திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக்கொண்டால் ? 'வனம்' : திரைப்பட விமர்சனம்

வெற்றி நடித்துள்ள 'வனம்' திரைப்படத்தின் விமர்சனம்  
திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக்கொண்டால் ? 'வனம்' : திரைப்பட விமர்சனம்
Published on
Updated on
2 min read

கோல்டன் ஸ்டார் புரொடக்சன்ஸ் தயாரித்து வெற்றி, ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'வனம்'. இந்தப் படம் ஸ்ரீகண்டன் ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். 

வனப்பகுதியில் புதிதாக ஒரு நுண்கலை கல்லூரி துவங்கப்படுகிறது. இந்தக் கல்லூரி விடுதியில் குறிப்பிட்ட அறையில் வசிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று ஆராயத் துவங்கும் கதாநாயகன் வெற்றிக்கு சில திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. அதன் பின்ன என்ன நடக்கிறது என்பதே வனம் படத்தின் கதை. 

'8 தோட்டாக்கள்', 'ஜீவி' போன்ற படங்களுக்கு பிறகு வெற்றி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். முதல் இரண்டு படங்களைப் போலவே இந்தப் படத்திலும் நடிக்க ரொம்பவே சிரமப்படுகிறார். மல்லி என்ற மலைவாழ் பெண்ணாக அனு சித்தாரா. தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை நன்றாக கையாண்டுள்ளார். ஆனாலும் அவரது வேடம் மேலோட்டமாகவே எழுதப்பட்டிருக்கிறது. முக்கிய வேடங்களில் வரும் வேல ராமமூர்த்தி, அழகம் பெருமாள் ஆகிய இருவரில் வேல ராமமூர்த்திக்கு நடிப்பதற்கு கனமான வேடம். 

கதையாக கேட்கும்போது சுவாரசியமாக இருக்கிறது. இருப்பினும் திரைக்கதை வலுவில்லாமல் மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கிறது.  அமானுஷ்யங்கள் நிறைந்த கதை என்பதால் இந்தப் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது. ஆனால் சொல்லக் கூடிய கதைக்கென சில லாஜிக்குகள் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இந்தப் படத்தில் எதுவுமில்லாதது பெரிய குறை. 

1960 மற்றும் 2020 என இருவேறு காலக்கட்டங்களில் கதை நகருகிறது. இருவேறு காலக்கட்டங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட எந்த மெனக்கெடுகளும் செய்யப்படவில்லை. இந்தப் படத்தின் முன் கதையை ஒரு சில காட்சிகளிலேயே சொல்லிவிட முடியும். படத்தின் பெரும்பாலான நேரம் முன் கதை சொல்வதற்கே எடுத்துக்கொள்ளப்படுகிறது.  மலைவாழ் மக்கள் இருப்பிடம் காட்டப்படுகிறது. அங்கு வெறும் மூன்று வீடுகளும் சில மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அந்தக் காட்சிகள் சுவாரிசியமாக இல்லதாததால் நம் பொறுமையை சோதிக்கிறது. 

கதாநாயகன் வெற்றிக்கு ஒரு எழுத்தாளரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய தேவை  வரும். உடனடியாக அவர் தமிழ் எழுத்தாளர் என்று கூகுளில் தேடுவார். தமிழ் எழுத்தாளர் என்று கூகுளில் தேடினால் அவர் தேடும் எழுத்தாளர் கிடைத்துவிடுவாரா ? அதுவும் 1960களின் காலகட்டத்தை சேர்ந்த எழுத்தாளர். 

துவக்க காட்சியில் குழந்தைப் பருவ நண்பர்களான வெற்றியும், ஸ்மிருதி வெங்கட்டும் சந்தித்ததும் காதலிக்க துவங்கி விடுகிறார்கள். விடுதியில் நடைபெறும் தற்கொலைகள் குறித்து விசாரணை நடத்த அடுத்தடுத்து உண்மைகள் தெரிய வருகிறது. இப்படி எந்த சிக்கலும் இல்லாததால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. பெரும்பாலான திருப்பங்களை முன் கூட்டியே கணித்து விடக் கூடியதாக இருக்கிறது. 

இறுதிக் காட்சியில் காட்டப்படும் திருப்பம் நன்றாக இருந்தாலும் அது மட்டுமே ஒரு படத்தைப் பார்க்க காரணியாக இருக்காது.  சுவாரசியமற்ற திரைக்கதையால் திக்கு தெரியாத வனத்துக்குள் நம்மை கூட்டி செல்கிறது இந்தப் படம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com