நடக்கப்போவது முன்பே தெரிந்தால்?: 'க்' - திரைப்பட விமர்சனம்

இன்று வெளியாகியுள்ள 'க்' - திரைப்படத்தின் விமர்சனம். 
நடக்கப்போவது முன்பே தெரிந்தால்?: 'க்' - திரைப்பட விமர்சனம்
Published on
Updated on
1 min read

உளவியல் பிரச்னைகள் அனைத்துமே கற்பனைதான். ஆனால் உளவியல் ரீதியான பிரச்னைகளின் மூலம் எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே உணர நேர்ந்தால்..? அப்படி நிகழ்காலத்தில் தவிக்கும் கால்பந்து வீரனின் பிரச்னைகளை மையப்படுத்திய கதைதான் 'க்'.

தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ் (வசந்த்), குருசோமசுந்தரம் (ஞான பிரகாசம்), அனிகா விக்ரமன் (தன்யா), ஆடுகளம் நரேன் (ஞானவேல்), ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க அறிமுக இயக்குநர் பாபு தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கால்பந்து வீரனான வசந்த் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும்போது விபத்து ஏற்படுகிறது. அதிலிருந்து ஒருசிறு குழந்தையின் பார்வை, பயிற்சியின்போது கால்பந்தில் அடிபட்டு புறா இறந்தது, மருத்துவமனை சன்னல் வழியே நடைபெறும் ஒரு கொலை, இந்த மூன்றும் நாயகனுக்கு உளவியல் ரீதியான பிரச்னைகளைத் தருகிறது. இந்த உளவியல் பிரச்னைகளிலிருந்து கதாநாயகன் மீண்டாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை.

உளவியல் ரீதியாக நல்ல கதையும், களமும் அமைந்திருந்தாலும், அதற்கு அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை கதையின் போக்கில் பார்வையாளர்களை பிணைக்கத் தவறிவிட்டது. படத்தின் இரண்டாம் பாதியில்தான் கதைத் தொடங்குகிறது என்பதால், முதல் பாதி முழுக்க முழுக்க எந்தவித உந்துதலும் இல்லாத காட்சிகளாகவே உள்ளது. 

கதாநாயகனுக்கு கால்பந்து விளையாட்டில் ஏற்பட்ட பிரியத்தை விளக்கும் பிளாஸ்பேக், திருமணம், காதல் காட்சிகள் போன்றவை வெறும் உதிரி காட்சிகளாகவே நகர்கின்றன. 

கதாநாயகனாக வரும் யோகேஷின் நடிப்பில் உள்ள பலவீனம், திரைக்கதையை மேலும் பலவீனமாக்குகிறது. கால்பந்து பயிற்சி, ரொமான்ஸ் காட்சிகளும் கைக்கொடுக்கவில்லை. 

உதாரணமாக உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட கணவனுக்கு மனைவி ஆறுதல் கூறுவது, மனைவிக்கு கணவன் பதிலளிப்பது எல்லாம் தொலைக்காட்சித் தொடரையே நினைவூட்டுகிறது. 
 
நாயகனின் கார் ஓட்டுநராக வரும் குருசோமசுந்தரம் இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்துகிறார். கதாநாயகனின் பிரச்னைக்கு காரணமான புதிரை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறார். பின்னர் பிரச்னைகளுக்கு காரணமாகவும் அவரே மாறுகிறார். கதைக்கேற்ப அலட்டல் இல்லாத அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் இரண்டாம் பாதியில் பலம் சேர்த்துள்ளார் அவர். ஓய்.ஜி. மகேந்திரன் பாத்திரத்தின் சஸ்பென்ஸ் கவனிக்கவைக்கிறது.

உளவியல் பிரச்னைகளுக்கான காரணத்தை அறிந்து அதனை பார்வையாளர்களுக்கு விளக்கும்போது திரைக்கதை புரிந்துகொள்வதற்கு சற்று கடினமாகிறது. எனினும் அறிமுக இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஸ் தனது பின்னணி இசை மூலம் அதனை சரிகட்டியுள்ளார். பாடல்களும், அதற்கான காட்சியமைப்புகளும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன.

குறைந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமாதலால், ஒளிப்பதிவு, கிராஃபிக்ஸ் காட்சிகளில் பின்னடைவு இருந்தாலும், எல்லா விடைகளும் தெரிந்த பிறகு இருவிதமான முடிவைக் கொடுத்து படத்தை முடித்தது பாராட்டத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com