த்ரிஷ்யம் 2: கேள்விகளும் விடைகளும்!

பல வருடங்கள் கழித்து ஒரு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைக்கும்போது...
த்ரிஷ்யம் 2: கேள்விகளும் விடைகளும்!

த்ரிஷ்யம் படம் பாகுபலி போல இந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமாகிவிட்டது. மலையாளத்தில் முதலில் எடுக்கப்பட்ட த்ரிஷ்யம் படம் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், சீனம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழைத் தவிர இதர மொழிகளில் வெளியான ரீமேக்கை வேறு இயக்குநர்கள் இயக்கினார்கள். 

இதனால் த்ரிஷயம் 2 படம் ஓடிடியில் வெளியாகிறது என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பை ஜீத்து ஜோசப் பூர்த்தி செய்து மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சமூகவலைத்தளம் முழுக்க த்ரிஷ்யம் 2 விமர்சனங்கள் தான். 

கொலைச் சம்பவத்தை அழகாக மறைத்த ஜார்ஜ்குட்டியின் குடும்பம் அதன்பிறகு எப்படியெல்லாம் மனத்தளவில் பாதிக்கப்பட்டு, குற்ற உணர்ச்சியுடன் வாழ்ந்து, மேலும் பல சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதை 2-ம் பாகத்தில் விரிவாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் ஜீத்து ஜோசப்.

ஆனால், முதல் பாகத்தில் இருந்த கதை வடிவம் இதில் அமையவில்லை. இது, முதல் பாகக் கதையின் தொடர்ச்சி என்பதால் வழக்கமான கதை வடிவம் இதற்குப் பொருந்தவில்லை. இதனாலேயே இதன் திரைக்கதை, இயக்குநருக்கு மிகவும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் முதல் காட்சியிலிருந்து மோகன்லால் எப்படி மாட்டப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இருந்தும் முதல் பாதி கதையை நிதானமாகவே கொண்டு சென்று கடைசியில் தடதடவென பயணிக்க வைக்கிறார் இயக்குநர். படத்தின் பின்பாதியில் நடைபெறும் பல சம்பவங்களுக்கு முதல் பாதிச் சம்பவங்களே காரணமாக அமைகின்றன. அதனால் படம் கதைக்குள் தாமதமாகச் செல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.

முதல் பாகத்தில் தர்க்கப் பிழைகள் ஏற்படாதவாறு ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் மெனக்கெட்டிருந்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப். இந்தமுறை அந்தளவு சிரத்தையுடன் காட்சிகளை அமைத்தது போலத் தெரியவில்லை. கடைசி அரை மணி நேரத்தில் ஏற்படும் தடாலடித் திருப்பங்கள் படத்தை ரசிக்க வைத்து ரசிகர்களிடம் பல நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தின் பல காட்சிகளில் உள்ள அடிப்படைத் தவறுகள், தர்க்கப் பிழைகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. அவற்றைப் பார்க்கலாம். 

*

காவல் நிலையத்தில் சடலத்தைப் புதைத்துவிட்டு மோகன்லால் திரும்ப வருகிறார். கொலையாளி ஒருவர் காவலர்களிடமிருந்து தப்பித்து ஓடும்போது காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும் மோகன்லாலைப் பார்த்து விடுகிறார். இது யதார்த்தமான நிகழ்வாக இல்லை. ஏனெனில் முதல் பாகத்தில் இந்தக் காட்சி இல்லை. மேலும் அந்தக் கொலையாளி தொடர்பான காட்சிகளும் கதைக்கு வெளியே இருப்பதால் அந்நியமாக உள்ளன. த்ரிஷ்யம் 2 படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட காட்சி என்றால் இதுதான். ஜீத்து ஜோசப் இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி யோசித்திருக்கலாம். 

கொலை நடந்த அதே வீட்டில் ஏன் மோகன்லால் தொடர்ந்து வசிக்க வேண்டும் என்கிற கேள்வியில் நியாயம் இருந்தாலும் அந்த வீட்டில் அவர் ஏன் தொடர்ந்து வசிக்கக்கூடாது என்று இயக்குநர் கேட்கலாம். சரி. ஆனால் கொலை நடந்த இடத்தை அப்படியே விட்டு வைத்திருப்பது ஏன்? அதில் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் தானே மூத்த மகளுக்கும் அந்த இடத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் பயத்தைப் போக்க முடியும்? மேலும் அதே இடத்தில் தனது தோழனுடன் 2-வது மகள் சம்பவத்தை விவரிக்கும்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காக அப்படியொரு ஏற்பாடா?

2-வது மகளின் தோழன் எடுக்கும் குறும்படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று பார்த்தால் கடைசியில் அதற்குக் கதையில் வேலையே இல்லாமல் போய்விட்டது. அந்த வீணான காட்சிகளால் இயக்குநர் சொல்ல வருவது என்ன?

ஒரு கொலையை மறைக்க மோகன்லால் படாதபாடு படும்போது மீனாவும் 2-வது மகளும் கொலைச் சம்பவம் பற்றி சர்வசாதாரணமாக அடுத்தவர்களிடம் பேசுவது ஏன்? அதிலும் இரண்டு வருடமே பழக்கமான அடுத்த வீட்டுப் பெண்ணிடம் மீனா வருணின் கொலைச் சம்பவத்தை விவரிப்பது செயற்கையாக உள்ளது. தான் வெளியூரில் இருக்கும்போது இரவில் தன் வீட்டில் வந்து படுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் என்னென்ன பேசுகிறாய் என மீனாவிடம் மோகன்லால் ஏன் விசாரிக்கவில்லை?

மோகன்லால், கொலைச்சம்பவம் குறித்து ஒரு நாவல் எழுதுவதும் அதனால் அவர் கடைசிக்காட்சியில் வழக்கிலிருந்து தப்பிப்பதாகவும் சொல்லப்படுகிறது. கொலைச்சம்பவம் பற்றி மோகன்லால் நாவல் ழுதினால் மக்களுக்கு அவர் மீது மேலும் சந்தேகம் வராதா? அந்த ஊரில் ஒருவர் அதைப் படித்தாலே போதுமே, அதைப் பற்றி பலரும் விவாதிப்பார்களே! மேலும் அந்த நாவலைக் காவல்துறை அதிகாரிகள் படித்துவிட்டு அதேபோல சம்பவங்களை ஜோடிக்கிறார்கள் என ஒரு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் சொல்வது எடுபடுமா?

மோகன்லால் படம் எடுக்க முயல்வது நிஜமா அல்லது அதுவும் அவருடைய திட்டத்தின் ஒரு பகுதியா? எலும்புக்கூடுகளை அரசாங்கம் எப்படிக் கையாளும் என்று தெரிவதற்காகத்தான் கதாசிரியரிடம் இரண்டு வருடங்களாகப் பேசிக்கொண்டிருந்தாரா? இந்தத் தகவலை அவர் வேறு வழியிலும் சுலபமாக எடுத்திருக்கலாமே?

இடுகாட்டிலும் பிரேதப் பரிசோதனை செய்யும் இடத்திலும் பணியாற்றும் ஊழியர்களிடம் நட்பு பாராட்டி அதன்மூலமாக தனது திட்டத்தை மோகன்லால் நிறைவேற்றுகிறார். இருவருக்கும் மதுபானங்கள் வாங்கித் தந்து நட்பைப் பலப்படுத்துவதாகக் காண்பிக்கப்படுகிறது. இதுவே கற்பனை வறட்சி தான். மேலும் வருணின் எலும்புக்கூடுகளைத் தடயவியல் பரிசோதனை செய்யும்போது குறிப்பிட்ட நபர் தான் அதே நாளில் பணியாற்றுவார் எனத் தெரிந்துகொண்டு அவரிடம் நட்பு கொண்டாரா மோகன்லால்? இதெல்லாம் எவ்வளவு செயற்கைத்தனமானது! மேலும் பல வருடங்கள் கழித்து ஒரு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைக்கும்போது அதைக் காவல்துறை இவ்வளவு அலட்சியத்துடனா கையாளும்? நிஜத்தில் தடயவியல் பரிசோதனையின்போது இதை விடவும் மோசமாகக் கையாள்கிறார்கள் என இயக்குநர் பேட்டியளித்துள்ளார். அந்தத் தகவல் மக்களுக்குத் தெரியாதபோது அந்தக் காட்சியின் நம்பகத்தன்மையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கதாசிரியர் கடைசிக் காட்சியில் மோகன்லாலைக் காட்டிக் கொடுக்கிறார். இதுவே சரியாகப் படவில்லை. அதுவரை கதாசிரியரை மோகன்லால் மிகவும் நன்றாகவே நடத்துகிறார். மேலும் இந்த வழக்கு பற்றி தெரிந்த யாரும் மோகன்லால் மீது இரக்கப்படுவதுதான் இயல்பாக நடக்கும். கதாசிரியர் மோகன்லாலை நன்கு அறிந்தவர். இதனால் குறைந்தபட்சம் மோகன்லாலிடம் இதுபற்றி விசாரிக்க மாட்டாரா? வெளிவராத படத்தின் கதைக்காகப் பணமும் வாங்கியிருக்கிறார். அதனால் சிறிதளவு நன்றிக்கடன் அவரிடம் இருக்காதா? அதைவிட்டு விட்டு நேராகக் காவல்துறையிடம் வந்து மோகன்லாலின் திட்டங்களை வரிசையாகச் சொல்லி அவரை மாட்டிவிடுகிறார். காவல்துறையும் மாட்டிவிடும் கொலையாளியும் மோகன்லாலுக்கு எதிராக இருப்பது யதார்த்தம்.  அந்த யதார்த்தம் கதாசிரியரின் செயலில் இல்லை.

மீனாவின் தாய் வெளிநாட்டுக்குச் செல்வதுபோல ஒரு காட்சி உள்ளது. இதன் மூலமாக இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்? மீனா தனிமையினால் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் இன்னும் நெருக்கமாகிறார் என்றா? அவர் ஊருக்குச் செல்லும்முன்பு நிலைமை அப்படித்தானே இருந்தது?

ஆறு வருடங்கள் கழித்து, ஊர் மக்களிடம் ஜார்ஜ்குட்டியைப் பற்றி காவல்துறை விசாரிப்பது உண்மையிலேயே கடுப்பை ஏற்படுத்துகிறது. இதெல்லாம் வழக்கின் ஆரம்பத்தில் செய்திருக்க வேண்டிய வேலைகள் அல்லவா! எந்தப் புதிய ஆதாரமும் இல்லாமல் ஜார்ஜ்குட்டி, ஆறு வருடங்களுக்கு முன்பு காலையில் எத்தனை மணிக்கு வீட்டுக்குத் திரும்பினார் என்றெல்லாம் இப்போது வந்து விசாரிப்பதில் நியாயமே இல்லையே!

மோகன்லாலைச் சிக்கவைக்க அவர் வீட்டுக்கு அருகிலேயே மாறுவேடத்தில் கணவன் மனைவியாக இரு காவலர்கள் வசிக்கிறார்கள். மீனாவுடன் பேச்சுக்கொடுத்து அவருக்கு நெருக்கமான தோழியாகி விஷயங்களைக் கறக்கிறார் பெண் காவலர். மேலும் மோகன்லாலின் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்து அதன்மூலம் மோகன்லாலும் மீனாவும் பேசுவதைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். படத்தின் கடைசிப்பகுதியில் இந்த உண்மை மோகன்லாலுக்கும் மீனாவுக்கும் தெரிய வருகிறது. இதையடுத்து என்ன செய்வார்கள்? அந்த ஒட்டுக்கேட்கும் கருவியைக் கண்டுபிடிக்க முயல்வார்கள் அல்லது அதுவரை வீட்டில் கொலை வழக்கு தொடர்பாக எதுவும் பேசாமல் இருப்பார்கள். ஆனால் அதற்குப் பிறகும் வழக்கம் போல மோகன்லாலும் மீனாவும் அதே வீட்டில் வழக்கு பற்றி பேசுகிறார்கள்! அதை மீண்டும் இரு காவலர்களும் அடுத்த வீட்டிலிருந்து ஒட்டுக் கேட்கிறார்கள். இந்தக் கதை அமைப்பில் ஏன் இவ்வளவு அலட்சியம்?

மோகன்லாலின் திரையரங்கத்தில் (அல்லது கேபிள் அலுவலகமா?) அவருடைய இருக்கையின் தரைக்குக் கீழே எலும்புக்கூடுகளைக் கொண்ட பையை மறைத்து வைத்திருப்பார் மோகன் லால். காவல் நிலையத்தில் வருணின் எலும்புக்கூடுகளைக் கண்டெடுத்த பிறகு தனது இருக்கையின் கீழே மறைத்து வைக்கப்பட்ட பையை எடுத்துக்கொண்டு ஓடுவார். இந்த இடத்தில் ஒரு கேள்வி - ஊர் பேர் தெரியாத ஒருவரின் எலும்புக்கூடுகளை தனது இருக்கையின் கீழே ஒளித்து வைத்து அவரால் அந்த இடத்தில் தைரியமாகப் பணியாற்ற முடிந்தது? அவரென்ன தொழில்முறை கொலையாளியா, இதற்கெல்லாம் பயப்படாமல் இருப்பதற்கு?

மேலும் கடைசிக் காட்சியில் தான் எரித்த வருணின் எலும்புகளில் இருந்து கொஞ்சம் எடுத்து வைத்து அதை அவருடைய பெற்றோருக்கு பார்சலாக அனுப்புவார் மோகன்லால். இதிலிருந்து கூட ஏதாவது ஆதாரம் கிடைக்க வாய்ப்புள்ளதே! மேலும் ஆஷா சரத், மோகன்லாலைப் பழிக்குப் பழி வாங்கக் காத்திருக்கும்போது இது தேவையில்லாத வேலை தானே?

பாபநாசம் படத்தில் கலாபவன் மணி, இந்த பர்ஃபெக்‌ஷன் தான் இடிக்குது என்பார். அதுபோல கதை அமைப்பில் துல்லியத்தை எதிர்பார்த்து தேவையில்லாத மற்றும் நம்பகத்தன்மை இல்லாத காட்சிகளையும் இணைத்துள்ளார் ஜீத்து ஜோசப். இதனால் முதல் பாகத்தில் வெளிப்பட்ட புத்திசாலித்தனம் இதில் அவ்வளவாக இல்லை. 

*

மோகன் லால் தனது நடிப்பில் ஜார்ஜ் குட்டிக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார். படம் முழுக்க அழுத்தமான நபராக அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார். கதையும் திரைக்கதையும் த்ரிஷ்யம் படத்துக்கு கைகொடுத்தாலும் படத்தை அதிகமாகத் தாங்குவது மோகன்லாலின் நடிப்புதான். படத்தில் ஐ.ஜி.யாக வரும் முரளி கோபி, மனத்தில் பதியும் விதத்தில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழில் ரீமேக் செய்தால் அவரே அக்கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும். மீனா, ஆஷா சரத்துக்கு முதல் பாதியில் இருந்த அளவுக்கு வலுவான காட்சிகள் இதில் அமையவில்லை. 

தெரியாமல் செய்த கொலையாலும் அதை மறைப்பதாலும் மோகன்லால் குடும்பம் படும் அவஸ்தை, காவல்துறையின் துப்பறியும் சவால்கள், வழக்கில் ஜெயித்தாலும் குற்ற உணர்ச்சியுடன்  வாழ்க்கையை எதிர்கொள்ளும் மோகன்லால் கதாபாத்திரம் என படத்தில் துப்பறியும் காட்சிகளுடன் கதாபாத்திரங்களின் மனஓட்டங்களும் மன வலிகளும் தவறாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அம்சங்கள்தான் படத்தின் மீதான நமது நெருக்கத்தை அதிகப்படுத்துகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com