தனுஷின் ஜகமே தந்திரம் விமர்சனம்: அன்லிமிடெட் ஹீரோயிசம்

இறுதிச் சண்டைக் காட்சியில் நாயகன் வேட்டியுடன் சண்டையிடுவது நன்றாக உள்ளது...
தனுஷின் ஜகமே தந்திரம் விமர்சனம்: அன்லிமிடெட் ஹீரோயிசம்

மதுரையில் பரோட்டா கடையோடு ரெளடித்தனம் செய்து கொண்டிருப்பவர் சுருளி. இங்கிலாந்து எங்களுக்கே, மற்றவர்கள் வெளியேறுங்கள் என்ற வெள்ளை நிறப்பற்றுக் கொண்ட கேங்ஸ்டரான பீட்டருக்கு தலைவலியாக இருக்கும், தமிழ் கேங்ஸ்டரான சிவதாஸை சமாளிக்க சுருளியைப் பேரம் பேசி கூட்டிச் செல்கிறது பீட்டர் குரூப். அங்கு சென்ற சுருளி, சிவதாஸூக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், அவரது கொலைக்கும் காரணமாகிறார். பின்னர் சிவதாஸின் பின்னணியைப் புரிந்துகொண்டு அவரது லட்சியங்களுக்காக பீட்டருடன் மோதி அவரை வென்றாரா இல்லையா என்பதே ஜகமே தந்திரம் திரைப்படத்தின் கதை.  

இந்த திரைப்படத்தில் சுருளியாக தனுஷ், பீட்டராக ஜேம்ஸ் காஸ்மோ, சிவதாஸாக ஜோஜூ ஜார்ஜ், சிவதாஸூடன் வரும் கலையரசன், தனுஷூடன் வரும் மொழிபெயர்ப்பாளர் கதாபாத்திரம், நாயகியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தனுஷின் அம்மாவாக வடிவுக்கரசி எனப் படம் முழுக்க நிறையவே தெரிந்த முகங்கள்.

அசுரன், கர்ணன் என எளிய மக்களின் கதைகளில் நடித்து வந்த தனுஷை ஒருபடி மேலே கூட்டிச் சென்று ஏதிலிய மக்களின் வலிகளைப் பேசும் படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரும் அவர்களது கதாபாத்திரங்களைக் கச்சிதமாக செய்துள்ளனர். ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தனுஷின் நண்பர்கள் என அனைவரும் கனக்கச்சிதமான பாத்திரத் தேர்வுகள். திரைப்படத்தின் ஒளிப்பதிவால் அழகாக இருக்கும் இங்கிலாந்து மேலும் அழகாகிறது. பின்னணி இசையும், பாடல்களும் படத்துடன் பொருந்துகின்றன. சிவசாமி, கர்ணனாக வந்த தனுஷ் சுருளியாக விளையாடியிருக்கிறார். அதிலும் நாயகியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது வரும் துப்பாக்கிச் சண்டையில், தனுஷ் நாயகியைச் சமாதானப்படுத்தி விட்டு துப்பாக்கி எடுக்கும் காட்சி, கிளைமேக்சில் கண்ணாடி போடும் காட்சி, கேங்ஸ்டர் படத்தின் இறுதிச் சண்டைக் காட்சியில் நாயகன் வேட்டியுடன் சண்டையிடுவது நன்றாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இறுதிக் காட்சியில் இனவெறி கொண்ட பீட்டருக்கு கருப்பினத்தவர் ஒருவரிடம் கொடுத்து தண்ணீர் கொடுத்த காட்சி கார்த்திக் சுப்புராஜ் டச்.

நச் வசனங்கள்: பொதுவாக கேங்ஸ்டர் படங்களில் ஒரு வில்லன், அவனை எதிர்க்கும் ஹீரோ இவர்களுக்குள் நடக்கும் சண்டை கதைக்களமாக இருக்கும். ஆனால் இந்தப் படம் அதிலிருந்து விலகி, இலங்கைத் தமிழர் பிரச்னை, இங்கிலாந்தில் வாழும் ஏதிலியர்களின் பிரச்னை எனப் பலதரப்பட்ட பிரச்னைகளை பேசுகிறது. துரோகம் நம் இனத்தின் சாபம், தலைவன் வருவான், போரைத் தொடங்கதான் முடியும், அதை முடிக்க முடியாது, பணத்தைப் பற்றியும், ஜாதி பற்றியும் தனுஷ் பேசும் வசனங்கள், தப்பு பண்ணிட்டேன், அதுல சின்னது பெரிசுன்னு அளவெல்லாம் கிடையாது உள்ளிட்ட வசனங்கள் நச்சென உள்ளன.  குறிப்பாக பீட்டருடன் பேரம் பேசும் போது தனுஷ் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளின் போர் அரசியல் பற்றி பேசுவது வேற லெவல்.

இந்தத் திரைப்படத்தில் போர் உள்ளிட்ட காரணங்களால் வெளிநாடுகளில் தஞ்சம் தேடிச் செல்லும் ஏதிலியர்களின் வாழ்வியல் மற்றும் வலிகள்,  உணவில் பயன்படுத்தப்படும் உப்பின் அளவுக்கு மட்டுமே பேசப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். சிரியாவில் நடந்த போரால், கடலின் கரையை முத்தமிடப்படி கிடந்த ஒரு குழந்தையின் புகைப்படம் இந்த உலகையே உலுக்கியது. இத்தனை வலியும் வேதனையும், அரசியலும், வரலாறும் நிறைந்த ஏதிலியர்களின் வாழக்கையை இன்னும் ஆழமாக பேசும் திரைப்படங்கள் வரவேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com