சந்தானத்தின் 'சபாபதி': விதி யாரை விட்டது? திரைப்பட விமர்சனம்

சந்தானம் நடித்து திரைக்கு வந்துள்ள 'சபாபதி' படத்தின் திரை விமர்சனம். 
சந்தானத்தின் 'சபாபதி': விதி யாரை விட்டது?  திரைப்பட விமர்சனம்
Published on
Updated on
2 min read

ஆர்.கே. எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ப்ரீத்தி வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'சபாபதி'. 

திக்குவாய்க் குறைபாட்டுடன்  சபாபதி என்ற வேடத்தில் சந்தானம். அவரது அப்பா தமிழ் ஆசிரியர் எம்.எஸ்.பாஸ்கர். சபாபாதிக்கு எதிர் வீட்டுப் பெண் சாவித்திரியுடன் காதல். சாவித்திரியைத் திருமணம் செய்துகொள்ள நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார் சபாபதி. அவரது வாழ்வில் திடீரென விதி குறிக்கிட்டால்? அதுதான் சபாபதி படத்தின் கதை.

திக்குவாய் பிரச்னையுடன் சந்தானம் முடிந்த வரை சபாபாதி வேடத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். வழக்கமாக எல்லோரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்துத் தள்ளும் சந்தானம் இந்தப் படத்தில் மிக சாந்தமாக இளைஞராக வருகிறார். சமீபத்தில் நகைச்சுவை என்ற பெயரில்  டிக்கிலோனா படத்தில் ஒருவரை உடல் ரீதியாக கிண்டலடித்த காட்சி பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் இந்தப் படத்தில் அந்த மாதிரியான காட்சிகள் இல்லை என்பது ஆறுதல்.

கதையை ஒரு ஓரமாக வைத்துக்கொண்டு நகைச்சுவைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர், மாறன், லொள்ளு சபா சாமிநாதன் என வரிசையாக வந்து நம்மை சிரிக்க வைக்க முயல்கிறார்கள். ஒருகட்டத்தில் நாம் ஏதோ மேடை நாடகம் பார்க்க வந்துவிட்டோமோ என்ற உணர்வு. இருப்பினும் இதில் எம்.எஸ்.பாஸ்கர் மட்டும் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறார். அவருக்கும் சந்தானத்துக்கும் இடையேயான காட்சிகள் ஓரளவுக்கு சிரிக்கும்படி இருக்கின்றன. 

சந்தானத்தின் எதிர்வீட்டுக் காதலியாக சாவித்திரி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் ப்ரீத்தி வர்மா. அவருக்கு நடிப்பதற்கு படத்தில் பெரிய வேலையில்லை. வரும் காட்சிகளிலும் நடிக்க மிகவும் சிரமப்படுகிறார். மேலும் ஷாயாஜி ஷிண்டே மற்றும் வம்சி ஆகிய இருவரும் வழக்கமான வில்லன்களாகவே தோன்றிப் பின் காணாமல் போகிறார்கள். இந்தப் படத்தில் விதி என்ற விஷயம் இல்லாமல் சாதாரணமாக சொல்லியிருந்தாலும் எந்த  வித்தியாசமும் இருந்திருக்காது. 

சாம் சிஎஸ் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. இருப்பினும் தனது பின்னணி இசையின் மூலம் படத்துக்கு வலு சேர்க்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். படம் 2 மணி நேரமே ஓடக் கூடியது. இருப்பினும் படத்தில் இன்னும் சில நகைச்சுவைக் காட்சிகளை துணிந்து கத்தரித்திருக்கலாம் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால். 

ஒருசில இடங்களிலேயே காட்சிகள் நகரும் நிலையில், அதனை வித்தியாசமான கோணங்கள் மூலம் முடிந்த வரை சுவாரசியமாக காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர்  பாஸ்கர் ஆறுமுகம். 

சந்தானம் அடக்கி வாசித்தாலும் இயக்குநர் விடுவதாக இல்லை. இரண்டாம் பாதியில் ஒரு காட்சியில் வயதான கணவர் தனது இளம் மனைவியை சந்தேகப்படுவதாகக் காட்டி, அங்கே இரட்டை அர்த்த வசனங்களை திணித்திருக்கிறார். அதேபோல ஒரு மனிதர் இவ்வளவு அப்பாவியாகவா இருப்பார் என்று சந்தானத்தைப் பார்க்கும்போது தோன்றாமலில்லை. 

இறுதிக்காட்சியில் சொல்லப்படும் கருத்து நன்றாக இருந்தாலும் அந்தக் கருத்தைச் சொல்வதற்காகவே காட்சியமைக்கப்பட்டிருக்கிறதோ என்று தோன்றியது. நகைச்சுவைக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை இயக்குநர் ஸ்ரீநிவாச ராவ், திரைக்கதைக்கு கொடுத்திருந்தால் ஒரு சுவாரசியமான படமாகவே வந்திருக்கும் இந்த 'சபாபாதி'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com