ஏற்பாடுகளையும் மீறி அவரைக் கொல்வதற்கான சதி நடக்கும். அந்தக் காட்சிகளில் இருந்த பரபரப்பு, நம்பகத்தன்மை, சுவாரசியம், சரியாகக் காட்சிப்படுத்துதல் போன்ற எதுவுமே இந்தத் திரைப்படத்தில் இல்லை.

இயற்கை விவசாயம், லண்டன், காஷ்மீர், கனிமவளச்சுரண்டல், கார்ப்ரேட் ஆதிக்கம், அரசியல் கருப்பு ஆடுகள் போன்ற விஷயங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான். ஆனால் அனைத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பியதில் சகிக்க முடியாத கலவையாகியிருக்கிறது ‘காப்பான்’.

மெல்ல உயிர் விட்டுக் கொண்டிருக்கும் விவசாயத் துறையின் ஆதாரமான பிரச்னைகளைத் திரைப்படம் எனும் கலையின் வழியாக உரையாடுவது நல்ல விஷயம். ஆனால் அதை மையமாக வைத்து தீவிரமான முயற்சிகளை உருவாக்காமல் சமூகப் பிரச்சினைகளை ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளும் பாவனையை தமிழ் சினிமா முதலில் கைவிட வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com