அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' - தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்குமா? திரை விமர்சனம்
By கார்த்திகேயன் எஸ் | Published On : 17th December 2021 04:21 PM | Last Updated : 18th December 2021 11:07 AM | அ+அ அ- |

செம்மரக் கடத்தல் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு காட்ஃபாதர் வகைக் கதைதான் இந்த புஷ்பா. ஆனால் முழுக்க முழுக்க கமர்ஷியல் முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.
மரம் வெட்டும் தொழிலாளியாக செம்மரக் கடத்தல் கூட்டத்தில் சேரும் புஷ்பா என்கிற கதாபாத்திரம், எப்படி செம்மரக் கடத்தல் கூட்டத்துக்கே தலைவராக மாறுகிறான் என்பதுதான் புஷ்பா முதல் பாகத்தின் கதை.
புஷ்பா என்கிற வேடத்தில் அல்லு அர்ஜுன். சுருட்டை முடி, வலது தோள்பட்டையைத் தூக்கிக்கொண்டு நடப்பது என அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அவர் நன்றாக நடனமாடக் கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஸ்ரீவள்ளி பாட்டில் ஒரு காலைத் தேய்த்துக்கொண்டே நடனமாடுவது என ஒரு அந்த வேடத்துக்கு உண்டானதை மட்டுமே செய்திருக்கிறார். ஆனால், அது முதல் சிறிது நேரம்தான். பின்னர் வழக்கமான தெலுங்குப் பட நாயகன் பாணியில் எல்லோரையும் அடித்து பறக்க விடுகிறார்.
இந்தப் படத்தில் ஸ்ரீவள்ளி வேடத்தில் ராஷ்மிகா நடித்திருக்கிறார். இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் பேசிய அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவுக்கு வழக்கமான நாயகி வேடம் கிடையாது. நல்ல கதாபாத்திரம் இருக்கிறது என்று சொன்னார்.
ஆனால் ராஷ்மிகாவுக்குப் படத்தில் பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லா காட்சியிலும் அவரைக் கவர்ச்சிகரமாக காட்டியிருக்கிறார்கள். நாயகன் அல்லு அர்ஜுன் அவரை கட்டாயப்படுத்தி பேச வைக்கிறார், துன்புறுத்துகிறார். ஆனால் அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் வில்லன் அவரை துன்புறுத்தும்போதும் கோபப்படுகிறார். இப்படி ராஷ்மிகாவின் வேடம் மிக மோசமாக எழுதப்பட்டிருக்கிறது. அவருக்கு நாயகனை ஏன் பிடிக்கிறது என்பதுகூட நம்பும்படியாக இல்லை.
முதல் பாதி முழுக்க காவல்துறையிடம் இருந்து தப்பித்து அல்லு அர்ஜுன் எப்படி செம்மரம் கடத்துகிறார் என்பது காட்டப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கதாநாயக பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சிக்கிறார்களே தவிர, அந்தக் காட்சிகளில் புத்திசாலித்தனம் என்பது துளியும் இல்லை. அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு மட்டும் அந்தக் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கலாம்.
இதையும் படிக்க | ஆண்-பெண் உறவு குறித்து தவறான புரிதலை ஏற்படுத்துகிறதா? 'முருங்கைகாய் சிப்ஸ்' : திரை விமர்சனம்
கேஜிஎஃப் படத்தின் பாதிப்பில் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. சில பிரச்னைகள் இருந்தாலும் முதல் பாதி பெரிதாக சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் படம் நம் பொறுமையை அதிகமாக சோதிக்கிறது. ஏனெனில் இந்தப் படத்தின் வில்லன்களின் வேடம் வலுவானதாக இல்லாததே காரணம். வில்லன்கள் எல்லோரையும் மிக எளிமையாக சமாளித்து அல்லு அர்ஜுன் செம்மரம் கடத்தும் கூட்டத்தின் தலைவராகி விடுகிறார். அவர் தலைவராவது தான் கதை என்பதால் அது நடந்த பிறகும் படத்தின் காட்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன.
படம் முடிந்துவிட்டதாக நினைக்கும்போது ஃபகத் ஃபாசிலை அறிமுகப்படுத்துகிறார்கள். அவர் மிக பலம் வாய்ந்த வில்லனாக காட்டப்படுகிறார். அதோடு படம் முடிந்துவிட்டாலாவது, இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அவரையும் அல்லு அர்ஜுன் எளிதில் வெற்றிபெற்றுவிடுகிறார். டிரெய்லரில் ஃபகத் ஃபாசிலை பார்த்துவிட்டு, அவருக்காகப் படம் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
படத்துக்கு ஒளிப்பதிவும் இசையும் பக்கபலமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஸ்ரீவள்ளி பாடல் முதல் சமீபத்தில் வெளியான ஊ சொல்றியா பாடல் வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. பின்னணி இசையிலும் தேவி ஸ்ரீபிரசாத் தனது பணியை சிறப்பாக செய்திருந்தார்.
ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார் சமந்தா. அந்தப் பாடல் ஆண்களுக்கு எதிராக பேசுவதாக ஒருபுறமும், ஆண்களின் கண்ணோட்டத்தை சரியாக பேசுவதாக மற்றொருபுறமும் கருத்துகள் பரவி வருகின்றன. ஆனால் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதத்தை பார்க்கும்போது இது மற்றுமொறு கவர்ச்சிப் பாடல் என்ற அளவில் மட்டுமே கவர்கிறது.
மொத்தத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு இந்தப் படம் ரசிக்கும்படியாக இருக்கும். மற்ற மொழி ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரிதாக ஈர்க்குமா என்பது சந்தேகமே.