மாலிக் - அவலை நினைத்து இடித்த உரல்? | திரை விமரிசனம்

வெற்றிகரமான ஒரு சட்டகத்தை - டெம்ப்ளேட்டை எடுத்துக்கொண்டு படம் எடுப்பது எவ்வளவு எளிதோ அதே அளவுக்கு ஆபத்தானதும்கூட.
மாலிக் - அவலை நினைத்து இடித்த உரல்? | திரை விமரிசனம்

1972-ல் மார்லன் பிராண்டோ நடித்து வெளியான தி காட் பாதர், 1952-ல் சார்லி சாப்ளின் நடித்து வெளியான லைம்லைட் ஆகிய படங்களைப் பிரதி செய்து அல்லது அவற்றிலிருந்து சிலபல பகுதிகளை உருவி, உலகில் இதுவரை நூறு, நூறு படங்களாவது வந்திருக்கும், இனியும் வரும்.

ஆனால், இந்தக் கதைகளை ஒவ்வொருவரும்  எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில்தான் அந்தந்தப் படத்தின் வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகின்றன. வெற்றிகரமான ஒரு சட்டகத்தை - டெம்ப்ளேட்டை எடுத்துக்கொண்டு படம் எடுப்பது எவ்வளவு எளிதோ அதே அளவுக்கு ஆபத்தானதும்கூட.

தி காட் பாதர், நாயகன் வழியில், அப்படியெல்லாம் சொல்ல வேண்டிய  அவசியமில்லை என்றாலும்கூட, ஒரு மலையாளப் படம் - மாலிக். கதையின் நாயகன் - அகமது அலி சுலைமான் மாலிக் (ஃபகத் ஃபாசில்).

வழக்கமான டெம்ப்ளேட் என்பதாலேயே  பெரிய எதிர்பார்ப்புகள்  இல்லை என்றாலும் என்னென்ன புதிதாகச் செய்திருக்கிறார்கள் என்கிற பார்வையாளனின் ஆர்வம் தூண்டிவிடப்படுகிறது - நெடியதொரு தொடக்கக் காட்சியில் -  மாலிக் ஹஜ் செல்லப் புறப்படுகிறார், விருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது -  ஆனால், சிக்கல் என்னவென்றால் அப்போதே நிச்சயம் மாலிக்கைக் கொல்லப் போகிறார்கள் அல்லது கைது செய்யப் போகிறார்கள் என்றும் பளிச்சென தோன்றிவிடுவதே.

ரமடபள்ளி. ஒரு கடலோரக் கிராமம், கடல் சார்ந்த முஸ்லிம், கிறிஸ்துவ சமுதாய மக்கள். சிறுசிறு குற்றச் செயல்களில், கடத்தலில் உதவிகளைச் செய்து முன்னேறுகிறான் மாலிக்.

அவனுடைய கடத்தல் பொருள் கிடங்கிற்குத் தீவைத்து அங்கிருந்த சிறார்களின் மரணத்துக்குக் காரணமான முன்னாள் முதலாளி சந்திரனை மன்னிக்காத மாலிக், அடித்தே கொன்றுவிடுவதுடன் தானே அதைச் செய்ததாகவும்  அறிவிக்கிறான்.

காவல்துறையின் பிடியில் சிக்காமலிருக்க மினிகாய் பயணம், தான் விரும்பிய - கிறிஸ்துவ நண்பனின் தங்கையுடன் திருமணம், குழந்தைகள், சரண், வெளிவந்து தாதாவாக.

இறுதி வரையிலும் பெரிய பெரிய பிளாஷ்பேக்-களில் வழியே மாலிக்கின் கதை நகர்த்திச் செல்லப்படுகிறது.

கட்டிய வீட்டுக்கு ஆயிரம் குறை சொல்லலாம் என்பார்கள், சொல்ல வேண்டியிருக்கிறதே.

கடலோரத்தில் சாலை அமைக்க அரசும் அரசியல்வாதிகளும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தடையாக - மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார் மாலிக். அடடே மறந்துபோச்சே என்பதுபோல அவ்வப்போது துண்டுதுண்டாக வரும்  இதுதொடர்பான காட்சிகளை வலுப்படுத்தியிருக்கலாம்.

திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையிலான பிணக்கிற்கான காரணங்கள் இன்னும் வலுவானவையாகக் காட்டப்பட்டிருக்கலாம்.

படக்குழுவினர் மறுத்துவந்த போதிலும், திருவனந்தபுரத்திலுள்ள  பீமாபள்ளியில் 2009-ல் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம்தான் முக்கியமான முடிச்சாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் - இதைப் பற்றி யாருமே கவலைப்படாததால் இரு சமுதாயங்கள் இடையே பரஸ்பர வெறுப்பு கொதிக்கிறது, தங்களுடைய விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகளும் அரசு அமைப்புகளும் வளர்க்கின்றன.

இணக்கமான நபராகச் சித்திரிக்கப்படும் மாலிக், தன் குழந்தைகளை மட்டும் முஸ்லிம்களாக வளர்க்க வேண்டும் என்று கிறிஸ்துவ மனைவியிடம் கேட்டுக்கொள்கிறார். இதன் தொடர்ச்சியாக மோதல் வெடிக்கிறது என்றாலும் இந்த வேண்டுகோளுக்கான நியாயம் படத்தில் கிடைக்கவில்லை.

ஃபகத் ஃபாசில் நன்றாகவே நடித்திருந்தபோதிலும் அவரின் உடலும் அதன் மொழியும் பொருந்திவரவில்லை. சறுக்கிக்கொண்டே  இருக்கின்றன. மிகச் சிறப்பாக அவர் நடித்த பல படங்கள் நினைவுக்கு வந்துபோவதைத் தவிர்க்க முடியவில்லை.  ஒருவேளை நம்முடைய எதிர்பார்ப்புதான் தவறாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

திரைப்படத்தின் முடிவும் முடிவுக்குக் காரணமானவர் பற்றியும்கூட எளிதில்  ஊகிக்கக் கூடியதாகவே இருக்கிறது.

அரவணைப்பதாக இருக்கிறது பள்ளிவாசலை நோக்கியுள்ள இயேசுவின் சொரூபம் எனப் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்துவ நண்பன், அவன் தங்கையை மணந்துகொள்வதன் மூலம் மைத்துனனுமானவன் எப்படி மாலிக்கின் எதிரியாகிறான் என்பதும் தெளிவாக இல்லை.

மாலிக்கின் மனைவி ரோசலினாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன், தி கிரேட் இந்தியன் கிச்சன் பட ஹீரோயின், இளம்வயதுக் கால நடிப்பில் சிறப்பாகச் செய்திருக்கிறார், குறிப்பாக, திருமணத்தின்போது. மாலிக்கின் அம்மாவாக வரும் ஜலஜாவும் நன்றாக செய்திருக்கிறார்.

நீண்ட படம், நிறைய நடிகர்கள், அவரவர் பங்கைச் சிறப்பாக ஆற்றியிருந்தாலும் ஏனோ கோர்வையாக ஒட்டாமல் துண்டுதுண்டாக நிற்கின்றன. டான் படங்கள் என்றாலே நீளமாக இருக்க வேண்டுமா, என்ன? நீளத்தைக் குறைத்து இன்னும் விறுவிறுப்பாக்கியிருக்கலாம்.

எனினும் தொழில்நுட்ப ரீதியில் படம் பெரும் கைத்தட்டல்களைச் சம்பாதித்துள்ளது. கதாநாயகன் அறிமுகத்தில் பார்வையாளர்களை அவரது வீட்டிற்கே அழைத்துச் செல்லும் வகையில் ஒளிப்பதிவு செய்திருந்த ஒளிப்பதிவாளர் படத்தின் தூணாகத் தெரிகிறார்.

மற்றொரு தூணாக சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை அமைந்துள்ளது. டான் படம் என்பதற்காக கிடார் போன்ற இசைக் கருவிகளைப் பயன்படுத்தி அதிரடிக்காமல் மிகவும் மென்மையான இசையிலேயே 'மாஸ்' உணர்வைக் கடத்தியிருக்கிறார். மலையாளத்தில் இது பெரிய பட்ஜெட் படம் என்கிறார்கள்.

கலவரக் கும்பலால் தாக்கப்பட்டதில் இயலாமல்போய் படுத்தே கிடக்கும் உதவி ஆட்சியர் அன்வர் (ஜோஜு ஜார்ஜ், ஜகமே தந்திரத்தில் நடித்தவரேதான்) கடைசிக் காட்சியில் கலவரத்துக்குப் பின்னணியில் இருந்தது அரசு அமைப்புதான் என்பதை வெளிப்படுத்துகிறார்.

எப்போதுமே கலவரங்களின்போது மோதிக் கொள்பவர்களைவிடவும் அவற்றை ப் பின்னணியில் இயக்குபவர்கள்தான் பலனடைகின்றனர். அந்த அவர்கள் அரசாக இருக்கலாம், அதிகாரிகளாக இருக்கலாம், சாதித் தலைவர்களாக, மதத் தலைவர்களாக இருக்கலாம். நிச்சயமாக மக்கள் அல்ல, பாதிப்புகள் மட்டும்தான் அவர்களுக்கானது. இந்தப் படத்தின் சிறப்பான செய்தியும்கூட இதுதான்.

அவலை நினைத்து இடித்த உரல்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com